உலகின் மிகப்பெரிய சோஷியல் மீடியா நிறுவனமான பேஸ்புக் குறிப்பிட்ட சில நாடுகளில் அரசியல் தொடர்பான பதிவுகளை பயனாளர்களின் டைம்லைனில் இருந்து குறைக்க போவதாக அறிவித்துள்ளது.
இப்பொது இருக்கும் சமூக ஊடகங்களில் முதன்மையானது பேஸ்புக். உலகம் முழுவதிலும் இருந்து பல பில்லியன் பயனாளர்கள் இதை பயன்படுத்தி வருகின்றனர். அரசியல் கட்சியினரின் பிரச்சாரம் தொடங்கி அரசுக்கு எதிரான போராட்டங்கள் வரை பல்வேறு நிகழ்வுகள் பேஸ்புக் மூலம் ஒருங்கிணைக்கப்படுகிறது.
சமீபத்தில் மியான்மரில் நடைபெற்ற ஆட்சி கவிழ்ப்புக்கு எதிரான மக்கள் போராட்டங்களும் சமூக வலைத்தளங்கள் மூலம் ஒருங்கிணைக்கப்படுகின்றன. அதேநேரம் தேவையற்ற வன்முறைகளும், வெறுப்பு பேச்சுக்களும், சண்டைகளும் பேஸ்புக் மூலம் நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கின்றன.
மியான்மரில் நடைபெற்ற மதரீதியிலான வன்முறைகளும், இந்தியாவில் நடைபெற்ற சில கலவரங்களும் அதற்கு உதாரணமாக சொல்லலாம். இந்த நிலையில் தான் இதுபோன்ற நிகழ்வுகளை காரணம் காட்டி, குறிப்பிட்ட சில நாடுகளில் அரசியல் ரீதியிலான பதிவுகளை பயனர்களின் டைம்லைனில் இருந்து குறைக்கும் முடிவை மேற்கொள்ள போவதாக பேஸ்புக் அறிவித்துள்ளது.
இந்த வாரத்தில் இருந்து கனடா, பிரேசில் மற்றும் இந்தோனேசியாவில் உள்ள பயனர்களுக்கான பேஸ்புக்கில் இருந்து அரசியல் உள்ளடக்கத்தை தற்காலிகமாகக் குறைக்கும். அதேபோல வரும் வாரங்களில் அமெரிக்காவிலும் இதுபோன்ற நடவடிக்கை மேற்கொள்ள போவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், கடந்த ஜனவரி மாதம் அரசியல் வெறுப்பு பேச்சுக்களின் தாக்கத்தை குறைக்க விரும்புவதாக கூறினார். ஏனெனில் மக்கள் எங்கள் தளத்தில் அரசியலை விரும்பவில்லை, மற்றும் அதனால் ஏற்படும் சண்டைகள் அவர்களின் அனுபவங்களை எடுத்துக்கொள்வதையும் விரும்பவில்லை என்றார்.
பேஸ்புக் சமூக வலைத்தளம் வெறுக்கத்தக்க பதிவுகளை சரியாக நீக்குவதில்லை என்கிற குற்றச்சாட்டுகளை தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் குடிமை மற்றும் அரசியல் குழுக்களை பயனர்களுக்கு பரிந்துரைப்பதை நிறுத்தப்போவதாக அறிவித்தது.
அடுத்த சில மாதங்களில், அரசியல் உள்ளடக்கத்திற்கான மக்களின் மாறுபட்ட விருப்பங்களை நன்கு புரிந்துகொள்வதற்கும், அந்த நுண்ணறிவுகளின் அடிப்படையில் பல அணுகுமுறைகளை சோதிப்பதற்கும் நாங்கள் பணியாற்றுவோம். முதல் கட்டமாக, இந்த வாரம் கனடா, பிரேசில் மற்றும் இந்தோனேசியா நாடுகளிலும் வாரங்களில் அமெரிக்காவிலும் உள்ள ஒரு குறிப்பிட்ட சதவீத மக்களுக்கு அவர்களுடைய டைம்லைனில் அரசியல் உள்ளடக்க தகவல்களை தற்காலிகமாக குறைப்போம் என்று கூறப்பட்டுள்ளது
கொரோனா வைரஸ் குறித்த நம்பகமான தகவல்களை மக்களிடையே தக்கவைத்துக்கொள்வதற்காக உலக சுகாதார அமைப்பு மற்றும் அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான மையங்களுக்கு மட்டும் இந்த நடவடிக்கையில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது..
இருப்பினும் பேஸ்புக்கின் இந்த முடிவு ஒரு பக்கம் சாதகமானதாக தெரிந்தாலும் மறுபக்கம் பாதகமான அம்சங்கள் இருப்பதாகவும் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது மக்களை எதை பார்க்க வைக்க வேண்டும் என கட்டளையிடும் சர்வாதிகார நடவடிக்கை, சில நேரங்களில் அரசாங்கங்களுக்கு எதிரான மக்கள் போராட்டங்கள் நடைபெறும் சமயத்தில் இதுபோன்ற வாய்ப்பை அரசுகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள வாய்ப்புள்ளதாகவும் எச்சரித்துள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக