Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 19 மே, 2020

திடீர் பதற்றம், ஏன் என்னாச்சு? சீன எல்லையில் குவிக்கப்பட்ட இந்திய ராணுவம்!

இந்திய சீனா எல்லை

கிழக்கு லடாக் பகுதியில் இந்திய - சீன ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்ட நிகழ்வால் எல்லையில் மீண்டும் பதற்றம் தொற்றிக் கொண்டது.

இந்தியாவின் எல்லைக்குள் ஊடுருவி கொடி நாட்ட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு சீனா செயல்பட்டு வருகிறது. இதற்கு உதாரணமாக, அருணாசலப் பிரதேசத்தின் ஒரு பகுதியை தங்கள் நாட்டிற்கு சொந்தமானது என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தி வருவதைக் கூறலாம். இந்நிலையில் கடந்த மே 5 - 6ஆம் தேதிகளில் பாங்கங் சோ பகுதியில் இந்திய, சீன ராணுவத்தினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் இருதரப்பிலும் பலரும் காயமடைந்துள்ளனர். இதுபோன்ற மோதல் சம்பவங்களில் இதேபகுதியில் கடந்த காலங்களில் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக இந்திய ராணுவம் தரப்பு கூறுகையில், நடப்பு மாதத்தின் தொடக்கத்தில் நிகழ்ந்த மோதலின் விளைவாகவே தற்போது இந்திய ராணுவம் குவிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக தெம்சோக், சுமார், தவுலத் பெக் ஓல்டி, கல்வான் பள்ளத்தாக்கு ஆகிய பகுதிகளில் இந்திய வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கூடாரங்கள் அமைத்து கட்டுமான வேலைகளில் சீன ராணுவம் ஈடுபட்டு வருகிறது. இது இந்திய ராணுவத்திற்கு சவால்விடும் செயலாகும் என்று தெரிவித்துள்ளது. கடந்த 1962ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய - சீனா போரிலும் கல்வான் பகுதி மிகவும் முக்கியமான பகுதியாக இருந்தது.

அதன்பிறகு இந்தப் பகுதியை தக்க வைத்துக் கொள்ள இந்தியாவும், கைப்பற்ற சீனாவும் தீவிரம் காட்டி வருகின்றன. இருதரப்பிலும் கூடாரங்கள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளில் இந்திய எல்லைக்குள் சில கட்டுமானங்களை ஏற்படுத்தி பதற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

கடந்த 2013ஆம் ஆண்டு ஏப்ரல் - மே மாதங்களில் இந்திய - சீன ராணுவத்தினரிடையே 21 நாட்கள் பதற்றமான சூழல் நிலவியது. எல்லையில் இருதரப்பு வீரர்களும் கூடாரங்கள் அமைத்து ராணுவ அணிவகுப்பில் ஈடுபட்டனர். அப்போது தேப்சங் புல்ஜே பகுதியில் 19 கி.மீ தூரம் சீன ராணுவம் ஊடுருவியது பரபரப்பை கிளப்பியது.

இதேபோல் 2018ஆம் ஆண்டு தெம்சோக் பகுதியில் 300 - 400 மீட்டர் தூரம் சீன ராணுவம் ஊடுவியது. இதுபோன்ற சமயங்களில் இந்திய ராணுவத்தின் பலத்தைக் காட்டும் வகையில் வீரர்கள் குவிக்கப்படுவர். அதன்பிறகு இருதரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு பிரச்சினை முடிவுக்கு கொண்டு வரப்படும்.

தற்போதைய சூழலைப் பொறுத்தவரையில் வீரர்கள் குவிப்பு வழக்கமான நடவடிக்கையே ஆகும். புதிதாக கமாண்டர்கள் மாறும் போது இதுபோன்று வீரர்கள் குவிக்கப்படுவர். அதாவது மற்ற கமாண்டர்களைப் போல் தான் இல்லை என்பதை வெளிப்படுத்தும் வகையில் இவ்வாறு நடவடிக்கை எடுப்பர் என்று ராணுவ தளபதி எம்.எம்.நடவனே விளக்கம் அளித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக