விழுப்புரத்திலிருந்து 26 கி.மீ தொலைவில் அமைந்துள்ள திருநாவலூர், ஒரு புகழ்பெற்ற தேவாரத் தலமாகும். இத்தலத்தில் பக்தஜனேஸ்வரராக இறைவன், மனோன்மணி அன்னையுடன் அருள்பாலிக்கிறார்.
இது சுந்தரர் சுவாமிகள் அவதரித்த புண்ணியத் தலமாகவும், தேவாரப் பாடல் பெற்ற 276 சிவாலயங்களில் 219-ஆவது தலமாகவும் விளங்குகிறது. இந்தத் தலத்தில் பிரம்மா, விஷ்ணு, சண்டிகேசுவரர், சப்தரிஷிகள், கருடன், சுந்தரர், சடைய நாயனார், இசைஞானியார், நரசிங்க முனையர் போன்றோர் இறை வழிபாடு செய்தனர்.
பொதுவாக, சிவாலயங்களில் தென்முகத்துடன் காட்சியளிக்கும் தட்சிணாமூர்த்தி, ஆலமரத்தின் கீழ் அமர்ந்த நிலையில் இருப்பார். கலைகளுக்கும் கல்விக்கும் குருவாக விளங்குவதால், இவர் "குருதட்சிணாமூர்த்தி" என்று போற்றப்படுகிறார். மேலும், பிரம்மாவின் புதல்வர்களான சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் ஆகிய நால்வருக்கும் ஞானம் போதிக்கும் நிலையில், சின்முத்திரை எடுத்து அருள் வழங்குவார்.
ஆனால், திருநாவலூர் கோவிலில் உள்ள தட்சிணாமூர்த்தி, மிகவும் அபூர்வமாக ரிஷபத்தின் முன் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். வலது கையை ரிஷபத்தின் மீது ஊன்றி, இடது கையில் சுவடியை ஏந்திய நிலையில் இவர் அருள்பாலிக்கிறார். இந்த கோலம், மற்ற எந்தக் கோவிலிலும் காண முடியாத ஒரு அதிசய சிறப்பாகும்.
இங்கு அருளும் தட்சிணாமூர்த்தி, பூராட நட்சத்திரத்திற்கு அதிபதியாக விளங்குகிறார். எனவே, பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இவரை வழிபட்டால், அவர்களுக்கு சிறப்பு பலன்கள் கிடைக்கும்.
இத்தலத்தில் சுக்கிரன் ஒரு லிங்கத்தை நிறுவி, இறை வழிபாடு செய்து இறையருள் பெற்றதாக ஐதீகம். இந்த லிங்கம், நவகிரகங்களின் அருகே அமைந்துள்ளது. வெள்ளிக்கிழமைகளில், இவ்விலிங்கத்திற்கு விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
இறைவனையே தோழனாகக் கருதிப் பணிந்த சுந்தரர் பிறந்த திருநாவலூர், ஒவ்வொரு சைவ சமய பக்தர்களும் தரிசிக்க வேண்டிய ஒரு முக்கிய திருத்தலமாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக