Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 20 ஜனவரி, 2020

அருள்மிகு மகுடேஸ்வரர் திருக்கோவில், கொடுமுடி

 Image result for அருள்மிகு மகுடேஸ்வரர் திருக்கோயில், கொடுமுடி"
பிரம்மா வழிபட்டு, திருமால் பூஜை செய்து, கருடன் பூஜித்து தேவலோகம் சென்று அமுதம் கொண்டு வந்ததும், மேருமலையின் ஒரு துண்டு வைரக்கல்லாகி விழுந்த இடத்தை தென் கயிலாயம் என்று அழைக்கப்படுவதும், போன்ற பல்வேறு பெருமைகள் கொண்டதாக திகழ்கிறது, ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் அமைந்துள்ள மகுடேஸ்வரர் கோவில். 

சிவஸ்தலம் பெயர் : திருப்பாண்டிக்கொடுமுடி.

இறைவன் பெயர்  : கொடுமுடிநாதர், மகுடேஸ்வரசுவாமி.

இறைவி பெயர் : வடிவுடைநாயகி, சௌடாம்பிகை.

அம்மனின் பெயர் : திரிபுர சுந்தரி, மதுரபாஷினி.

தல விருட்சம் : வன்னி.

தீர்த்தம் : தேவ தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், காவிரி.

ஆகமம் : சிவாகமம்.

தல வரலாறு :

 முன்னொரு காலத்தில் ஆதிசேஷனுக்கும், வாயு பகவானுக்கும் யார் வலிமை மிக்கவர் என்ற போட்டியில், ஆதிசேஷன் மேருவை கட்டி அணைத்துக் கொள்ள, வாயு பகவான் தனது வேகத்தால் பலமாக சூறாவளி காற்றை வீசி ஆதிசேஷனை மேருவில் இருந்து கீழே தள்ள முயன்றார். 

 அப்போது மேரு மலை சிதறி ஐந்து துண்டுகளாக பூமியில் விழுந்தன. அவை ஒவ்வொன்றும் ரத்தினமாக மாறி லிங்கங்களாக ஆனது. இவற்றில் வைரக்கல் கொடுமுடியில் விழுந்தது. அதனால் வைரக்கல்லால் ஆன லிங்கமாக இறைவன் குடியிருப்பதாக ஐதீகம்.

 மேருவில் இருந்து சிதறி வந்தவற்றில் மற்ற நான்கும் இன்றும் மலைகளாகவே காட்சி தர, வைரமடிமுடி மட்டும் சுயம்பு லிங்கமாக காட்சி தருவது கொடுமுடி தலத்தின் சிறப்பாகும்.

 மேருவின் மகுடத்தில் தோன்றியவர் என்பதால் மகுடேஸ்வரர் என்றும், தமிழில் கொடுமுடிநாதர் என்றும் இத்தல இறைவன் திருநாமம் கொண்டுள்ளார். கொடு என்றால் மலை, முடி என்றால் சிகரம். மலை சிகரமே மூலஸ்தானமாக உள்ளதால், மூலவர் கொடுமுடிநாதர் என அழைக்கப்படுகிறார்.

தல சிறப்பு :

 காவிரியின் மேல் கரையில் உள்ள இக்கோவில் பல தீர்த்தங்களை உடையது. காவிரி மற்றும் தேவ தீர்த்தத்தில் நீராடி, இறைவனையும், மகாவிஷ்ணுவையும் வழிபட பிணிகளும், பேய், பிசாசு, பில்லி, சூன்யம் போன்ற குற்றங்களும், மனநோயும் நீங்கும், தரிசித்த மாத்திரத்தில் பிறவியை போக்கி முக்தியை தருவது, சுயம்பு மூர்த்தியாகிய மகுடலிங்கர் கோவிலாகும்.

 உலகை சமநிலைப்படுத்த செல்லும் போது கயிலையில் நடந்த பார்வதி, பரமேஸ்வரன் திருமணக் காட்சியை அகத்தியர் கண்டுகளித்த இடம் கொடுமுடி.

 இக்கோவிலில் மும்மூர்த்திகளான சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மூவருக்கும் தனித்தனி கோபுரங்களும், தனித்தனி சன்னிதிகளும் அமைந்துள்ளன. இக்கோவிலுக்கு மூன்று வாயில்கள் கிழக்குப் பக்கம் அமைந்துள்ளன. இக்கோவிலில் உள்ள பிரம்மாவும், பெருமாளும் சிவபெருமானை வழிபடுவதாக ஐதீகம்.

 ஆதிசேஷனால் உருவான கோவில் என்பதால் இங்கு நாகர் வழிபாடு விசேஷம். காவிரி நதி, வன்னிமரம் அருகிலுள்ள தேவ தீர்த்தம், பாரத்வாஜ தீர்த்தம், மடப்பள்ளிக்கு அருகிலுள்ள பிரம்ம தீர்த்தம் ஆகியவை இக்கோவிலின் தீர்த்தங்களாகும்.

 மலையத்துவச பாண்டியனின் மகனுக்கு பிறவியிலேயே விரல்கள் சரியாக வளராமல் இருந்தன. கொடுமுடிநாதரிடம் வேண்டியபின் இக்குறை தீர்ந்தது. எனவே பாண்டியன் இக்கோவிலுக்கு மூன்று கோபுரங்களையும், மண்டபங்களும் கட்டி, மேலும் பல திருப்பணிகளைச் செய்தான். பாண்டிய மன்னனால் திருப்பணிகள் செய்யப் பெற்றதால் இத்தலம் பாண்டிக்கொடுமுடி ஆயிற்று.

பிராத்தனை :

 ராகு கேது தோஷம் உடையவர்கள் இக்கோவிலில் பரிகாரங்கள் செய்தால் திருமணத்தடை நீங்கும்.

குழந்தைப்பேறு கிட்டவும் இக்கோவிலில் பிரார்த்தனை செய்கின்றனர்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக