அண்டார்டிகாவின் பனிப்பிரதேசத்தில் பனிப்பாறைகள் பச்சை நிறமாக மாறும் நிலை உருவாகியுள்ளது. அன்டார்டிகாவில் ஏன் பனிப்பாறைகள் பச்சை நிறமாக மாறுகிறது என்று ஒரு ஆராய்ச்சிக் குழு ஆராய்ச்சி செய்து வருகிறது. பனிப்பாறைகளில் பரவும் இந்த பச்சை நிறம் விண்வெளியிலிருந்து சாட்டிலைட் மூலம் பார்த்தாலும் கூட தெரிகிறது என்று கூடுதல் தகவலையும் வெளியிட்டுள்ளனர்.
அண்டார்டிகாவை பச்சையாக மாற்றியுள்ள இது என்ன உயிரினம்?
இந்த பச்சை நிறம் பனிப்பாறைகளில் எதனால் உருவானது? உண்மையில் இது என்ன உயிரினம்? எதனால் இப்படி பனிப்பாறைகள் மற்றும் அனைத்து இடங்களிலும் இவை படர்ந்துளளது என்ற உண்மையைத் தெரிந்துகொள்ளுங்கள். அண்டார்டிகாவில் உள்ள பல இடங்களில் இந்த பச்சை நிறம் பனிப்பாறைகள் மற்றும் பனிக்கட்டிகளில் காணப்படுகிறது.
அண்டார்டிகாவில் காணப்படும் பச்சை பனி
பூமியில் நிகழும் காலநிலை மாற்றத்தின் காரணமாகவும், பூமி அதிக வெப்ப மயமாதல் காரணமாக நிலவும் வெப்பநிலை மாற்றத்தாலும் இந்த 'பச்சை பனி' உருவாகி வருகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். நாளுக்கு நாள் இவை வெகு வேகமாக மற்ற இடங்களுக்கும் பரவி வளர்ந்து வருகிறதாம்.
பச்சை நிறத்திற்கு இதுதான் காரணமா?அண்டார்டிகாவில் காணப்படும் இந்த பச்சை நிறம் உண்மையில் பாசி வகை பூக்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதிகமாகும் வெப்பநிலை மாற்றத்தினால் பனிக்கட்டிகள் உருகி ஓடும் தடங்களில் இவை வேகமாகப் பரவி, நீரோடும் தடத்தில் எல்லாம் பரந்து வளர்ந்துள்ளது என்று தெரிவித்துள்ளனர். மேலும் இந்த பச்சை நிறம் விண்வெளியிலிருந்து கூட காணக்கூடிய அளவிற்கு மிகவும் செழிப்பாக வளர்ந்து வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை தெரியாமலே இருந்த தகவல்
விண்வெளியிலிருந்து கூட இந்த பச்சை நிறங்களைக் காணமுடிகிறது என்று புதன்கிழமை வெளியிடப்பட்ட புதிய ஆராய்ச்சி ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்டார்டிகாவில் இந்த பச்சை நிற பாசி வகை இருப்பதை பிரிட்டிஷ் ஆய்வாளர் எர்னஸ்ட் ஷாக்லெட்டன் என்பர் நீண்ட காலத்திற்கு முன்னர் கண்டுபிடித்துள்ளார். ஆனால், அண்டார்டிகாவில் எந்த அளவிற்கு இது பரந்து வளர்ந்துள்ளது என்பது இதுவரை தெரியாமலே இருந்து வந்தது.
சென்டினல் 2 செயற்கைக்கோள் புகைப்படத்தில் பச்சை நிறம்இப்போது, ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் சென்டினல் 2 செயற்கைக்கோள் இரண்டு ஆண்டுகளில் இந்த பச்சை நிறம் படர்ந்துள்ள தரவுகளைச் சேகரித்துள்ளது. இந்த சாட்டிலைட் தகவல்களைப் பயன்படுத்தி, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி குழு மற்றும் பிரிட்டிஷ் அண்டார்டிக் சர்வே ஆகியவற்றின் ஆராய்ச்சி குழு சேகரித்த நிலத்தடி ஆய்வு தகவலுடன் அண்டார்டிகாவில் பரந்து வளர்ந்து வரும் பாசி பூக்களின் முதல் வரைபடத்தை உருவாக்கியுள்ளனர்.
பச்சை படர்ந்துள்ள இடங்களின் முழு வரைபடமும் தயார்
அண்டார்டிக் கடற்கரையில் இப்பொழுது இவற்றை எங்கெல்லாம் காணமுடியும் என்ற முழு வரைபடமும் தயார் செய்யப்பட்டுள்ளது என்று ஆராய்ச்சி குழு தெரிவித்துள்ளது. இப்பொழுது இந்த பாசிப் பூக்கள் இருக்கும் இடத்தின் அடிப்படை இடம் மற்றும் அளவு என்ன என்ற தகவல் நம்மிடம் உள்ளது, எதிர்காலத்தில் இவை இன்னும் அதிகரிக்கத் தொடங்குகிறதா என்பதை எளிதாக இந்த வரைபடம் காட்டிவிடும் என்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் தாவர அறிவியல் துறையின் மாட் டேவி ராய்ட்டர்ஸ் தெரிவித்திருக்கிறார்.
அண்டார்டிகாவில் புதிதாக 1,679 தனித்தனி பாசி வகை கண்டுபிடிப்பு
அண்டார்டிகாவில் மோசெஸ் மற்றும் லைச்சன்கள் என்ற இரண்டு வகை பாசி வகைகள் அதிகமாகக் காணப்படும் ஒளிச்சேர்க்கை உயிரினங்களாகக் கருதப்படுகின்றன. இந்த பாசி வகைகள் மட்டுமின்றி, அண்டார்டிகாவில் சுமார் 1,679 தனித்தனி பாசிப் பூக்கள் வகை தற்பொழுது இந்த ஆராய்ச்சியின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இவை வளிமண்டலத்திலிருந்து கார்பன் டை ஆக்சைடைப் உறிஞ்சக்கூடிய முக்கிய திறனுடன் காணப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கார்பனை உறிஞ்சும் உயிரினம்
அண்டார்டிகாவில் உள்ள பாசிப் பூக்கள் சராசரியாக 875,000 இங்கிலாந்து பெட்ரோல் கார் பயணங்களால் தவிர்க்கப்படும் கார்பனின் அளவிற்குச் சமம் என்று டேவி கூறியுள்ளார். இந்த எண் பார்ப்பதற்கு நிறைய போன்று தெரிந்தாலும், உண்மையில் உலகளாவிய கார்பன் பட்ஜெட்டைப் பொறுத்தவரை, இது மிகவும் அற்பமான எண் தான் என்று தெரிவித்துள்ளார். இந்த பச்சை பாசிகள் வளிமண்டலத்திலிருந்து கார்பனை எடுத்துக்கொள்கிறது.
சிவப்பு நிறத்திலும் படரும் பாசி உயிரினம்
அண்டார்டிகாவில் பனிப்பாறைகளில் பச்சை நிறத்தில் மட்டும் இந்த உயிரினங்கள் காணப்படுவதில்லை, அண்டார்டிகாவில் உள்ள இன்னும் சில இடங்களில் சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறத்தில் பாசிகள் வளர்ந்து வருவதையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
கடினமாகும் சூழல்
இப்போது இந்த பாசி வகைகளையும் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். இருப்பினும் மற்ற நிறங்களில் உள்ள பாசி வகைகள், வரைபடத்தை விண்வெளியிலிருந்து உருவாகுவதைக் கடினமாக்கியுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக