சீனாவில் விற்பனையில் இருப்பதைவிட மிக குறந்த விலையில் டெஸ்லா மின்சார கார்கள் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் என முக்கிய அமைச்சர் ஒருவர் தெரிவித்திருக்கின்றார். இதுகுறித்த கூடுதல் தகவலை இப்பதிவில் காணலாம்.
டெஸ்லா நிறுவனத்தின் மின்சார கார்கள் மிக விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கின்றன. இதற்கான பணிகளில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது டெஸ்லா. குறிப்பாக, மின் வாகனங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை அமைக்கும் பணியில் நிறுவனம் தீவிரம் காட்டி வருகின்றது.
வெவ்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்கள் வெளியிட்ட தகவலால் இதன் உற்பத்தி ஆலை எந்த மாநிலத்தில் அமையும் என்பதே பெரும் சந்தேகமாகியிருக்கின்றது. அண்மையில் கர்நாடகா மாநிலத்தின் முதலமைச்சர் பிஎஸ் எடியூரப்பா, தங்களது மாநிலத்திலேயே டெஸ்லா மின்வாகன உற்பத்தி ஆலை அமைய இருப்பதாக சமூக வலை தளப்பக்கத்தின் வாயிலாக தகவல் வெளியிட்டிருந்தார்.
முன்னதாக, தமிழகம், குஜராத் மற்றும் மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்தும் உற்பத்தி ஆலையை அமைப்பதற்கான அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தகுந்தது. இவர்களின் அழைப்பை ஓரம் கட்டிவிட்டு தனது மாநிலத்திற்கு தட்டிச் சென்றது எடியூர்ப்பா அரசு. பெங்களூருவில் உள்ள ஆர்&டி யூனிட்டிலேயே டெஸ்லா கார் உற்பத்தி ஆலை அமைய இருக்கின்றது.
இந்நிலையில், டெஸ்லா மின்சார கார்கள் சீனாவில் விற்பனையில் இருப்பதைக் காட்டிலும் மிகக் குறைந்த விலையில் விற்பனைக்குக் கிடைக்க இருப்பதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இது டெஸ்லா மின்சார கார்களை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்போர் மத்தியில் கூடுதல் ஆர்வத்தைத் தூண்டியிருக்கின்றது.
அண்மையில் இதுகுறித்து பேசிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, அமெரிக்க மின்வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவிற்கு பல்வேறு சிறப்பு சலுகைகளை அரசு வழங்க இருப்பதாக தெரிவித்தார். இது சீனாவில் இருப்பதைக் காட்டிலும் பல மடங்கு வாகன உற்பத்தி செலவைக் குறைக்க நிறுவனத்திற்கு உதவும்.
ஆகையால், அந்நாட்டில் விற்பனையில் இருப்பதைக் காட்டிலும் மிக குறைந்த விலையில் டெஸ்லா எலெக்ட்ரிக் கார்கள் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும் என்பது தெளிவாக தெரிகின்றது. இதனை உறுதிப்படுத்தும் வகையிலேயே மத்திய அமைச்சரின் தகவல் அமைந்திருக்கின்றது.
டெஸ்லா நிறுவனம் தனது இந்திய செயல்பாட்டிற்காக மூன்று முக்கிய அதிகாரிகளை கடந்த ஜனவரி மாதமே நியமித்துவிட்டது குறிப்பிடத்தகுந்தது. இதைத்தொடர்ந்து, வாகனங்களை அறிமுகப்படுத்தும் பணியிலும் நிறுவனம் தீவிரமாக செயல்பட்டு வருகின்றது.
டெஸ்லா நிறுவனம் தற்போது மாடல் எஸ், மாடல் 3, மாடல் எக்ஸ் மற்றும் மாடல் ஒய் என நான்கு விதமான மாடல் மின்சார கார்களை விற்பனைச் செய்து வருகிறது. இதில், டெஸ்லாவின் மாடல் 3 எலெக்ட்ரிக் காரே இந்தியாவில் முதலில் வருவதற்கான அதிகபட்ச வாய்ப்புகள் உள்ளன. இதுவே நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் மற்றும் குறைந்த விலை எலெக்ட்ரிக் காராகும்.
மாடல் 3 மின்சார கார் பல விதமான பேட்டரி மற்றும் மின் மோட்டார்கள் தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. அந்தவகையில், 400 தொடங்கி 650 கிமீ வரையிலான ரேஞ்ஜ் திறனில் இக்கார் கிடைத்து வருகின்றது. இத்தகைய அதிக ரேஞ்ஜ் திறன் கொண்ட வாகனத்தையே இந்தியாவில் டெஸ்லா களமிறக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக