நாக்குடன் கூடிய 2000 ஆண்டுகள் பழமையான மம்மியை டாபோசிரிஸ் மேக்னா என்ற பண்டைய எகிப்திய தளத்தில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
எகிப்திய தொல்பொருள் அமைச்சகம்
இதுகுறித்து எகிப்திய தொல்பொருள் அமைச்சகம் ஜனவரி 29 ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில், மரணத்திற்கு பிந்தைய வாழ்க்கையிலும் பேசுவார்கள் என்பதை உறுதி செய்ய எம்பாமர்கள் (Embalmers) மம்மியில் தங்கநாக்கை வைத்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரணத்திற்கு பிற்பட்ட வாழ்க்கையில் பாதாள உலகத்தின் கடவுளான ஒசைரிஸை மம்மிகள் சந்திக்க நேர்ந்தால், அவர்கள் கடவுளிடம் பேசக்கூடியவர்களாக இருக்க வேண்டும் என அந்த தங்க நாக்கு பொருத்தப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. அதேபோல் உயிருடன் இருந்தபோது அந்த மம்மிக்கு பேச்சு ஆற்றல் இல்லையா என்பதும் நாக்கு ஏன் தங்கத்தால் செய்யப்பட்டுள்ளது என்பதும் தெளிவாக தெரியவில்லை.
டபோசிரிஸ் மேக்னா என்ற இடத்தில் சாண்டோ டுமிங்கோ பல்கலைக்கழத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் சுமார் 10 ஆண்டுகளாக ஆராய்ச்சி பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள பழமையான கோட்டை ஒன்றில் ஏராளமான மம்மிகள் இருந்துள்ளது. அங்குதான் தங்க நாக்கு பொருத்தப்பட்டிருந்த மம்மிகள் கண்டெடுக்கப்பட்டது.
கிளியோபாட்ரா VII-ன் முகம் பொறிக்கப்பட்ட நாணயங்கள்
ஒசைரிஸ் மற்றும் ஐசிஸ் ஆகியோர்களுக்கு அர்பணிக்கப்பட்ட கோயில்கள் அங்கு உள்ளது. முன்னதாக அதே இடத்தில் ஆராய்ச்சியாளர்கள் கிளியோபாட்ரா VII-ன் முகம் பொறிக்கப்பட்ட நாணயங்கள் கண்டெடுத்தனர். எனவே அதேகாலங்களில் இந்த கோயில்கள் பயன்பாட்டில் இருந்திருக்கலாம் என கணிக்கப்படுகிறது.
மம்மிகள் உள்ளிட்ட அடக்கங்கள் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முந்தையவையாகும். இதில் சில குறிப்பிடத்தக்க புதையலும் இருந்துள்ளது. மொத்தம் சுமார் 19 மம்மிகள் ஆராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஒரேவொரு மம்மியில் வாயில் மட்டும் தங்க நாக்கு இருந்துள்ளது.
இந்த மம்மியின் மண்டைஓடு மற்றும் உடலின் பிற பகுதிகள் எந்தவித சேதமும் இல்லாமல் இருந்துள்ளது.
எகிப்து நாட்டில் பழங்காலத்தில் இறந்தவர்களை மனித உருவில் பெட்டிகள் செய்து அதில் அவர்களின் உடல் மற்றும் ஆபரணங்களை சிலவற்றை வைத்து அடக்கம் செய்வது வழக்கம்.
அதன்படியே இந்த மம்மியும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக