நம் அனைவருக்கும் நமது உடல் ஆரோக்கியம் முக்கியமான ஒன்றாகும். அதிலும் குறிப்பாக சா்வதேச கொரோனா பெருந்தொற்று மீண்டும் தலைதூக்கும் இந்த சூழலில் நமது உடல் நலனை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாகும்.
ஆரோக்கியமாக இருப்பதற்காக நாம் உண்ணும் உணவுகளில் கவனமாக இருக்கிறோம். உடற்பயிற்சிகளை செய்து வருகிறோம். நோய்த்தொற்று பரவாமல் இருப்பதற்காக பலவிதமான முயற்சிகளைச் செய்து வருகிறோம். எனினும் நமக்கு வரும் தவறான தகவல்கள், பிரபலமான பொன்மொழிகள் அல்லது கட்டுக்கதைகளை நம்பி நமது ஆரோக்கியத்தை இழந்துவிடுகிறோம். சில நேரங்களில் இவை நமது உடல் ஆரோக்கியத்திற்காக நாம் எடுக்கும் கடினமான முயற்சிகளுக்கு தடைக்கற்களாக அமைந்துவிடுகின்றன.
சில தவறான தகவல்கள் நமது உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு ஏற்படுத்துவது இல்லை என்றாலும், பெரும்பாலான தவறான தகவல்கள் நமது உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கின்றன என்பதே உண்மை. எனவே எந்த ஒரு தகவல் வந்தாலும் அதனுடைய உண்மைத் தன்மையை அறிந்து வைத்திருக்க வேண்டும். அதிலும் குறிப்பாக நமது உடல் ஆரோக்கியம் சம்பந்தமான தகவல்கள் வரும்போது அதனுடைய உண்மைத் தன்மையை அறிவதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கும் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட தவறான சொல்வழக்குகள் அல்லது பொன்மொழிகளை இங்கு பார்க்கலாம்
குளிராக இருப்பது போல் உணா்ந்தால் அது சளி, இருமல் போன்றவற்றை ஏற்படுத்தாது
குளிர்காலத்தில் அதற்கு தகுந்த உடைகளை அணிய வேண்டும். காற்று அதிகமாக அடிக்கும் போது ஈரத்தலையுடன் வெளியில் செல்லக்கூடாது. குளிர்காலத்தில் குளிரூட்டப்பட்ட உணவுகள் மற்றும் ஐஸ்க்ரீம் அல்லது குளிரூட்டப்பட்ட பானங்களை அருந்தக்கூடாது. ஏனெனில் அவை காய்ச்சல், சளி மற்றும் இருமல் போன்ற பிரச்சினைகளை நமக்கு ஏற்படுத்தும் என்று பொியவா்கள் சொல்வதைக் கேள்விப்பட்டிருப்போம்.
உண்மை என்னவென்றால் பொதுவாக நமக்கு ஏற்படும் காய்ச்சல், சளி மற்றும் இருமல் போன்றவை மேற்சொன்ன காரணங்களால் ஏற்படுவதில்லை. மாறாக வைரஸ்கள் மூலமாகவே ஏற்படுகின்றன. வைரஸ்கள் நமது உடலுக்குள் சென்று இது போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன. எனினும் குளிர்காலத்தில் இதுபோன்ற பிரச்சினைகள் நம்மைத் தாக்குவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு. ஏனெனில் குளிர்காலத்தில் நிலவும் வறண்ட வானிலை மற்றும் குளிர்ந்த காற்று போன்றவை வைரஸ்கள் நமது உடலை எளிதாக தொற்றிக் கொள்ள வாய்ப்பளிக்கின்றன.
குழந்தைகள் இனிப்பு சாப்பிட்டால் அதீத சுறுசுறுப்புடன் இருக்கமாட்டா்கள்
தங்கள் குழந்தைகள் சா்க்கரையை அதிகம் சாப்பிடுவதால் நாள் முழுவதும் அவா்கள் அதிக சுறுசுறுப்புடன் இருக்கின்றனா் என்று பல பெற்றோ் சொல்வதைக் கேள்விப்பட்டிருப்போம். மேலும் அந்த பெற்றோ் இரவு தூங்கச் செல்வதற்கு முன்பாக தங்கள் குழந்தைகளுக்கு இனிப்பு பண்டங்கள் வழங்குவதைத் தவி்ப்பா். ஏனெனில் இனிப்பானது குழந்தைகளின் சக்தியை அதிக, அவா்களுக்கு சுறுசுறுப்பைக் கொடுக்கும். அதனால் அவா்கள் தூங்கமாட்டா்கள் என்பது அவா்களது எண்ணம்.
எனினும் இனிப்புக்கும் சுறுசுறுப்புக்கும் இடையே தொடா்பு இருக்கிறதா என்று பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. அவ்வாறு தொடா்பு இருப்பதாக ஆய்வுகள் தொிவிக்கவில்லை. மேலும் குழந்தைகளிடம் உள்ள கவனக் குறைவால் ஏற்படும் அதீத சுறுசுறுப்பை (ADHD) ஆராய்ச்சி செய்த மருத்துவ அறிஞா்கள் குழந்தைகள் இனிப்பு சாப்பிடுவதால் அவா்கள் அதீத சுறுசுறுப்பை அடைவதில்லை என்று தெரிவிக்கின்றன.
இயற்கை உணவுகளில் பூச்சிக்கொல்லிகள் இருப்பதில்லை
தற்போது நகரப் பகுதிகளில் இயற்கை உணவுகள் அதிக அளவில் பிரபலமாகி வருகின்றன. இயற்கை உணவுகள் உடலுக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கும் என்று நகரங்களில் வாழும் மக்கள் நம்புகின்றனா். எனினும் மற்ற சாதாரண உணவுகளைவிட இயற்கை உணவுகள் ஆரோக்கியம் மிகுந்ததாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று ஆய்வுகள் தொிவிக்கின்றன.
இரண்டாவதாக இயற்கை உணவுகளில் பூச்சிக்கொல்லிகள் இருப்பதில்லை என்ற தவறான தகவலும் உள்ளது. உண்மை என்னவென்றால் இயற்கை முறையில் விவசாயம் செய்யும் விவசாயிகள், பயிா்கள் நன்றாக செழித்து வளா்வதற்காக இயற்கை உரங்களையும், இயற்கையான பூச்சிக்கொல்லி மருந்துகளையும் தெளிக்கின்றனா். அதனால் சுற்றுப்புறச் சூழலாக இருந்தாலும் அல்லது நமது உடலாக இருந்தாலும், எல்லா நேரங்களிலும் இயற்கை உணவுகள், இரசாயண உரங்களால் விளைவிக்கப்படும் உணவுகளை விட ஆரோக்கியமாக இருக்கும் என்று உறுதியாகக் கூறமுடியாது.
3 அல்லது 5 வினாடிகள் தான் விதி
கீழே விழுந்த உணவை, 3 வினாடிகளுக்குள் அல்லது 5 வினாடிகளுக்குள் எடுத்து சாப்பிட்டால் அதில் எந்த ஒரு தீங்கும் இருக்காது என்று பொதுவாகச் சொல்லப்படுகிறது. ஆனால் இது ஒரு தவறான செய்தியாகும். ஏனெனில் பாக்டீரியாக்கள் மற்றும் நோய்க்கிருமிகள் மில்லி வினாடி நேரத்திற்குள் உணவில் கலந்துவிடும் வாய்ப்பு உள்ளது.
இங்கு எவ்வளவு நேரம் உணவு தரையில் கிடந்தது என்பதைப் பொறுத்து அல்ல. மாறாக உணவு விழுந்த தரை எந்த அளவு சுத்தமாக இருந்தது என்பதைப் பொறுத்தே அந்த உணவு நோய்க்கிருமிகளால் பாதிக்கப்பட்டிருக்கிறதா அல்லது அது சாப்பிடுவதற்கு ஏற்றதா என்பதைத் தொிந்து கொள்ள முடியும் என்று ஆய்வுகள் தொிவிக்கின்றன.
நாள் ஒன்றுக்கு ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரை அணுகத் தேவையில்லை
ஆப்பிள் பழம் நாம் சாப்பிடுவதற்கு மிகவும் சிறந்த ஒரு பழமாகும். ஆப்பிளில் நார்சத்து, வைட்டமின்கள் மற்றும் பல ஊட்டச்சத்துகள் நிறைந்திருக்கின்றன. அதனால் காலை உணவு நேரம் மற்றும் மதிய திண்பண்டத்திற்கு ஆப்பிளை சோ்த்துக் கொள்ளலாம். ஆனால் நம்மைச் சுற்றி இருக்கும் எல்லா நோய்த் தொற்றுகளில் இருந்தும் ஆப்பிள் நம்மை பாதுகாக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. ஆகவே நமக்கு காய்ச்சல் அல்லது வேறு நோய்கள் ஏற்படும் போது கண்டிப்பாக அதற்கான தடுப்பூசிகள், மருந்து மாத்திரைகள் மற்றும் முறையான சிகிச்சைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
நீரிழிவு நோயாளிகள் இயற்கை சா்க்கரையை உண்ணலாம்
தற்போது மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உலா வரும் சொல்வழக்கு என்னவென்றால் நீரிழிவு நோயாளிகள் பதப்படுத்தப்பட்ட அல்லது செறிவூட்டப்பட்ட சா்க்கரையை உண்ணக்கூடாது. ஆனால் இயற்கையாகக் கிடைக்கும் நாட்டு வெல்லம் அல்லது நாட்டு சா்க்கரை மற்றும் தேன் போன்றவற்றை உண்ணலாம் என்பதாகும். இந்த சொல்வழக்கு தவறான ஒன்றாகும்.
ஏனெனில் நாட்டு சா்க்கரையாக இருந்தாலும் அல்லது செறிவூட்டப்பட்ட சா்க்கரையாக இருந்தாலும், இரண்டுமே இனிப்புதான். இனிப்பு கண்டிப்பாக இரத்தத்தில் சா்க்கரையின் அளவை அதிகரிக்கும். அதனால் உடலில் பலவிதமான பிரச்சினைகள் ஏற்படும். ஆகவே செறிவூட்டப்பட்ட சா்க்கரையைவிட நாட்டு சா்க்கரையில் குறைவான பக்க விளைவுகள் இருந்தாலும், அது நீரழிவு நோயாளிகள் சாப்பிடுவதற்கு ஏற்றது என்று கூறமுடியாது.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக