Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 3 டிசம்பர், 2020

இந்தியாவிடம் அரிசி வாங்கிய சீனா! 30 ஆண்டுகள் கழித்து இறக்குமதி!


சென்ற ஆண்டில் சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு உலகம் முழுவதும் பரவியது. இதையடுத்து சீனாவுடன் வர்த்தக உறவு வைத்துக்கொள்ளவே உலக நாடுகள் தயக்கம் காட்டுகின்றன. மறுபுறம் இந்திய எல்லைப் பகுதியில் சீனாவின் அத்துமீறலால் இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக உறவிலும் விரிசல் ஏற்பட்டது. சீனாவிலிருந்து மேற்கொள்ளும் இறக்குமதியை இந்திய அரசு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்து வருகிறது. சீனாவைச் சேர்ந்த மொபைல் செயலிகளுக்கும் இந்தியாவில் தடை விதிக்கப்பட்டு வருகிறது.

மற்ற நாடுகளில் இருந்து சீனாவுக்கான இறக்குமதி குறைந்துள்ளதால் இந்தியா மீது கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது. பல ஆண்டுகளுக்குப் பிறகு அரிசியை இந்தியாவிலிருந்து சீனா இறக்குமதி செய்துள்ளது. மற்ற நாடுகளை விட இந்தியாவில் அரிசி விலை குறைவாக இருப்பதாலும் சீனாவின் பார்வை இந்தியா மீது திரும்பியுள்ளது. சீனா ஒவ்வொரு ஆண்டும் 40 லட்சம் டன் அளவிலான அரிசியை இறக்குமதி செய்கிறது. ஆனால் இந்தியாவில் அரிசியின் தரம் குறைவாக இருப்பதாகக் கூறி இந்திய அரிசியை இறக்குமதி செய்யாமல் இருந்தது. இந்நிலையில், வேறு வழியில்லாமல் இந்திய அரிசியை இறக்குமதி செய்யத் தொடங்கியுள்ளது.

வருகிற டிசம்பர் - பிப்ரவரி மாதங்களில் மட்டும் இந்தியாவிலிருந்து 1 லட்சம் டன் அரிசியை இறக்குமதி செய்ய சீனா ஒப்பந்தம் செய்துள்ளது. டன் ஒன்றுக்கு 300 டாலர் என்ற விலையில் அரிசி ஏற்றுமதி செய்யப்படவுள்ளது. தாய்லாந்து, மியான்மர், பாகிஸ்தான், வியட்நாம் போன்ற நாடுகள் சீனாவுக்கான அரிசி ஏற்றுமதியைக் குறைத்துள்ள நிலையில் இந்தியாவுக்கு இந்த வாய்ப்பு வந்துள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். விலையைப் பொறுத்தவரையில், மேற்கூறிய நாடுகளில் அரிசி விலை இந்தியாவை விட 30 டாலர் வரையில் அதிகமாக இருக்கிறது.

இந்த ஆண்டின் ஜனவரி - அக்டோபர் மாதத்தில் இந்தியாவின் அரிசி ஏற்றுமதி 43 சதவீதம் வளர்ச்சி கண்டிருந்தது. தற்போது சீனாவும் இறக்குமதி செய்யத் தொடங்கியுள்ளதால் அடுத்து வரும் மாதங்களில் இந்தியாவின் அரிசி ஏற்றுமதி மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக