Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 26 மார்ச், 2021

நவநீதேஸ்வரர் - வெண்ணைப்பிரான் திருக்கோவில் சிக்கல்

 Sikkal,Singaravelan Temple,Navaneetheswarar  temple,SikkalSingaravelavarTemple ,SikkalSingaravelan Temple,Sikkal,  Navaneetheswarar and SingaravelarTemple,Sikkal, Sikkal Singaravelavar  Subrahmanya Temple,ArulmiguNavaneetheswarar , Sikkal,Nagapattinam ...

மூலவர் : நவநீதேஸ்வரர் (வெண்ணெய்பெருமான்),வெண்ணைப்பிராண்
அம்மன்/தாயார் : சக்தியாயதாட்சி (வேல்நெடுங்கண்ணி)
தலவிருட்சம் : மல்லிகை
தீர்த்தம் : க்ஷீரபுஷ்கரிணிபாற்குளம்
வழிபட்டோர் : விசுவாமித்திரர், அகத்தியர், கார்த்தியாயனர், நாரதர், முசுகுந்தசக்கரவர்த்தி
தேவாரப் பாடல்கள் :-திருஞானசம்பந்தர்

சைவமும் வைணவமும் இணைந்த ஓர் அற்புத தலம் சிக்கல்.

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 83வது தலம்.

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 146 வது தேவாரத்தலம் ஆகும்.

இத்தலத்தில் இறைவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

கந்தசஷ்டி திருநாளின் முதல்நாள் முருகன் இத்தல அம்மனிடமிருந்து வேல் வாங்கியதாக கூறப்படுகிறது. இதனால் இங்குள்ள அம்மனுக்கு வேல்நெடுங்கண்ணி என்ற பெயர் ஏற்பட்டது.

சூரசம்ஹாரம் -அதற்கான ஆரம்பம் இத்தலமேயாகும். சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சம்ஹாரம் என்பது ஒரு பழமொழி.

இத்தலத்தில் கந்தசஷ்டி விழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. சிக்கல் சிங்காரவேலருக்கு வியர்க்கும் அற்புதம் இன்றளவும் நடைபெறும் தலம் சிக்கல்.

முசுகுந்த சக்கரவர்த்திக்கு ஒரு அந்தணனைக் கொன்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷமும் சாபமும் நீங்கிய தலம் சிக்கல்.

அம்மனின் 64 சக்திபீடங்களில்இதுவும்ஒன்று.

சிவன், பெருமாள், முருகன், அனுமன் என நால்வரும் இத்தலத்தில் அருள்பாலிப்பது கோயில் தனிசிறப்பாகும்.
அருணகிரிநாதர் இத்தல முருகனை குறித்து திருப்புகழ் பாடியுள்ளார்.

கோச்செங்கட்சோழன் கட்டிய 72 மாடக்கோயில்களில் இதுவும் ஒன்று.

விசுவாமித்திர முனிவர் இழந்த தவவலிமையை திரும்பப்பெற்ற தலம் சிக்கல்.

தல வரலாறு:

புராணகாலத்தில் மல்லிகைவனம் என்று அழைக்கப்பட்ட இத்தலத்தில் வசிஷ்டமுனிவர் ஆசிரமம் அமைத்து இத்தலத்து சிவபெருமானை வழிபட்டுவந்தார். அக்காலகட்டத்தில் தேவலோகத்துப் பசுவான காமதேனு பஞ்சம் ஏற்பட்ட அக்காலகட்டத்தில் தான் மாமிசம் புசித்த பிழையின் காரணமாக சாபம் பெற்று இத்தலத்திற்கு வந்தது.

ஆலயத்தில் பாற்குளம் என்றும் க்ஷீரபுஷ்கரணி என்றும் சொல்லப்படும் தீர்த்தத்தில் தன் பாவம் தீர நீராடியது. காமதேனு குளித்தபோது அதனுடைய பால் பெருகி குளம் முழுக்கப் பாலாக மாறியது. அங்கு வந்த வசிஷ்டமுனிவர் பால் குளத்தைப் பார்த்து அதில் இருந்து வெண்ணையை எடுத்து சிவலிங்கமாக்கி அதற்கு பூஜை செய்தார்.

பூஜையை முடித்த பின் அந்த சிவலிங்கத்தை வேறு இடத்தில் வைக்க எண்ணி அதை எடுக்க முயன்றார் அது முடியவில்லை, இதனாலேயே இத்தலம் சிக்கல் என்ற பெயருடன் விளங்குகிறது, வசிஷ்டமுனிவர் வெண்ணையை எடுத்து பூஜை செய்ததால் இத்தல இறைவன் வெண்ணெய்நாதர் ஆனார்.

தேவர்கள், சூரபத்மனிடமிருந்து தங்களை காக்க முருகப்பெருமானிடம் வேண்டிக்கொண்டனர். இதனால் முருகப்பெருமான் சூரனை அழித்து தேவர்களை காத்தார். சிங்காரவேலனுக்கு, அம்மன் தன் சக்தியை வேலாக வழங்கிய இத்தல முருகனுக்கு அர்ச்சனை செய்தால் எதிரிகள் தொந்தரவு விலகி நலம் விளையும் என்பது நம்பிக்கை.

ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம் வேல் வாங்கும் விழாவில் சூரபத்மனை அழிப்பதற்காக
அம்மனிடமிருந்து வேல் வாங்கி முருகப்பெருமான் தன் கோவிலில் வந்து அமர்ந்த பிறகு, வேலின் வீரியம் தாங்காமல் சிக்கல் சிங்காரவேலருக்கு வியர்க்கும், அதை சஷ்டி காலத்தில் பார்க்கலாம், பட்டுத்துணியால் துடைக்க முத்து முத்தாக வியர்வை துளிர்த்துக்கொண்டே இருக்கும் அற்புதம் இன்றளவும் நடைபெறும் தலம் சிக்கல். வசந்தமண்டபத்தில் கார்த்திகை திருநாள் உற்சவத்தின் போது தேவியருடன் சிங்காரவேலவன் எழுந்தருள்வது வழக்கம். அப்போது நிலைக்கண்ணாடி முன் நடத்தப்படும் ஒய்யாளி சேவையைக்காணக் கண்கோடி வேண்டும்.

கோவில் அமைப்பு:

கோச்செங்கட்சோழன் கட்டிய மாடக் கோவில்களில் இத்தலமும் ஒன்றாகும். கோவிலின் ராஜகோபுரம் சுமார்  80 அடி உயரமும் 7 நிலைகளையும் உடையது. கல்வெட்டு இத்தலத்து இறைவனை "பால்வெண்ணெய்நாயனார்" என்று குறிப்பிடுகிறது. இராஜகோபுரத்திறக்கு முன்னால் இரும்புத்தூண்கள் தாங்கும் ஒரு பெரிய கல்யாணமண்டபம் இருக்கிறது.

கோபுரவாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் கார்த்திகை மண்டபம் இருக்கிறது. கீழ்ப்படிக்குப் பக்கத்திலுள்ள சுந்தரகணபதியை தரிசித்த பிறகே கட்டுமலை மேலே செல்லவேண்டும் என்பது வழக்கம்.
 
கோவிலின் மையத்தில் 12 படிகள் கொண்ட ஒரு கட்டுமலைமேல் படிகள் ஏறினால் முன்னதாக, சோமாஸ்கந்தரான ஸ்ரீதியாகேசரின் அற்புதத்தரிசனம். மூலவர் நவநீதேஸ்வரர் சுயம்பு லிங்க வடிவில் அருள்புரியும் சந்நிதியும், கட்டுமலையின் கீழ்பக்கம் வலப்பக்கத்தில் அம்பாள் வேல்நெடுங்கண்ணியின் சந்நிதி மற்றும் பள்ளியறையும் உள்ளன. சிக்கல் சிங்காரவேலர் என்று பிரசித்தி பெற்ற முருகப்பெருமான் சந்நிதியும் உள்ளன. சிக்கல் சிங்காரவேலர் வள்ளி, தெய்வானையுடன் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.

ஐப்பசி மாதவிழாவில் வியர்வை சிந்தும் வேலவர் இவர் தான்.
எட்டுக்குடி, எண்கண், சிக்கல் ஆகிய மூன்று தலங்களில் விளங்கும் முருகப்பெருமான் ஒரே அமைப்பு மூர்த்திகள் இவைகள் ஒரே சிற்பியால் வடிக்கப்பட்டது. வடமேற்கு மூலையில் ஆஞ்சநேயருக்கு தனிசன்னதி உள்ளது.

உள்வாயில் ஒருபுறம், ஸ்ரீவிநாயகர்; இன்னொரு புறத்தில் ஸ்ரீதண்டபாணி, உள்பிராகாரம். இங்கே தான் கொடிமரம் உள்ளது. ஸ்ரீவிநாயகர் மற்றும் அறுபத்து மூவர் மற்றும் சனீஸ்வரன் காட்சியளிக்கின்றனர், கருவறைச் சுவரில் வசிட்டரும் அவருடைய சீடர்களும் காமதேனுவும் வழிபடுவது போன்ற சிற்பம் உள்ளது..

மேற்குச்சுற்றில், ஸ்ரீவிசாலாட்சி சமேத ஸ்ரீகாசிவிஸ்வநாதர் மற்றும் ஸ்ரீகார்த்திகை விநாயகர் காட்சியளிக்கின்றனர். அடுத்து,  ஸ்ரீஆறுமுகருக்கான தனிக்கோயில் காட்சி தரும் அழகு சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட சந்நிதி. வடமேற்கு மூலையில், ஸ்ரீகஜலட்சுமி சந்நிதி. வடக்குச்சுற்றில், ஸ்ரீபைரவர் மற்றும் நவக்கிரக சந்நிதிகள் உள்ளன.

வடக்குத் திருச்சுற்றில், பெருமாளுக்கான தனிக்கோயில். ஸ்ரீகோலவாமனப் பெருமாள் என்பது திருநாமம். ஒருமுறை தேவர்கள், அசுரகுலத்தை சேர்ந்த மகாபலிசக்கரவர்த்தியால் ஏற்படும் கஷ்டங்கள் குறித்து பெருமாளிடம் முறையிட்டனர்.
 இதற்காக திருமால் வாமன அவதாரம் எடுத்த போது இத்தலம் வந்து சிவனை வழிபட்டு மகாபலியை அழிக்கும் ஆற்றல் பெற்றதாக கூறப்படுகிறது. எனவே இத்தல பெருமாள் “கோலவாமனப்பெருமாள்’ என்ற திருநாமத்துடன் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். தாயார் - ஸ்ரீகோமளவல்லித்தாயார். அவருக்கு எதிரே அனுமனும் காட்சியளிக்கிறார்.

சிறப்புக்கள் :

கஷ்டங்கள் தீர இத்தல இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றனர்.

திருவிழா:
சித்திரை பிரமோற்சவம், ஐப்பசி கந்தசஷ்டி, மாதாந்திர கார்த்திகை வழிபாடு.

போன்:  -

குருக்கள் 8608229929

அமைவிடம் மாநிலம் :

தமிழ் நாடு நாகப்பட்டினத்தில் இருந்து 5 கி.மி. தொலைவில் திருவாரூர் செல்லும் சாலைவழியில் சிக்கல் தலம் உள்ளது.

இத்தலத்தில் கந்தசஷ்டி விழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. சிக்கல் சிங்காரவேலருக்கு வியர்க்கும் அற்புதம் இன்றளவும் நடைபெறும் தலம் சிக்கல்.

அம்மனின் 64 சக்திபீடங்களில்இதுவும்ஒன்று. சைவமும் வைணவமும் இணைந்த ஓர் அற்புத தலம் சிக்கல். சூரசம்ஹாரம் -அதற்கான ஆரம்பம் இத்தலமேயாகும். சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சம்ஹாரம் என்பது ஒரு பழமொழி. சிவன், பெருமாள், முருகன், அனுமன் என நால்வரும் இத்தலத்தில் அருள்பாலிப்பது கோயில் தனிசிறப்பாகும். முசுகுந்த சக்கரவர்த்திக்கு ஒரு அந்தணனைக் கொன்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷமும் சாபமும் நீங்கிய தலம் சிக்கல்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக