அமெரிக்காவில் டெஸ்லா கார் ஒன்று விபத்தில் சிக்கியிருக்கும் சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்தில் உள்ள ஒரேகான் சிட்டியில் நடந்துள்ள விபத்து ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெஸ்லா மாடல் 3 (Tesla Model 3) காரை ஓட்டி வந்த ஒருவர், சம்பவ இடத்தில் இருந்த பல மரங்களில் மோதியுள்ளார். விபத்து நிகழ்ந்த சமயத்தில், அந்த கார் மணிக்கு 160 கிலோ மீட்டர்கள் என்ற உச்சகட்ட வேகத்தில் வந்ததாக கூறப்படுகிறது.
இந்த விபத்தில் கார் பலத்த சேதமடைந்துள்ளது. அதிவேகத்தில் வந்தது மட்டுமல்லாது, அந்த காரின் ஓட்டுனர் குடிபோதையில் இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவை இரண்டும்தான் இந்த விபத்திற்கு மிக முக்கியமான காரணங்களாக பார்க்கப்படுகின்றன. ஆனால் பலத்த சேதமடைந்த காரில் இருந்து அதன் ஓட்டுனர் எப்படியோ வெளியேறி விட்டார்.
அதன்பின்னர் அங்கிருந்து தப்பிய அவரை, இறுதியில் அதிகாரிகள் பிடித்து விட்டனர். அதிவேகத்திலும், குடிபோதையிலும் வாகனங்களை ஓட்டுவது எவ்வளவு ஆபத்தானது? என்பதை மக்களுக்கு உணர்த்துவதற்காக, விபத்தில் நொறுங்கிய காரின் புகைப்படங்களை கோர்வாலிஸ் காவல் துறையினர் சமூக வலை தளங்களில் வெளியிட்டுள்ளனர்.
மரங்கள் தவிர, மின்சார கம்பம் மற்றும் டெலிபோன் ஜங்ஷன் பாக்ஸ் ஆகியவற்றின் மீதும் அந்த ஓட்டுனர் காரை மோதியதாக கூறப்படுகிறது. கார் அதிவேகத்தில் மோதிய காரணத்தால், காரில் இருந்து சில பாகங்கள் பறந்து சென்று, அருகில் இருந்த ஒரு வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் காரில் இருந்து ஒரு சக்கரம் கழன்று சென்று, அருகில் இருந்த ஒரு கட்டிடத்தின் குடிநீர் குழாயை உடைத்ததாகவும், இதன் காரணமாக அப்பகுதி வெள்ளக்காடாக மாறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எப்படியோ விபத்தில் சிக்கிய காரின் ஓட்டுனர் சிறு காயங்களுடன் தப்பி விட்டதாக கூறப்படுகிறது.
மேலும் காரில் இருந்து வெளியேறியவுடன் அவர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். எனினும் விபத்து நடந்த இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் காவல் துறையினர் அவரை பிடித்து கைது செய்து விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
டெஸ்லா கார்கள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் சமீப காலங்களில் அடிக்கடி நடந்து வருகின்றன. இதுபோல் குடிபோதையிலும், அதிவேகத்திலும் காரை ஓட்டுவதுடன் மட்டுமல்லாது, டெஸ்லாவின் ஆட்டோபைலட் தொழில்நுட்பத்தையும் சிலர் தவறாக பயன்படுத்துகின்றனர். காரை ஆட்டோபைலட்டில் இயங்க வைத்து விட்டு, செல்போனில் விளையாடுவது, படம் பார்ப்பது போன்ற விபரீதமான காரியங்களை சில ஓட்டுனர்கள் செய்கின்றனர்.
டெஸ்லா கார்களை பொறுத்தவரை, கார் ஆட்டோபைலட்டில் இருந்தாலும் கூட, ஓட்டுனரின் கண்காணிப்பு அவசியம் என தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் ஒரு சில ஓட்டுனர்கள் இந்த எச்சரிக்கைக்கு மதிப்பு கொடுக்காமல், தூங்கி கொண்டே பயணிப்பது போன்ற காரியங்களையும் செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக