சென்னை நந்தம்பாக்கம், பரங்கிமலை, ஆலந்தூர், உள்ளகரம்-புழுதிவாக்கம் மற்றும் மடிப்பாக்கம், கோவிலம்பாக்கம், மூவரசன்பட்டு பகுதிகளில் ஏராளமானோர் பசு மாடுகளை வளர்த்து, பால் வியாபாரம் செய்து வருகின்றனர். இவர்கள் தங்கள் மாடுகள் மூலம் கிடைக்கும் பாலினை பல இடங்களில் விற்று வந்துள்ளனர்.
இந்நிலையில், கொரோனா பாதிப்பு காரணமாக கடைகள் மற்றும் வீடுகளில் யாருமே பால் வாங்க முன்வரவில்லை. தினசரி கறக்கப்படும் பால் விற்பனையாமல் தேக்கமடைந்துள்ள நிலையில், இதை அப்பகுதியில் உள்ள கால்வாய் மற்றும் ஏரி, குட்டைகளில் ஊற்றுகின்றனர்.
இதுகுறித்து பால் வியாபாரிகள் கூறுகையில், 'கொரோனா பீதியால் எங்களிடம் பால் வாங்குவதை பொதுமக்கள் நிறுத்திவிட்டனர். கடைகளும் மூடப்பட்டுள்ளதால், தினசரி கறக்கப்படும் பாலை கால்வாயில் ஊற்றுகிறோம். பாலை கறக்காவிட்டால் மாடுகளுக்கும் ஆபத்து என்பதால் தினமும் கறக்கிறோம். மேலும், கடைகள் இல்லாததால் மாட்டு தீவனமும் வாங்க முடியாமல் சிரமப்பட்டு வருகிறோம். எனவே, எங்களுக்கும், கால்நடைகளுக்கும் நிவாரணம் வழங்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.' என கூறியுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக