அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள கேரள மாநில சட்டமன்ற தேர்தல் குறித்து முக்கியத் தகவல் வெளியாகியுள்ளது
கேரள
மாநிலத்தில் வரும் ஜனவரி 20ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகவுள்ளது.
வாக்காளர் அடையாள அட்டை பெயர் திருத்தம், நீக்கம் உள்ளிட்டவற்றிற்கு விண்ணபிக்க
இன்றே கடைசி நாள் ஆகும். இந்த கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட மாட்டாது என்று
தலைமை தேர்தல் அதிகாரி தீகா ராம் மீனா தெரிவித்துள்ளார். இந்த சூழலில் கேரள
வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த சட்டமன்ற
தேர்தலில் ஒரு வாக்குச் சாவடியில் 1,400 வாக்காளர்கள் வாக்களித்தனர். அதன்படி,
25,041 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன.
ஆனால் வரும் தேர்தலில் ஒரு வாக்குச்சாவடிக்கு 1,000 வாக்காளர்கள் மட்டும்
வாக்களிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்படவுள்ளது. இதன் காரணமாக கூடுதலாக 15,000
வாக்குச்சாவடிகளை ஏற்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. கடந்த தேர்தலில்
2,31,000 ஊழியர்கள் தேர்தல் பணியாற்றினர். ஆனால் வரும் தேர்தலில் கூடுதலாக 10,000
ஊழியர்கள் தேவைப்படுகின்றனர்.
மேலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் அதிகமாக தேவைப்படுகின்றன. அதன்படி,
51,500 பேலட் யூனிட்கள், 51,100 கன்ட்ரோல் யூனிட்கள், 55,300 விவிபேட்
இயந்திரங்கள் தேவைப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையொட்டி மகாராஷ்டிரா,
தெலங்கானா ஆகிய மாநிலங்களில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் கேரளாவிற்கு
வருகை புரிய உள்ளன.
தற்போது அனைத்து மாவட்டங்களிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்கட்டமாக பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. இதனைப் பார்வையிட இந்திய தேர்தல் ஆணையத்தின் 6 மூத்த அதிகாரிகள் இன்று கேரளா வருகின்றனர். இவற்றைக் கருத்தில் கொண்டு அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தலை இரண்டு கட்டங்களாக நடத்தலாம் என்று சில மாவட்ட ஆட்சியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதற்கு அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி இறுதி முடிவெடுத்து வரும் மார்ச் மாதம் சட்டமன்ற தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக