உலக நாடுகளில் இருப்பது போலவே அமெரிக்காவிலும் கொரோனாவின் தாக்கம் மிகவும் அதிகமாகவே உள்ளது. இதனால் அமெரிக்காவில் வர்த்தகப் பாதிப்பு எப்போதும் இல்லாத அளவிற்கு அனைத்து துறையிலும் இருக்கும் காரணத்தால் அனைத்து தனியார் மென்பொருள் நிறுவனங்களும் செலவுகளைக் குறைப்பதற்காக வெளிநாட்டு ஊழியர்களைத் தொடர்ந்து பணிநீக்கம் செய்து வருகிறது.
வேலை இழந்த பலர் Linkedin தளத்தில் பதிவிட்டுள்ளதைப் பார்க்க முடியும். இந்த நேரத்தில் இந்திய ஐடி கட்டுப்பாட்டு ஆணையமான நாஸ்காம் சில அவசர கோரிக்கைகளை அமெரிக்க அரசிடம் முன்வைத்துள்ளது.
நாஸ்காம்
அமெரிக்காவில் வெளிநாட்டவர்களைத் தொடர்ந்து பணிநீக்கம் செய்யும் நிகழ்வு நடந்து வரும் நிலையில், இதன் எதிரொலிகளைச் சமாளிக்க வேண்டும் என நாஸ்காம், அமெரிக்காவின் ஹோம்லேன்டு சர்வீஸ் மற்றும் லேபர் துறை, குடியுரிமை சேவை பிரிவிடம் முக்கியமான கோரிக்கை வைத்துள்ளது.
கொரோனா பாதிக்கப்பட்டுள்ளதால் இந்திய எல்லைகள் தற்போது மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் வேலை இழக்கும் இந்தியர்கள் தற்போது அங்கு 2 மாதம் மட்டுமே தங்க முடியும். இக்காலகட்டத்தை உயர்த்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விசா காலம்
ஹெச்1பி விசா மற்றும் எல்1 விசா காலம் முடிந்த இந்திய ஊழியர்களுக்கு அமெரிக்காவை விட்டு வெளியேற்றும் காலத்தை 90 நாள் கூடுதலாக நீட்டிக்க நாஸ்காம் அமைப்பு அமெரிக்காவின் ஹோம்லேன்டு சர்வீஸ் மற்றும் லேபர் துறை, குடியுரிமை சேவை பிரிவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
விண்ணப்பம்
வேலைவாய்ப்பை இழந்த பல இந்தியர்கள், வெள்ளை மாளிகைக்கு, இந்திய எல்லைகள் தற்போது மூடப்பட்டுள்ளது இந்தக் காலக்கட்டத்தில் எங்களால் இந்தியாவிற்குச் செல்ல முடியாது, மேலும் எங்களது குழந்தைகள் அமெரிக்கக் குடியுரிமை பெற்றவர்கள். நாங்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சி முக்கியப் பங்கு வகிப்பது மட்டும் அல்லாமல், அரசுக்கு வரி செலுத்துவதிலும் முக்கியப் பங்குவகிக்கிறோம். எனவே எங்களுக்கு அமெரிக்காவை விட்டு வெளியேறக் கால நீட்டிப்பு அவசியம் வேண்டும் எனப் பெட்டிஷன் கொடுத்துள்ளனர்.
சலுகை
கொரோனா பாதிப்பால் இந்த வாரம் மட்டும் அமெரிக்காவில் சுமார் 32.8 லட்சம் பேர் வேலைவாய்ப்பு இல்லாதோருக்கான சலுகைகளைப் பெற விண்ணப்பம் செய்துள்ளதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பால் அமெரிக்காவில் மட்டும் இக்காலகட்டத்தில் 4.7 கோடி பேர் வேலை இழக்கும் அபாயம் உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் முதலில் பாதிக்கப்படுவது ஹெச்1பி விசா மற்றும் எல்1 விசா உள்ளவர்கள் தான் என்றும் கூறப்பட்டுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக