Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 3 ஜனவரி, 2020

தகவல் அறிவியல் – 4





கவல் அறிவியல் துறையில் வேலை வாய்ப்புகள் அதிகமாய் இருக்கிறது என்பதையும்,  கணிதம், பட்டப்படிப்பு, மென்பொருள் போன்றவற்றைப் படித்தவர்களுக்கு அங்கே வேலை வாய்ப்புகளும் அதிகமாய் இருக்கின்றன என்பதையும் கடந்த வாரம் அலசினோம். அப்படி இந்த துறையில் எப்படிப்பட்ட வேலைகள் இருக்கின்றன என்பதைப் பற்றிய ஒரு அறிமுகத்தைப் பார்போம்.
தகவல் அறிவியல் துறையில் பல்வேறு வேலைகள் இருக்கின்றன. நிறுவனத்தின் தேவைக்கும் தன்மைக்கும் ஏற்ப அவர்கள் அவற்றுக்கு பெயரிட்டு அழைப்பதும் உண்டு. உதாரணமாக சில நிறுவனங்கள் தகவல் விஞ்ஞானத்தை, மெஷின் லேர்னிங் என்றும் அழைப்பதுண்டு. பொதுவாக எப்படிப்பட்ட வேலைகள் இந்த துறையில் உண்டு என்பதை பார்ப்போம்.
1.      மேஜேஜ்மென்ட் இன்ஃபர்மேஷன் சிஸ்டம்ஸ் ரிப்போர்டிங் எக்சிகியூட்டிவ் ( MIS Reporting Executive ) என ஒரு பணி இருக்கிறது. தகவல் அறிவியலைப் பொறுத்தவரை இது ஒரு மிக முக்கியமான பணி. வணிகத் தேவை என்ன என்பதை சரியாகப் புரிவதும், தொழில்நுட்பத்தில் அதை எப்படி புகுத்துவது என்பதையும் இவர்கள் தான் முடிவு செய்வார்கள். அதாவது இவர்கள் கொடுக்கின்ற அறிக்கைகளின் அடிப்படையில் தான் பெரும்பாலான பிசினஸ் முடிவுகள் எடுக்கப்படும்.
இவர்களுடைய பணி, நிறுவனத்துக்குத் தேவையான அறிக்கைகளை பல்வேறு வகைகளில் உருவாக்குவது. நூற்றுக்கணக்கான பக்கங்களில் எழுதி வைக்கவேண்டிய தகவல்களை ஒரு சின்ன படத்தின் மூலம் காட்டி விடும் வித்தை இவர்களின் சிந்தனைக்கு உரியது.
உதாரணமாக, விற்பனைத் தகவல்கள் என்னென்ன ? என்னென்ன பொருட்கள் கைவசம் இருக்கின்றன ? எப்படிப்பட்ட விமர்சனங்கள் வந்திருக்கின்றன ? போன்ற  பல்வேறு தகவல்களை இவர்கள் அலசுவார்கள். அதன் அடிப்படையில் அவர்கள் உருவாக்கும் அறிக்கைகள் முக்கியமான தொழில் முடிவுகள் எடுக்க வசதியாக இருக்கும்.
கணினி துறை அல்லது பொறியியலில் பட்டப்படிப்பு இருப்பவர்கள் இந்தத் துறையில் நுழைவது அவர்களுக்கு எளிதாக இருக்கும். “எப்படிப்பட்ட தகவல்களைக் கொடுத்தால் பிஸினஸ் வளரும்” என்கின்ற ஒரு பரந்து பட்ட பார்வை இருக்க வேண்டியது அவசியம். காரணம், இவர்கள் கொடுக்கின்ற தகவல்களே பிஸினஸை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லவும், எப்படிப்பட்ட திசையில் பயணிக்க வேண்டும் என்பதை முடிவு செய்யவும், எப்படிப்பட்ட மாற்றங்களைக் கொண்டு வரவேண்டும் என்பதைத் தீர்மானிக்கவும் உதவுகின்றன.
2.      பிஸினஸ் அனலிஸ்ட் ; இன்னொரு முக்கியமான பணி. இதை வணிக ஆய்வாளர் பணி என்று சொல்லலாமா ? அல்லது தொழில் ஆய்வாளர் என்று சொல்லலாமா தெரியவில்லை. இப்போதைக்கு பிசினஸ் அனலிஸ்ட் என்றே வைத்துக் கொள்வோம்.
     ஒரு நிறுவனத்தின் தேவையை துவக்கத்திலிருந்தே கவனிப்பது         இவர்களுடைய வேலை. ஒரு பிஸினஸ் வளர்ச்சியடைய என்னென்ன தடைகள் இருக்கின்றன. என்னென்ன இடைவெளிகள் இருக்கின்றன என்பதைக் கண்டறிவது இவர்களுடைய வேலையின் முக்கியமான அம்சம்.
தகவல்களை அலசி ஆராய்பவர்களைத் தகவல் ஆய்வாளர் என்று சொல்வோம். அதே போல பிஸினஸை அலசி ஆராய்பவர்களே இந்த பிஸினஸ் அனலிஸ்ட் என அழைக்கப்படுகின்றனர்.
பிஸினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் (எம்.பி.ஏ) பிரிவில் ஒரு பட்டப்படிப்பு இருப்பது இந்த வேலைக்கு ரொம்ப நல்லது. கூடவே தகவல்களோடு விளையாடும் ஆர்வம் இருக்க வேண்டும். பிஸினஸை எப்படியெல்லாம் வலுப்படுத்தலாம் எனும் பார்வை இருக்க வேண்டியதும் அவசியம்.
பிஸினஸின் தேவையை சரிவரப் புரிந்து அதிலுள்ள குறைகளைக் களைந்து தொழில்நுட்பத்தின் மூலம் அதை வலுப்படுத்தும் பணியே இந்த பிஸினஸ் அனலிஸ்ட் பணி.
3.       டேட்டா அனலிஸ்ட் தகவல் அறிவியலில் மிக முக்கியமான பணிகளில் ஒன்று டேட்டா அனலிஸ்ட் வேலை. தகவல்களைத் திரட்டுவது, திரட்டிய தகவல்களை வகைப்படுத்துவது இரண்டும் இவர்களுடைய கைவேலைகள். இவர்களும் டேட்டா விஞ்ஞானிகள் அதாவது டேட்டா சயின்டிஸ்ட் இருவரும் வேறு வேறு.
  டேட்டா அனலிஸ்ட் என்பவர் அவருக்கு ரொம்ப ஜூனியர் என்று வேண்டுமானால்  வைத்துக் கொள்ளலாம். ஆனால் மிக முக்கியமான அடிப்படைப் பணிகள் செய்வது இவர்கள் தான்.
டேட்டா அனலிஸ்ட் என்பவர் ஒரு சில முக்கியமான மென்பொருட்களைப் பற்றித் தெரிந்திருக்க வேண்டும். குறிப்பாக ஆர், பைத்தான், எச்.டி.எம்.எல், எஸ்.க்யூ.எல், சி ++, ஜாவா போன்ற அனைத்து மென்பொருட்களின் கலவையாய் உங்களுடைய மென்பொருள் பரிச்சயம் இருப்பது மிக சிறப்பு.
தகவல்களை சேர்ப்பது, சேமிப்பது இவற்றோடு இவர்களுடைய பணி முடிந்து விடுவதில்லை. எப்படி அதை பயன்படுத்துவது என்பதையும் இவர்கள் யோசிக்க வேண்டும். ஹடூப் போன்ற மென்பொருட்களைக் கற்பது பயன்கொடுக்கும்.
நிறுவனத்தின் பல்வேறு நிலைகளிலுமுள்ள தலைவர்கள், வெவ்வேறு தகவல் தேவைகளோடு அணுகுவது இவர்களைத் தான். இவர்களும் அவர்களுடைய தேவைகளை நிறைவேற்றும் வகையில் தங்களுடைய மூளையையும், கையிலுள்ள தகவலையும் கசக்குவார்கள்.
எப்படி தகவலை வகைப்படுத்துவது, அதை எப்படி பயனுள்ள வகையில் மாற்றுவது, அல்காரிதங்களை/வழிமுறைகளை எழுதுவது, என்பதையெல்லாம் கவனிப்பது இவர்கள் தான்.
4.      ஸ்டாட்டிஸ்டிஷியன் / புள்ளிவிவர ஆய்வாளர்
ஸ்டாட்டிஸ்டிக் விஷயங்களைச் சொல்லும் இவரைப் புள்ளி விவரப் புலி என்று சொல்லலாமா ? தகவல்களைச் சேர்த்து, வகைப்படுத்தி, பயன்படுத்துவத்தோடு மட்டுமல்லாமல், அதன் அடிப்படையில் முடிவுகளையும் எடுப்பது இவர்களுடைய வேலை.
மார்க்கெட் ரிசர்ட், போக்குவரத்து, கல்வி, விளையாட்டு, என எல்லா இடங்களிலும் இவர்களுடைய தேவை உண்டு. இந்த வேலைக்குள் நுழையவேண்டுமென்றால் பட்டப்படிப்பு அவசியம். அதிலும் குறிப்பாக  ஸ்டாடிஸ்டிக்ஸ் அல்லது கணிதவியலில் பட்டம் இருந்தால் ரொம்ப நல்லது.
இவர்களும் ஆர் போன்ற ஏதோ ஒரு மென்பொருளின் மீது அதிக பரிச்சயம் கொண்டிருக்க வேண்டியது அவசியம். இவர்களுடைய பணிக்கென பல மென்பொருட்கள் உள்ளன MATLAB, SAS, Python, Stata, Pig, Hive, SQL, Perl போன்றவை புள்ளிவிவரவியலாளர் அல்லது ஸ்டாட்டிஸ்டிஷியன் பணிக்கு உதவுவதற்காக இருக்கின்ற மென்பொருட்கள். இவற்றில் சிலவற்றைக் கற்றுக்கொள்வது பயனளிக்கும்.
தகவல்களை அலசி அதில் ஒரு பேட்டர்ன் அதாவது முறையைக் கண்டுபிடிப்பது, தகவல்களுக்கு இடையே உள்ள தொடர்பைக் கண்டுபிடிப்பது, ஒரு டிரென்ட் கண்டுபிடிப்பது போன்றவற்றையெல்லாம் இவர்கள் கவனிப்பார்கள்.
5
டேட்டா சயின்டிஸ்ட்
இன்றைக்கு இருக்கக் கூடிய தகவல் அறிவியல் வேலைகளில் ஹாட் வேலை என்றால் இது தான். இதற்கு கொஞ்சம் அனுபவம் இருக்க வேண்டும். எல்லா நிறுவனங்களிலும் டேட்டா சயின்டிஸ்ட் வேலை தேவை இருக்கும். ஒவ்வொரு நிறுவனத்துக்கும் கொஞ்சம் கொஞ்சம் வித்தியாசமான திறமைகளில் டேட்டா சயின்டிஸ்ட் தேவைப்படுவார்கள்.
மென்பொருட்களின் மீதான பரிச்சயம் இதற்கு மிக மிக அவசியம்.  R, SAS, Python, SQL, MatLab, Hive, Pig, மற்றும் Spark போன்றவை இதற்குத் தேவையான மென்பொருட்கள் !
ஒரு நல்ல தகவல் விஞ்ஞானியின் வேலை தகவல்களோடு முடிந்து விடுவதில்லை. அந்த தகவல்களுக்கும் நிறுவனத்துக்கும் இடையேயான பிணைப்பைக் கண்டறியும். அந்த தொடர்பை வைத்துக் கொண்டு எப்படியெல்லாம் பிஸினஸை வளர்த்தலாம் என்பதை அலசும்.
இந்த பணிக்கு ஆர்வமும், பொறுமையும் மிக மிக அவசியம். நல்ல தெளிவான சிந்தனையும், திறமையும் இருந்தால் இந்தத் துறையில் கலக்கலாம்.
ஒரு டேட்டா சயின்டிஸ்ட் என்பவர் சுருக்கமாகச் சொல்லவேண்டுமெனில் ஒரு டேட்டா அனலிஸ்ச்ட், ஒரு பொறியாளர், ஒரு பிஸினஸ் அனலிஸ்ட் போன்ற பலவற்றின் கலவையாக இருப்பார்.
6
டேட்டா எஞ்சினியர்
பெரும்பாலும் பிக்டேட்டா சார்ந்த பணிகளைக் கவனிப்பதற்கு டேட்டா எஞ்சினியர்கள் தேவைப்படுவார்கள். இவர்களை டேட்டா ஆர்கிடெக்ட் என்றும் அழைப்பார்கள்.
தகவல் பொறியாளர்களுக்கு கணினி பிரிவில் ஒரு பட்டப்படிப்பு அவசியம். கூடவே Pig, Hadoop, MapReduce, Hive, MySQL, Cassandra, MongoDB, NoSQL போன்றவற்றில் பரிச்சயம் இருப்பது தேவையானது. அதே போல மென்பொருட்களான R, Python, Ruby, C++, Perl, Java, SAS, SPSS, and Matlab போன்றவற்றில் நல்ல பரிச்சயம் இருக்க வேண்டியதும் மிக மிக அவசியம்.
தகவல்களை வகைப்படுத்துவது, அதை டெஸ்ட் செய்வது, அதை நிறுவனத்தின் தேவைக்கு ஏற்ப அறிக்கையாய், படங்களாய் சமர்ப்பிப்பது இவையே இவர்களுடைய முக்கியமான வேலை.
இவை தவிர, பிக்டேட்டா பொறியாளர், மெஷின் லேர்னிங் பொறியாளர் என பலர் இந்த தகவல் அறிவியல் துறையின் பட்டியலில் வருவார்கள்.
மேலே குறிப்பிட்டுள்ளவை தகவல் அறிவியல் துறையிலுள்ள சில முக்கியமான வேலைகள். இவற்றைத் தவிரவும் பல வேலைகள் தகவல் அறிவியல் துறையில் உண்டு. இந்தப் பணிகளுக்குத் தேவையான திறமைகளை வளர்த்துக் கொண்டால் தகவல் அறிவியல் துறையில் நுழைவதில் சிக்கல் இருக்காது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக