அமெரிக்காவில் 35 ஆண்டுகளுக்கு முன்னர் பெண் கொலை வழக்கில் சிகரெட் துண்டு ஒன்றை வைத்து சந்தேக நபரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்!!
சுமார் 1985 ஆம் ஆண்டு நடந்த புத்தாண்டு தின கொண்டாட்டத்தின் போது டோனியா மெக்கின்லே என்ற பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கழுத்தை நெரித்து கொலை செய்யபட்டார். அப்போது, டோனியாவின் மகனுக்கு பிறந்து எட்டு மாதங்களே ஆகியுள்ளது. இந்த சம்பவம் நடந்து 35 ஆண்டுகளாகியும் இது தொடர்பான வழக்கில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. இந்நிலையில், டோனியா கொலை செய்யப்பட்ட இடத்திற்கு அருகே கண்டறியப்பட்ட மரபணுக்களை புளோரிடா மாகாண காவல்துறையினர் பொதுவளத்தில் (Open Source) உள்ள மரபுவழி தரவு தளத்துடன் ஒப்பிட்டு பார்த்தனர்.
அப்போது, சம்பவ இடத்தில் கண்டறியப்பட்ட மரபணுவும் தற்போது 57 வயதாகும் டேனியல் வெல்ஸ் என்பவரின் மரபணுவும் ஒத்து போனதை தொடர்ந்து அடுத்து காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
இதை தொடர்ந்து, டேனியல் தூக்கி எறிந்த சிகரெட் துண்டுகளை ஆய்வு செய்த காவல்துறையினர் மீண்டுமொருமுறை அவரது மரபணு ஒத்துப்போவதை உறுதி செய்ததை அடுத்து அவர் மீது கொலை மற்றும் பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டுகளை சுமத்தி அவரை கைது செய்துள்ளனர். "என் அம்மா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட வழக்கில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளது எனக்கு மகிழ்ச்சியை அளித்தாலும், அவருக்கு தண்டனை வழங்கப்படும் வரை எனக்கு நிறைவு ஏற்படாது" என்று 35 வயதாகும் டோனியாவின் மகன் உள்ளூர் ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக