இப்போது வரும் புதிய புதிய தொழில்நுட்பங்கள் நமக்கு பல்வேறு வகையில் உதவியாக தான் இருக்கின்றன. ஆனால் ஒரு சில புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதில் அதிக கவனம் வேண்டும். குறிப்பாக ஸ்மார்ட்போன்களில் உள்ள ஆப் வசதிகள், ஏடிஎம் போன்றவற்றை பயன்படுத்தும் போது அதிக கவனமாக இருக்க வேண்டும்.
கர்நாடகா மாநிலம்
இந்நிலையில் கர்நாடகா மாநிலம் மங்களூரில் ஒரு ஏடிஎம் இயந்திரத்தில் ஸ்கிம்மர் எனும் கருவியை பொருத்தி பணத்தை திருடும் கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
வெளிவந்த தகவலின்படி, கேரளா மாநிலத்தை சேர்ந்த கிளாட்வின் ஜிண்டோ ஜாய், அப்துல் மிஜித், ராகுல் மற்றும் டெல்லியை சேர்ந்த தினேஷ் சிங் ராவத் ஆகிய நான்கு பேர் இந்தியாவில் உள்ள பல ஏடிஎம் இயந்திரங்களில் ஸ்கிம்மர் கருவியை பொருந்தி கொள்ளையடித்து வந்துள்ளனர்.
ஜிண்டோ ஜாய்
குறிப்பாக இந்த திருட்டு கும்பலுக்கு ஜிண்டோ ஜாய் தான் மூளையாக செயல்பட்டு வந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.இந்த ஜிண்டோஜாய் பி.காம் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு ஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளையடிக்க அதிக ஆர்வம் காட்டியுள்ளார். இதற்கு வேண்டி தான் 3 பேர் கொண்ட ஒரு குழுவை உருவாக்கியுள்ளார்.
போலி ஏடிஎம் கார்டு
மேலும் இவர்கள் பென்சன் பணம் வாங்குவோர், மாதச் சம்பளம் பொறுவோரின் வங்கி கணக்கை கவனித்து கொள்ளையடுத்து வந்துள்ளனர். இதற்காக போலி ஏடிஎம் கார்டுகளை உருவாக்கியுள்ளனர். அதாவது இவர்கள் ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்கப்போவதுபோல் ஸ்கிம்மர் கருவியை பொருத்தி வந்துள்ளனர். பின்னர் குறிப்பிட்ட வங்கிக் கணக்குகளை நோட்டமிட்டு, அவர்களது கணக்கில் பணம் ஏறியதும், உடனே போலி ஏடிஎம் வைத்து இயந்திரம் மூலம் அந்த பணத்தை எடுத்து வந்துள்ளனர்.
ரகசிய தகவல்
அண்மையில் கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருக்கும் ஒரு ஏடிஎம் இயந்திரத்தில் இந்த திருட்டு கும்பல் ஸ்கிம்மர் கருவியை பொருத்தி சென்றுள்ளது. பின்பு இதுகுறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. உடனே அந்த ஏடிஎம் மையம் இருக்கும் பகுதிக்கு விரைந்து வந்த போலீசார் இந்த 4 பேரையும் மடக்கி பிடித்தனர்.
மேலும் இரண்டு கார்கள், போலி ஏடிஎம் கார்டுகள், 5 ஸ்மார்ட்போன்கள், 2 ஆப்பிள் வாட்ச் போன்றவற்றை இந்த திருட்டு கும்பல் இடம் போலீசார் பறிமுதல் செய்தனர். அதேபோல் ஏடிஎம் மையங்களில் எப்படி ஸ்கிம்மர் கருவியை பொருத்தினோம் என போலீசாரிடம் அந்த கும்பல் செய்து காண்பித்தது. பின்பு இந்த 4 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக