Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 20 மே, 2020

குடல் புழுவை வெளியேற்றும் பாட்டி வைத்தியம், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும்!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சந்திக்கும் பிரச்சனைகளில் இதுவும் ஒன்று. நாம் குடிக்கும் நீர் முதல் உணவு வரை கண்ணுக்குதெரியாமல் புழுக்கள் குடலுக்குள் சென்றுவிடுகிறது. கைகளை சுத்தம் செய்யாமல் சாப்பிடு போதும், அசுத்தமான தண்ணீரை குடிக்கும் போதும், சுகாதாரமில்லாத உணவை சாப்பிடும் போதும், அரை வேக்காட்டு உணவை சாப்பிடும் போதும் என பல்வேறு காரணங்களால் குடலில் புழுக்கள் வசிக்கிறது. கொக்கி புழு, நாடாப்புழு, , உருளை புழு, சாட்டை புழு என்று பலவிதமான புழுக்கள் உடலில் குடலுக்குள் வசிக்க அசுத்தமே காரணம். அதனால் ஒவ்வொரு 6 மாதங்களுக்கு ஒரு முறை பூச்சி மருந்து எடுத்துகொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள். ஆனால் கை வைத்திய முறையில் குடலில் இருக்கும் அனைத்து பூச்சியையும் வெளியேற்ற வீட்டில் இருக்கும் பொருள்களே உதவும் என்பது குறிப்பிடத்தக்கது. பாட்டி வைத்தியத்தில் எந்த பொருள்கள் குடல் பூச்சை வெளியேற்றும் என்று தெரிந்துகொள்வோம்.

பூண்டுக்கு மிஞ்சிய வைத்திய எதுவுமே இல்லை என்று சொல்வார்கள். வெள்ளை பூண்டை எடுத்து தோல் உரித்து வெறும் வாணலியில் வறுக்க வேண்டும். ஒருவர் 3 பல் மட்டுமே எடுத்துகொள்ளலாம்.

வாசனை போக பூண்டை வறுத்து காலையில் வெறும் வயிற்றில் வாயில் போட்டு கடித்து பொறுமையாக மெல்லவும். பூண்டு சாறு துளிதுளியாக இறங்கினால் தான் குடல்வழியே இருக்கும் பூச்சிகளையும் வெளியே விரட்டி அடிக்கும். என்பதால் வேகமாக மென்றுவிடாமல் பூண்டு சாறும், உமிழ்நீரும் கலந்து மெதுவாக விழுங்க வேண்டும்.

சிறு பிள்ளைகளுக்கு கொடுக்கும் போது ஒரு பல் வறுத்து பொடியாக நறுக்கி தேனில் குழைத்து கொடுக்கலாம். தினமும் காலை வேளையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் போதும். தொடர்ந்து 5 நாட்கள் சாப்பிட்டால் குடல் பூச்சிகள் மலம் வழியாக வெளியேறிவிடும். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை இப்படி செய்தால் போதுமானது.


விளக்கெண்ணெய்

குடல் புழுக்களுக்கு விளக்கெண்ணெய் பட்டாலே அலர்ஜி. வீட்டு பெரியவர்கள் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் பேதி மாத்திரையை வாங்கி விளக்கெண்ணெயில் தோய்த்து கொடுப்பார்கள். அதே போன்று சுத்தமான விளக்கெண்ணெய் வாங்கி காலையில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் ஒரு டீஸ்பூன் அளவு விளக்கெண்ணெய் விட்டு பொறுமையாக குடிக்க வேண்டும். குழந்தைகளுக்கு கொடுக்கும் போது வயதுக்கேற்ப 2 முதல் 4 துளிகள் வரை சேர்க்கலாம்.

அதிகம் சேர்த்தால் குளிர்ச்சி ஆகும். அதோடு சமயங்களில் வயிற்றுபோக்கும் அதிகரித்து உடலில் நீர்ச்சத்து குறைந்துவிடும் என்பதால் கவனம் தேவை. ஒருமுறை மட்டுமே குடிக்க வேண்டும்.

பப்பாளிக்காயை நறுக்கி மிக்ஸியில் அரைத்து சாறாக்க வேண்டும். பெரியவர்களுக்கு 20 மில்லி அளவு எடுத்து அதனுடன் தேன் கலந்து குடிக்கவும். பப்பாளி அதிகம் காயாக இருக்க வேண்டாம். இவை அதிக உஷ்ணத்தை கொடுத்துவிடும். இதை காலை வேளையில் குடிக்க வேண்டும்.

இரவு தூங்கும் போது ஒரு டம்ளர் பாலில் பப்பாளி விதையை ( தற்போது ஹைப்ரேட் பப்பாளி அதிகம் கிடைக்கிறது இதை பயன்படுத்த வேண்டாம்) அரைத்து அரை டீஸ்பூன் அளவு கலந்து குடிக்க வேண்டும்.பப்பாளி விதையில் இருக்கும் காரிசின் என்னும் வேதிபொருள் பூச்சிகளை வேரோடு வெளியேற்றும். தொடர்ந்து மூன்று நாட்கள் மட்டும் இதை குடித்தாலே போதுமானது.

துவர்ப்பு மிக்க கொட்டை பாக்கு பூச்சிகளை அழிக்கும் தன்மை கொண்டது. குறிப்பாக குழந்தைகளுக்கும், சிறுவர்களுக்கும் இவை கை கண்ட மருந்து. கொட்டை பாக்கை சிறு உரலில் இட்டு இடித்து தூளாக்கி சலித்து கொள்ளவும்.தேவையான அளவுக்கு பொடி எடுத்து குழந்தைக்கு மிளகு அளவு, வளர்ந்த சிறுவர்களுக்கு புளியங்கொட்டை அளவு வரும்படி வெதுவெதுப்பான நீர் விட்டு குழைத்து உருண்டையாக்கி கொடுக்கவும். அல்லது பாலில் கலந்து கொடுக்கலாம். துவர்ப்பு சுவை குடலில் இருக்கும் பூச்சிகளை வெளியேற்றும். தொடர்ந்து 3 முதல் 5 நாட்கள் வரை இதை கொடுக்கலாம்.

இது கஷாயம் போல் குடிக்கலாம். வேப்பங்கொழுந்து 5 அல்லது 6 எண்ணிக்கை வரும்படி எடுத்து சுத்தம் செய்து வைக்கவும். ஒரு டம்ளர் நீரை கொதிக்கவைத்து, அதனுடன் ஒரு பல் பூண்டு, ஒரு மிளகு, வேப்பங்கொழுந்து சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து அரை டம்ளர் அளவு வரும் போது இறக்கவும். பிறகு மத்தால் கடைந்து நீரை வடிகட்டி குடிக்க வேண்டும். வேப்பிலை கஷாயம் சற்று கசப்பாக இருந்தால் சிறிதளவு தேன் சேர்த்து குடிக்கலாம். வேப்பங்கொழுந்தின் கசப்பு குடல் பூச்சியை அழிக்கும். குழந்தைகள் கஷாயம் குடிக்க மறுத்தால் வேப்பங்கொழுந்துடன் சிறிதளவு கல் உப்பு சேர்த்து அரைத்து சிறு உருண்டைகளாக உருட்டி காலையில் வெறும் வயிற்றில் மாத்திரை போல் விழுங்கினால் பூச்சிகள் இறந்து வெளியேறும்.


அண்ட வாயுக்கீரை தான் பேதிக்கீரை என்று அழைக்கப்படுகிறது. நீளமான சற்று கனமான தண்டில் வளரக்கூடிய இந்த கீரை வயிற்றை சுத்தம் செய்ய உதவும். மாதம் ஒரு முறை இந்த கீரையை வதக்கி துவையலாக்கி அல்லது பருப்புடன் சேர்த்து கூட்டு செய்து சாப்ப்பிடலாம். பெரியவர்கள் வாரம் மூன்று நாள் வரை இதை சாப்பிட வேண்டும். குழந்தைகளுக்கு அளவாக வாரத்துக்கு இரண்டு நாள் கொடுத்தால் போதுமானது.

குழந்தைக்கு குடல் பூச்சி அகற்ற மருந்து கொடுப்பதாக இருந்தால் பிள்ளை வளர்த்தி என்னும் வசம்பு கொடுக்கலாம். வசம்பை சுட்டு அதை தேனில் குழைத்து நாக்கில் தடவலாம்.

தொடர்ந்து 3 நாட்கள் கொடுத்தாலே போதுமானது. இதை அதிகம் பயன்படுத்தினால் குழந்தை பேச்சு திக்கி வரக்கூடும். அளவாக கொடுத்தால் வயிற்றில் பூச்சிகள் இறந்துவிடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக