லட்சுமி விலாஸ் வங்கிப் பிரச்சினை பூதாகரமாக எழுந்துள்ள நிலையில், மற்ற வங்கிகளில் டெபாசிட் செய்தோர் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.
வாராக் கடன் பிரச்சினை!
வாராக் கடன் பிரச்சினை என்பது இந்திய வங்கிகள் நீண்ட காலமாகவே சந்தித்து வரும் பெரும் பிரச்சினையாக இருந்து வருகிறது. வங்கிகளில் கடன் வாங்கிவிட்டுத் திருப்பிச் செலுத்தாமல் நாட்டை விட்டே தப்பியோடுவதும், போலியான ஆவணங்களைக் கொண்டு கடன் வாங்கி மோசடி செய்வதும் வாடிக்கையாகிவிட்டது. இந்தப் பிரச்சினைகளைச் சமாளிக்க முடியாத வங்கிகள் சில திவால் நிலைக்குச் சென்றுவிட்டன. இதனால் அவ்வங்கிகளில் டெபாசிட் செய்த வாடிக்கையாளர்களின் பணத்துக்கும் ஆபத்து ஏற்பட்டது. இதுபோன்ற பிரச்சினைகளால் வங்கிகளில் டெபாசிட் செய்யவே தயக்கம் காட்டுபவர்களும் உண்டு.
ஒரு வங்கி திவால் நிலைக்குச் செல்லும்போது அந்த வங்கியில் டெபாசிட் செய்துள்ளவர்களின் பணத்துக்குக் குறிப்பிட்டு அளவில் காப்பீடு வழங்கப்படுகிறது. அதேபோல, திவால் நிலைக்குச் செல்லும் வங்கியை டெபாசிட் பணத்தை வைத்து மீட்கலாம் என்று கூறப்படுகிறது. இதனால் வங்கிகளில் டெபாசிட் செய்வோரின் பணம் இல்லாமல் போய்விடுமோ என்ற அச்சம் நிலவுகிறது. கடந்த 30 மாதங்களில் மட்டும் லட்சுமி விலாஸ் வங்கியுடன் சேர்த்து மொத்தம் ஐந்து வங்கிகள் இதுபோன்ற பிரச்சினைகளில் சிக்கியுள்ளன. சமீபத்தில் யெஸ் வங்கி திவால் நிலைக்குச் சென்றது. வாராக் கடன் பிரச்சினையாலும் நிதி நெருக்கடியாலும் தொடர்ந்து இயங்க முடியாமல் முடங்கியது. பின்னர் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட வங்கிகள் முதலீடு செய்து யெஸ் வங்கியைக் காப்பாற்றின.
தனியார் துறை வங்கியான யெஸ் வங்கி வாராக் கடன் பிரச்சினையில் மூழ்கித் தொடர்ந்து இயங்க முடியாமல் தவித்தது. யெஸ் வங்கியை மத்திய ரிசர்வ் வங்கி ஏப்ரல் 3 வரையில் தனது கட்டுப்பாட்டுக்குள் எடுத்தது. கடந்த ஐந்து ஆண்டுகளில் இவ்வங்கியின் வாராக் கடன் ரூ.1.85 லட்சம் கோடிக்கு மேல் உயர்ந்தது. இதுபோன்ற சூழலில் யெஸ் வங்கியின் பங்குகளை விற்பனை செய்து நிதி திரட்டும் முயற்சியில் ரிசர்வ் வங்கியும் மத்திய அரசும் ஈடுபட்டன. இதன்படி, இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, யெஸ் வங்கியில் ரூ.7,250 கோடியை முதலீடு செய்தது. ஐசிஐசிஐ, ஹெச்டிஎஃப்சி, ஆக்சிஸ், கோடாக் போன்ற வங்கிகளும் முதலீடு செய்து உதவிக்கரம் நீட்டின.
தமிழகத்தைச் சேர்ந்த இந்த லட்சுமி விலாஸ் வங்கியை மத்திய ரிசர்வ் வங்கு முழுவதுமாகத் தனது கட்டுப்பாட்டுக்குள் எடுத்துள்ளது. சிறு குறு நடுத்தர நிறுவனங்களுக்குக் கடன் வழங்கிக் கொண்டிருந்த இவ்வங்கி பெரு நிறுவனங்கள் துறைக்கும் கடன் வழங்கி வாராக் கடன் பிரச்சினையில் சிக்கியது. லட்சுமி விலாஸ் வங்கியின் வாராக் கடன்கள் 2020 மார்ச் மாத நிலவரப்படி 25.39 சதவிகிதமாக அதிகரித்தது. வாராக் கடன் பிரச்சினை மட்டுமல்லாமல் லட்சுமி விலாஸ் வங்கியின் டெபாசிட் தொகையும் குறையத் தொடங்கியது. இவ்வங்கியின் டெபாசிட் தொகை ரூ.31,000 கோடியிலிருந்து ரூ.21,000 கோடியாகக் குறைந்துவிட்டது. இதனால் கடந்த 2019 செப்டம்பர் மாதத்தில் லட்சுமி விலாஸ் வங்கியைச் சீரமைப்புத் திட்டத்தின் கீழ் ரிசர்வ் வங்கி கொண்டு வந்தது.
லட்சுமி விலாஸ் வங்கியில் பணம் போட்டவர்களுக்கு சில தினங்களுக்கு முன்னர் மத்திய அரசு கட்டுப்பாடு விதித்திருந்தது. அதாவது, வருகிற டிசம்பர் 16ஆம் தேதி வரையில் லட்சுமி விலாஸ் வங்கியை மொரட்டோரியத்தின் கீழ் கொண்டுவருவதாகவும், லட்சுமி விலாஸ் வங்கியில் டெபாசிட் செய்தவர்கள் ஒரு மாதத்துக்கு அதிகபட்சமாக ரூ.25,000 மட்டுமே வித்டிரா செய்ய முடியும் எனவும் அரசு தரப்பில் உத்தரவிடப்பட்டது. இதனால் இவ்வங்கியில் டெபாசிட் செய்தவர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. தங்களது பணம் அனைத்தும் இல்லாமல் போய்விடுமோ என்று டெபாசிட் செய்தவர்கள் அஞ்சுகின்றனர். எனினும், லட்சுமி விலாஸ் வங்கியில் முதலீடு செய்தவர்களின் பணம் பாதுகாப்பாக இருக்கிறது என்ற உத்தரவாதத்தை வழங்குவதாக அந்த வங்கியின் நிர்வாகி டி.என். மனோகரன் தெரிவித்துள்ளார்.
லட்சுமி விலாஸ் வங்கியில் கிட்டத்தட்ட 20 லட்சம் பேர் டெபாசிட் செய்துள்ளனர். அவர்களின் டெபாசிட் பணம் மட்டும் கிட்டத்தட்ட ரூ.6,100 கோடி. ஒருவேளை வங்கி திவால் ஆகிவிட்டால் அதில் டெபாசிட் செய்தவர்களுக்குக் காப்பீடு கிடைக்கும். ஆனால் ரிசர்வ் வங்கியின் விதிமுறைப்படி, ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரையில் மட்டுமே காப்பீடு வழங்கப்படும். அப்படியென்றால் ரூ.5 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்தவர்களின் நிலை என்ன ஆகும்? இதற்கு முன்னர் அதை விடக் குறைவாக ரூ.1 லட்சம் மட்டுமே காப்பீடு இருந்தது. மும்பையைச் சேர்ந்த பிஎம்சி வங்கியில் பிரச்சினை ஏற்பட்ட பிறகுதான் காப்பீட்டுத் தொகை உயர்த்தப்பட்டது. எனவே ஒரு வங்கியில் மொத்தமாக ரூ.5 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்வது ஆபத்துதான். அதற்குப் பதிலாக வெவ்வேறு வங்கிகளில் பிரித்து டெபாசிட் செய்து வைக்கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக