கடந்த அக்டோபர் மாதம் ஹீரோ கிளாமர் மோட்டார்சைக்கிள்களின் விற்பனை மிக சிறப்பாக இருந்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதம் அதிக இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்த நிறுவனங்களின் பட்டியலில், ஹோண்டா, டிவிஎஸ், பஜாஜ், சுஸுகி, ராயல் என்பீல்டு மற்றும் யமஹா உள்ளிட்ட நிறுவனங்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி, ஹீரோ மோட்டோகார்ப் முதலிடத்தை பிடித்துள்ளது. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் கடந்த அக்டோபர் மாதம் 7,91,137 இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது.
ஆனால் கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் மாதம் 5,86,988 இரு சக்கர வாகனங்கள் மட்டுமே ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தால் விற்பனை செய்யப்பட்டிருந்தன. ஒவ்வொரு மாதமும் அதிகம் விற்பனையாகும் மோட்டார்சைக்கிள்களின் டாப்-10 பட்டியலில் ஹீரோ நிறுவனத்தின் ஸ்பிளெண்டர், எச்எஃப் டீலக்ஸ், கிளாமர் மற்றும் பேஷன் ஆகிய மாடல்கள் வழக்கமாக இடம்பெறும்.
கடந்த அக்டோபர் மாதமும் அதேதான் நடந்துள்ளது. இதில், கிளாமர் மிக சிறப்பான விற்பனை
வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் நாடு முழுவதும் உள்ள ஹீரோ
மோட்டோகார்ப் நிறுவனத்தின் டீலர்ஷிப்களுக்கு 78,439 கிளாமர் பைக்குகள் அனுப்பி
வைக்கப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்த எண்ணிக்கை வெறும்
40,896 ஆக மட்டுமே இருந்தது.
இதன் மூலம் ஹீரோ கிளாமர் 91 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இது மிக பிரம்மாண்டமான வளர்ச்சி என்பதில் சந்தேகமில்லை. இன்னும் சொல்லப்போனால் இந்திய சந்தையில் ஹீரோ கிளாமர் மோட்டார்சைக்கிள்களின் விற்பனை கிட்டத்தட்ட அப்படியே இரட்டிப்பாகியுள்ளது. இதன் மூலம் சமீபத்தில் நிறைவடைந்த பண்டிகை காலத்தில் ஹீரோ சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது.
இந்தியாவில் கடந்த அக்டோபர் 17ம் தேதி முதல் நவம்பர் 17ம் தேதி வரை பண்டிகை காலம் நீடித்தது. இதற்கு இடைப்பட்ட 32 நாட்களில் மட்டும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ஒட்டுமொத்தமாக 14 லட்சத்திற்கும் மேற்பட்ட மோட்டார்சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து அனைவரையும் பிரம்மிக்க வைத்துள்ளது.
ஹீரோ நிறுவன மோட்டார்சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்களின் இந்த பிரம்மாண்ட விற்பனை எண்ணிக்கைக்கு பண்டிகை காலமே மிக முக்கியமான காரணம். இதுதவிர கொரோனா வைரஸ் அச்சமும் இரு சக்கர வாகனங்களின் விற்பனை உயர்விற்கு ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது. கொரோனா வைரஸ் பிரச்னை ஏற்பட்ட பின் பொது போக்குவரத்தை மக்கள் தவிர்க்க தொடங்கியுள்ளனர்.
பேருந்து, ஆட்டோ, டாக்ஸி உள்ளிட்ட வாகனங்களில் சென்றால் கொரோனா தொற்றுக்கு ஆளாக நேரிடும் என்பது பலரின் அச்சமாக உள்ளது. எனவே அதற்கு பதிலாக சொந்த வாகனங்களில் பயணிப்பதை பலர் பாதுகாப்பானதாக கருதுகின்றனர். இதன் எதிரொலியாகவும் இரு சக்கர வாகனங்களின் விற்பனை உயர்ந்துள்ளது.
அதே சமயம் பொது போக்குவரத்தில் நிலவி வரும் பற்றாக்குறையும் பலர் தற்போது இரு சக்கர வாகனங்களை வாங்க ஒரு காரணமாக அமைந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக