
பன்னேர்கட்டா தேசிய பூங்காவில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தின் வீடியோ சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
பிரம்மாண்டமான எஸ்யூவி கார் ஒன்றை வங்க புலி ஒன்று இழுக்கும் வீடியோ காட்சி சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. பெங்களூரில் உள்ள பன்னேர்கட்டா தேசிய பூங்காவில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. ஒன்றரை நிமிடம் ஓடும் இந்த வீடியோ, புலி எவ்வளவு சக்தி வாய்ந்தது? என்பதை நமக்கு எடுத்துக்காட்டுகிறது.
மஹிந்திரா ஷைலோ (Mahindra Xylo) காரின் பின் பகுதியை, புலி தனது வாயால் கடித்து இழுப்பதை இந்த வீடியோவில் நம்மால் பார்க்க முடிகிறது. இத்தனைக்கும் இந்த சம்பவம் நடைபெற்றபோது கார் காலியாக இல்லை. உள்ளே சுற்றுலா பயணிகள் அமர்ந்திருந்தனர். மஹிந்திரா ஷைலோ காரின் எடை 1,875 கிலோ என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
இதுதவிர உள்ளே அமர்ந்திருந்த 6 பேரின் எடையையும் சேர்க்க வேண்டியுள்ளது. எனவே கிட்டத்தட்ட 2 டன் எடையை புலி இழுத்துள்ளது. சம்பவத்தின்போது பேட்டரியில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக மஹிந்திரா ஷைலோ காரை ஸ்டார்ட் செய்ய முடியவில்லை. அத்துடன் சுற்றிலும் புலிகள் இருந்த காரணத்தால், பயணிகள் இறங்கி காரை தள்ளி விட்டு ஸ்டார்ட் செய்யவும் முயற்சிக்கவில்லை.
இதுகுறித்து பன்னேர்கட்டா தேசிய பூங்காவின் அதிகாரிகள் கூறுகையில், ''பேட்டரியில் ஏற்பட்ட பிரச்னைகள் காரணமாக கார் அப்படியே நின்று விட்டது. ஓட்டுனரால் காரை மீண்டும் ஸ்டார்ட் செய்ய முடியவில்லை. கார் நின்று கொண்டிருந்த காரணத்தால், புலி அங்கு வந்து விளையாடியுள்ளது. சிறிது நேரத்தில், அந்த காரை எங்களது மீட்பு குழு 'டோ' (Tow) செய்து பத்திரமாக மீட்டது'' என்றனர்.
அத்துடன் தற்போது வெளியாகியுள்ள வீடியோ பழையது என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சுமாராக 2 மாதங்களுக்கு முன்னர் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. புலிகள் மிகவும்
வலிமையானவை என்பது நமக்கு நன்றாகவே தெரியும். எனவே மஹிந்திரா ஷைலோ போன்ற பெரிய
வாகனங்களை கூட அது இழுத்து விடுகிறது.
இனி மஹிந்திரா ஷைலோ காரை பற்றி பார்க்கலாம். தற்போது மஹிந்திரா நிறுவனம் ஷைலோ காரை
விற்பனையில் இருந்து விலக்கியுள்ளது. மிகவும் கடுமையான பாதுகாப்பு விதிமுறைகள்
மற்றும் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகள் காரணமாகவே மஹிந்திரா நிறுவனம் ஷைலோ
மாடலை விற்பனையில் இருந்து விலக்கியுள்ளது.
மஹிந்திரா ஷைலோ பெரிய வாகனம். இதன் நீளம் 4520 மிமீ. அகலம் 1,850 மிமீ. வீல்பேஸ் 2760 மிமீ. 2.2 லிட்டர் mHawk டீசல் இன்ஜின் மற்றும் 2.5 லிட்டர் CRDe டீசல் இன்ஜின் என மொத்தம் 2 டீசல் இன்ஜின் தேர்வுகளுடன் மஹிந்திரா ஷைலோ விற்பனை செய்யப்பட்டது. தற்போது மஹிந்திரா நிறுவனம் அதன் பிரபலமான ஸ்கார்பியோ மற்றும் எக்ஸ்யூவி500 எஸ்யூவிகளின் அடுத்த தலைமுறை வெர்ஷன்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
ஸ்கார்பியோ மற்றும் எக்ஸ்யூவி500 எஸ்யூவிகளின் புதிய தலைமுறை மாடல்கள் இந்தியாவில் சாலை சோதனைக்கு உட்படுத்தப்படும்போது பல முறை கேமரா கண்களில் சிக்கியுள்ளன. நடப்பாண்டில் ஏதேனும் ஒரு சமயத்தில் இந்த 2 புதிய மாடல்களையும் மஹிந்திரா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக