டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டி சீரிஸ் என்ற புதிய வரிசையில் மூன்று புதிய ஆரம்ப வகை டிரக் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. அதிநவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் வந்துள்ள இந்த புதிய டிரக் மாடல்கள் குறித்த அனைத்து விபரங்களையும் இந்த செய்தியில் பார்க்கலாம்.
டாடா டி சீரிஸ் குடும்ப வரிசையில் T.6, T.7 மற்றும் T.9 என மூன்று விதமான மாடல்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. டாடா டி சீரிஸ் வரிசையிலான டி.6 மாடலுக்கு ரூ.13.99 லட்சமும், டி.7 மாடலுக்கு ரூ.15.29 லட்சமும், டி.9 மாடலுக்கு ரூ.17.29 லட்சமும் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த டிரக்குகள் நகர்ப்புறம் மற்றும் நகரங்களுக்கு இடையிலான போக்குவரத்திற்கு சிறந்ததாக வடிவமைக்கப்பட்டு இருக்கின்றன. 10 அடி முதல் 20 அடி வரையிலான டெக் எனபடும் சுமை ஏற்றும் பகுதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.
டாடா டி சீரிஸ் டிரக் மாடல்கள் 1,900 மிமீ அகலமுடைய கேபினை பெற்றிருக்கின்றன. இவை ஓட்டுனர்களுக்கு சவுகரியமான ஓட்டுதல் அனுபவம், சொகுசான இருக்கைகள் மற்றும் தொழில்நுட்ப வசதிகளை அளிக்கும். இந்த டிரக்குகளின் கேபின் சிறந்த கட்டமைப்பு தரத்துடன் மோதல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டுள்ளன.
சர்வதேச அளவில் டாடா தயாரிப்புகளுக்கு பெரும் அங்கீகாரத்தை பெற்று தந்துள்ள அல்ட்ரா என்ற கட்டமைப்புக் கொள்கையின் கீழ் இந்த டிரக்குகள் உருவாக்கப்பட்டுள்ளன. 4 சக்கரங்கள் மற்றும் 6 சக்கரங்கள் கொண்ட மாடல்களில் கிடைக்கும்.
பால், முட்டை, மருந்துப் பொருட்கள், எரிவாயு சிலிண்டர் வினியோகம், அத்தியாவசதி பொருட்களின் சரக்குப் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து தேவைகளுக்கு இந்த டிரக்குகள் சிறந்ததாக இருக்கும் என்று டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் 'Fleet Edge Telematics Solutions' என்ற வாகன மேலாண்மை செயலியும் இந்த மாடல்களில் கொடுக்கப்படுகிறது. ஓட்டுதல் முறை, வாகனத்தில் இருக்கும் பழுதை கண்டறிவதற்தான வசதிகளை இது வழங்கும்.
இந்த டிரக்குகளில் மியூசிக் சிஸ்டம், யுஎஸ்பி சார்ஜர், டில்ட் மற்றும் டெலிஸ்கோப்பிக் பவர் ஸ்டீயரிங் வீல், டேஷ்போர்டில் இடம்பெற்றிருக்கும் கியர் லிவர் ஆகியவை ஓட்டுனருக்கும், உடன் பயணிப்பவர்களுக்கும் சிறந்த சவுகரியத்தை தரும். எல்இடி டெயில் லைட்டுகள், ஏர் பிரேக்குகள், பாரபோலிக் லீஃப் சஸ்பென்ஷன் ஆகியவையும் இதன் மதிப்பை உயர்த்தும் அம்சங்களாக உள்ளன.
புதிய டாடா டி சீரிஸ் டிரக்குகளில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான 4 எஸ்பிசிஆர் எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 100 எச்பி பவரையும், 300 என்எம் டார்க் திறனையும் வழங்கும். ரேடியல் டயர்கள் மூலமாக அதிக பாதுகாப்பையும், கூடுதல் எரிபொருள் சிக்கனத்தையும் பெற முடியும். இந்த டிரக் மாடல்களுக்கு 3 ஆண்டுகள் அல்லது 3 லட்சம் கிமீ தூரத்திற்கான வாரண்டி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக