சென்னை மெட்ரோவில் பயணிக்கும் பயணிகள் பேருந்துக்கு மாற வேண்டும் என்றால் இனி சிரமப்பட வேண்டாம், வாசலிலே பேருந்துகள் நிறுத்தங்கள் விரைவில் மாற்றப்படத் திட்டமிடப்பட்டு வருகிறது.
சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணத்தை முடித்துவிட்டு, பேருந்தில் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என்றால், இனி சிரமப்படத் தேவையிருக்காது எனச் சென்னை மெட்ரோ அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சென்னை மெட்ரோ ரயில் மாவட்டத்தை சுற்றி இயக்கப்பட்டு வருகிறது. இந்த மெட்ரோ ரயில் சென்னைக்குள் செல்லவில்லை என்றாலும், கோயம்பேடு, விமான நிலையம், கிண்டி, போன்ற முக்கிய இடங்களுக்குச் சேவை வழங்கி வருகிறது.
எனினும், மெட்ரோ நிர்வாகம் எதிர்பார்த்த கூட்டம் இப்போதும் மெட்ரோ ரயில் நிலையங்களில் இல்லை என்பதே உண்மை. இதனால், மெட்ரோ நிர்வாகம் தனது வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக சில நாட்களுக்கு முன், மெட்ரோ ரயில் நிர்வாகம் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்திற்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அந்த கடிதத்தில், “மெட்ரோ ரயில் நிலையங்கள் வாசலில், மாநகர பேருந்துகள் நிறுத்தும் வகையில் பேருந்து நிறுத்தங்களை மாற்றி அமைக்க வேண்டும்” எனக் கூறியுள்ளது.
இதுகுறித்து மெட்ரோ நிர்வாக ஊழியர்கள் கூறுகையில், “முதற்கட்டமாகக் குறைந்தபட்சம் 8 மெட்ரோ ரயில் நிலையங்கள் வாசலில் பேருந்து நிறுத்தங்கள் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்றார். இந்த 8 மெட்ரோ ரயில் நிலையங்களில் விமான நிலையம், ஆயிரம் விளக்கு, எல்ஐசி, தேனாம்பேட்டை, ஈக்காட்டுதாங்கல், பச்சையப்பா கல்லூரி உள்ளிட்டவை அடங்கும்.
இந்த 8 மெட்ரோ ரயில் நிலையங்கள் தவிர, கிண்டி, மீனம்பாக்கம், நங்கநல்லூர், வடபழனி, ஈக்காட்டுதாங்கலில் புதிய பேருந்து நிறுத்தங்கள் உருவாக்கப்படும். இந்த முறை மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என அதிகாரிகள் நம்புகின்றனர்.
இந்த மாற்றம் எப்போது நடக்கும் என்பது குறித்து மெட்ரோ நிர்வாகத்தின் மூத்த அதிகாரி டைம்ஸ் ஆப் இந்தியாவுக்குக் கூறுகையில், “இந்த மாற்றத்தை ஏற்படுத்த முன்பே கடிதம் அளித்து விட்டோம். விரைவில் பேருந்து நிறுத்தம் மாற்றுவதற்கு தலா ஒன்றுக்கு, ரூ. 60 ஆயிரம் முதல் ரூ. 80 ஆயிரம் வரையிலான வைப்பு பணம் செலுத்தப்படும். இது செலுத்தினால் உடனடியாக பணிகள் தொடங்கப்படும்” என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக