கொரோனா காலத்தில் புதிய தேவை
இந்தியாவில் அதிகம் தேவைப்படாத முகமுடி (Face Mask) மற்றும் பாதுகாப்பு உடல் கவசத்திற்குக் கொரோனா தாக்கத்தின் காரணமாகத் தேவையின் அளவு தலைகீழாக மாறியுள்ளது. வெளிநாடுகளில் இருந்து (குறிப்பாகச் சீனா) மிகவும் குறைந்த விலைக்கு இறக்குமதி செய்யப்படும் காரணத்தால் இந்தியாவில் குறைவான அளவிலேயே தயாரிக்கப்படுகிறது.
வெளிநாட்டு இறக்குமதிகள் அதிகளவில் குறைக்கப்பட்டு உள்ள நிலையில் இந்தியாவில் திடீரென உருவாகிய தேவை பூர்த்தி செய்ய முடியாமல் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் கடுமையான நெருக்கடியை இந்திய மக்கள் எதிர்கொண்டனர்.
திருப்பூர்
மக்கள் மத்தியில் தற்போது ஏற்பட்டுள்ள தேவை திருப்பூரில் புதிய வர்த்தகத்தை உருவாக்கியுள்ளது என்றால் மிகையில்லை. திருப்பூரில் இருக்கும் பல நிறுவனங்கள் தற்போது மாஸ்க் மற்றும் பாதுகாப்பு உடல் கவசத்தை உற்பத்தி செய்யத் தயாராகி வருகிறது.
இதன் மூலம் நடப்பு நிதியாண்டில் மட்டும் சுமார் 2 பில்லியன் டாலர் மதிப்பிலான புதிய வர்த்தகம் உருவாகியுள்ளது.
தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 200 ஆலைகள் மாஸ்க் மற்றும் பாதுகாப்பு உடல் கவசத்தைத் தயாரிக்கும் பணியில் இறங்கியுள்ளதாகத் திருப்பூர் எக்ஸ்போர்ட் அசோசியேஷன் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த 200 ஆலைகளில் தயாரிக்கப்படுபவை தமிழ்நாடு மற்றும் இந்திய சந்தை தேவைக்கானது மட்டுமாகவே இருக்கும்.
மேலும் இதில் பல நிறுவனங்கள் சர்வதேச தரத்திற்கு இணையான பொருட்களைத் தயாரிக்கும் பணிகளைச் செய்து வருவதால் அடுத்த சில மாதங்களில் இந்தியாவில் இருந்தும் மாஸ்க் மற்றும் பாதுகாப்பு உடல் கவசம் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் வாய்ப்பும் உள்ளது.
தொழில்நுட்ப சேவை
தற்போது தயாரிக்கப்படும் மாஸ்க் மற்றும் பாதுகாப்பு உடல் கவசம் அனைத்தும் உள்நாட்டில் மட்டுமே விநியோகம் செய்யப்படுகிறது. ஆனால் இதற்கான பிரத்தியேக தொழில்நுட்ப உதவிகள் கிடைக்கும் நிலையில் தரம் உயர்த்தப்பட்டு வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும் அளவிற்கு வளர்ச்சி அடைய முடியும். இதனால் வருடத்திற்கு 10,000 முதல் 15,000 கோடி ரூபாய் அளவிலான வருவாய் ஈட்ட முடியும் என ஏற்றுமதி அமைப்பின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
பாதிப்பு
திருப்பூரில் மட்டும் வருடத்திற்குச் சுமார் 60,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஆடைகள் தயாரிக்கப்பட்டு இந்தியா மற்றும் வெளிநாடுகளில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதுமட்டும் அல்லாமல் பின்னலாடை துறையில் மட்டும் சுமார் 8 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர்.
திருப்பூர் தொழிற்சாலைகளின் முக்கிய வாடிக்கையாளர்கள் அனைத்தும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் காரணத்தால் இந்த 60,000 கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகம் பாதிப்பு அடைந்து உள்ள குறிப்பிடத்தக்கது.
சீனா
உலகளவில் 50 சதவீத மாஸ்க் சப்ளை செய்வது சீனா தான். உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் காரணத்தால் ஏற்றுமதி, இறக்குமதி பாதிப்பு ஏற்பட்ட நிலையில் மாஸ்க் தட்டுபாடு உலக நாடுகளில் நிலவியது. இந்தியாவிலும் இதே நிலை என்பதால் தற்போது உலக மக்களுக்கு ஆடை தயாரித்து கொடுக்கும் திருப்பூரில் தொழிற்சாலைகள் தற்போது மாஸ்க் தயாரிக்க துவங்கியுள்ளது.
இனி மாஸ்க் மற்றும் பாதுகாப்பு உடல் கவசத்திற்காக எந்த நாட்டையும் நம்பியிருக்க வேண்டியது அவசியம் இல்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக