நரேந்திர
மோடி தலைமையிலான மத்திய அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர், சமையல் சிலிண்டருக்கான
மானியத் தொகை வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்குக்கே நேரடியாகச் செலுத்தப்பட்டு
வருகிறது. இடைத் தரகர்களின் சுரண்டலைத் தடுக்கவும், சமையல் எரிவாயு இணைப்பு விவரங்களை முறையாகப்
பராமரிக்கவும் இந்த நேரடிப் பயன் பரிமாற்றத் திட்டம் மத்திய அரசால்
கொண்டுவரப்பட்டது.
தற்போதைய நிலையில் வருடத்துக்கு 14.2 கிலோ எடை கொண்ட 12 சிலிண்டர்களுக்கு அரசு தரப்பிலிருந்து மானியம் வழங்கப்பட்டு வருகிறது. 12 சிலிண்டர்களுக்கு மேல் வாங்க விரும்பினால் வாடிக்கையாளர்கள் சந்தை விலையில்தான் வாங்க வேண்டும். அரசு வழங்கும் மானியத் தொகை மாதத்துக்கு மாதம் மாறுபடுகிறது. சர்வதேசச் சந்தை நிலவரத்தைப் பொறுத்து மானியத் தொகை நிர்ணயிக்கப்படுகிறது. இந்நிலையில், நேரடிப் பயன் பரிமாற்றத் திட்டத்தால் இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் அரசுக்கு அதிகளவில் மிச்சமாகியுள்ளதாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதாவது, நடப்பு 2019-20 நிதியாண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான ஒன்பது மாதங்களில் நேரடிப் பயன் பரிமாற்றத் திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு மானியம் வழங்கியதால் அரசுக்கு ரூ.28,700 ரூபாய் மிச்சமாகியுள்ளது. இதன் மூலம் சுகாதாரக் காப்பீடு, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் போன்ற சமூக நலத் திட்டங்களில் மத்திய அரசால் கூடுதலான அளவில் செலவிட முடியும்.
2020-21 மத்திய பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தபோது சுகாதாரக் காப்பீட்டுத் திட்டத்துக்கு ரூ.29,774 கோடியும், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்துக்கு ரூ.61,500 கோடியும் செலவிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த ஆண்டில், பொது உணவு வழங்கல் திட்டத்தின் கீழ் ரூ.19,200 கோடி மிச்சமாகியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் இதுவரையில் மொத்தம் ரூ.67,000 கோடி வரையில் சேமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக