சொர்க்கமும், நரகமும்...!!
----------------------------------------------------------
பூமியில் வாழ்ந்த காலத்தில் தானமும் தர்மமும் செய்த அந்த செல்வந்தர் இறந்த பிறகு சொர்க்கம் சென்றார். ஆனால் அவருக்கு நரகம் எப்படியிருக்கும்? என்று பார்க்க ஆசை ஏற்பட்டது.
அவர் சொர்க்கத்தின் வாசலில் நின்றிருந்த தேவதூதனிடம் தன் ஆசையைக் கூறினார். தேவதூதனும் அவரை அழைத்துச் சென்று நரகத்தைக் காட்டினார்.
செல்வந்தர் கற்பனை செய்து வைத்திருந்தபடி நரகம் அவ்வளவு மோசமாக இல்லை. அங்கே சித்திரவதைகளும் இல்லை. ஆங்காங்கே வட்ட வட்டமாக சாப்பாட்டு மேஜைகள். அவற்றைச் சுற்றி அமர்ந்திருந்தவர்கள் கைகளில் நீளமான கரண்டிகள். மேஜையின் மையத்தில் பெரிய அண்டா. அதன் அடி ஆழத்தில் அமுத பானம் இருந்தது. அதன் சுவையே நாக்கில் உமிழ்நீர் சுரக்க வைத்தது.
ஆனாலும் நரகத்தில் இருந்தவர்கள் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டவர்கள் போல எலும்பும் தோலுமாய் இருந்தார்கள். அவர்கள் சாப்பிட்டே பல நாட்கள் ஆகியிருக்கும் போல் தோன்றியது.
அவர்கள் சக்தியற்றவர்களாய், கரண்டியை அந்த அண்டாவில் விடுவதும், அள்ளிய அமுதத்தை குடிக்க முடியாமல் தடுமாறுவதுமாய் இருந்தனர். கரண்டியின் கைப்பிடி நீளமாக இருந்ததால், கைகளை மடக்கினாலும் அமுதம் வாயை எட்டவில்லை. அழுகையும், எரிச்சலும், சண்டையுமாக ஒவ்வொரு மேஜையிலும் முயற்சி தொடர்ந்தபடி இருந்தது.
செல்வந்தர் இதைப் பார்த்து வேதனைப்பட, நீங்கள் போக வேண்டிய சொர்க்கத்தை பாக்கலாம், வாருங்கள்! என்று அழைத்தான் தேவதூதன். அது நரகத்தின் அருகிலேயே இருந்தது. செல்வந்தர் நடந்தார்.
என்ன ஆச்சரியம்! சொர்க்கத்துக்கும், நரகத்துக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. நரகத்தில் இருப்பதைப் போலவே மேஜைகள், அண்டா, நீளமான கரண்டி, அமுத பானத்தின் அற்புத மணம். இங்கே மனிதர்கள் புஷ்டியாக காணப்பட்டார்கள். அண்டாவின் அருகில் நெரிசல் ஏதும் இல்லை.
இது எப்படி? ஒரு மேஜையை உற்று கவனித்த செல்வந்தருக்குப் புரிந்தது....
அண்டாவின் அடி ஆழத்தில் இருக்கும் அமுதத்தை கரண்டியால் எடுக்கும் ஒருவர், அதை தனக்கு எதிரே இருப்பவருக்கு ஊட்டுகிறார். நீளமான கரண்டியால் இது மட்டுமே சாத்தியம். சுயநலம் இல்லாத எண்ணம் தான் இந்த இடத்தைச் சொர்க்கம் ஆக்கியிருக்கிறது என்பதை உணர்ந்தார் அவர்.
நீதி :
எதையும் கொடுப்பவர்களே எல்லாவற்றையும் பெறுகிறார்கள்.
ரிலாக்ஸ் ப்ளீஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக