Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

திங்கள், 10 ஆகஸ்ட், 2020

துணி துவைத்த சீடர்களும், பரமார்த்த குருவும்

அந்த ஊர்ப் பண்ணையார் வீட்டில் துணி துவைப்பதற்கு ஆள் தேவையாக இருந்தது. பரமார்த்த குருவின் சீடர்கள், அந்த வேலையைச் செய்யலாம் என்றனர். துணி துவைக்கிற தொழிலுக்குப் பொதி சுமக்கும் கழுதை வேண்டும் என்றார் பரமார்த்தர். கழுதை இல்லாவிட்டால் என்ன? அதற்குப் பதில் நாங்கள் இருக்கிறோமே என்றனர் சீடர்கள். வேண்டாம் நல்ல கழுதையாக வாங்கி வாருங்கள், என்று உத்தரவிட்டார், பரமார்த்த குரு. அன்று மாலையே அவர் மடத்துக்குக் கழுதை ஒன்று வந்து சேர்ந்தது.

 கழுதையைப் பார்த்து பரமார்த்தர், அதன் வாலைப் பிடித்து முறுக்கிப் பார்த்தார். கழுதை, அவரை ஒரு உதை உதைத்தது. ஐயோ என்று அலறியபடி விழுந்தார், முட்டாள்களே என் பெருமைகளைப் பற்றி கழுதையிடம் ஒன்றுமே சொல்ல வில்லையா? என்று கோபமாகக் கேட்டார். குருவே உங்களைப் பற்றி தெளிவாக எடுத்துச் சொன்னதால்தான் உதைத்ததோ என்னவோ? என்றான் மடையன்.

பரவாயில்லை, அடிக்கிற கைதான் அணைக்கும். அதுபோல் உதைக்கிற கழுதைதான் உண்மையாய் உழைக்கும். ஆகையால் இந்தக் கழுதையே இருக்கட்டும் என்றார் பரமார்த்தர். இவர்கள் கழுதை வைத்திருப்பதை தெறிந்த திருடன், கழுதையை திருடிச் செல்ல நினைத்தான்.

ஒருநாள், திருடன் கழுதையின் கயிற்றை அவிழ்த்துக் கொண்டு இருந்தபோது, சீடர்கள் வருவதை கண்டு அவசரமாகக் கழுதையை மட்டும் ஓட்டிவிட்டு, அந்த இடத்தில் நின்று கொண்டான். அங்கு வந்து பார்த்த சீடர்கள் வியந்தனர்.

இதென்ன? கழுதை இருந்த இடத்தில், மனிதன் இருக்கிறானே? என்றான் மூடன். பரமார்த்த குரு வந்தார். உன்னைக் கழுதையாகத்தானே வாங்கி வந்தோம். நீ எப்படி மனிதனாக மாறினாய்? என்று கேட்டான் முட்டாள். நான் முதலில் மனிதனாகத்தான் இருந்தேன், ஒரு முனிவரின் கோபத்துக்கு ஆளாகி விட்டேன். அதனால், கழுதையாகப் போகும்படிச் சாபம் இட்டார். இப்போது சாபம் நீங்கி விட்டதால் மனிதனாக மாறி விட்டேன் என்று பொய் சொன்னான் திருடன்.

அவன் சொன்னதை நம்பிய, பரமார்த்தர், மனிதனைக் கழுதையாக மாற்றியதால் தப்பித்தோம். அதே முனிவர் சிங்கத்தையோ, புலியையோ கழுதையாக மாற்றியிருந்தால் இந்நேரம் நம்மையெல்லாம் சாப்பிட்டிருக்கும். நல்ல வேளை, தப்பித்தோம் என்று அனைவரும் மகிழ்ந்தார்கள்.

கழுதை இல்லாமலேயே பண்ணையார் வீட்டில் வேலைக்குச் சேர்ந்த சீடர்கள், துணிகளை மூட்டை கட்டி, பாசி பிடித்த ஒரு குளத்துக்கு கொண்டு சென்றார்கள். வௌ;வேறு நிறங்களில் இருந்த துணிகளைக் கல்லில் தேய்த்துக் கிழித்தும், வெள்ளையாக இருந்த வேட்டியில் பாசியை தோய்த்துப் பச்சை நிறமாக மாற்றியும், ஒரே துணியாக இருந்ததைக் பல துண்டுகளாகயும் ஆக்கி, பண்ணையார் வீட்டுக்குச் சென்றனர்.

நீங்கள் ஒரு துணி போட்டீர்கள். நான் அதையே பத்தாக்கிக் கொண்டு வந்திருக்கிறேன் என்று பெருமை பேசினான் முட்டாள். வெள்ளையைப் பச்சையாக்கி விட்டேன். என்று குதித்தான் மடையன்.

துவைத்த துணிகளைப் பார்த்த பண்ணையாருக்கு கோபம் வந்து அவர்களை விரட்டி அடித்தார். உம்... நம் தொழில் திறமையை யாருமே புரிந்து கொள்ள மாட்டார்கள் போலிருக்கிறதே என்று சீடர்கள். வருத்தப்பட்டு மடத்துக்குத் திரும்பினார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!