சொமாட்டோவில் இருந்து உணவு டெலிவரி செய்ய வந்த இளைஞர் தன்னுடைய மூக்கை உடைத்து விட்டதாக பெங்களூருவைச் சேர்ந்த பெண் ஒருவர் இன்ஸ்டா மூலமாக ரத்தத்துடன் வீடியோ பதிவிட்டுள்ளது இணையத்தில் அதிகம் வைரலானது.
இதுகுறித்து வெளியான தகவலின்படி, பெங்களூருவைச் சேர்ந்த ஹிட்டேஷா சந்திரனே என்பவர் கலை நிபுணராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த மார்ச் 9-ம் தேதி சொமாட்டோவில் இருந்து உணவு ஆர்டர் செய்துள்ளார்.
பின்பு அந்த உணவு வருவதற்குச் சற்று தாமதமானதாக தெரிகிறது. எனவே ஆர்டரை ரத்து செய்யுமாறு சொமாட்டோ கஸ்டமர் கேரிடம் பேசிகொண்டிருந்தார் ஹிட்டேஷா சந்திரனே. அந்த சமயம் காமராஜ் என்ற உணவு டெலிவரி செய்யும் நபர் வந்துள்ளார். அப்போது ஹிட்டேஷாவுக்கும், காமராஜுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஹிட்டேஷா தெரிவித்த கருத்து
ஹிட்டேஷா உணவு தாமதம் ஆனதால் அதை எடுத்து செல்லுமாறு காமராஜிடம் கூறியுள்ளார். பின்பு ஏன் இவ்வளவு தாமதமாக டெலிவரி செய்கிறாய் என்று ஹிட்டேஷா கேட்டுள்ளார். அதற்கு காமராஜ் வருவதற்கு தாமதம் ஏற்பட்டது என்று எடுத்துக் கூறியுள்ளார். ஆனால் தொடர்ந்து உணவை திருப்பி எடுத்து செல்லுமாறு ஹிட்டேஷா கூறியுள்ளார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் அதிகரித்த சமயத்தில் ஹிட்டேஷாவின் வீட்டிற்குள் அவர் நுழைய முயன்றதாகக் கூறப்படுகிறது.
எனவே தனது பாதுகாப்பிற்காக செருப்பைக் கையில் எடுத்ததாகவும் இந்த சூழ்நிலையில் சொமாட்டோ டெலிவரி பாய், எனது மூக்கை உடைத்தாக ஹிட்டேஷா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள வீடியோவில் குறிப்பிட்டார்.
இருதரப்பு புகார்களையும் ஏற்றுக்கொண்ட சொமாட்டோ நிறுவனம், இது குறித்து போலீசார் உதவியுடன் விரிவாக விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வரும் காலத்தில் இதுபோன்ற பிரச்சனைகள் எதுவும் நடக்காது என்றும் கூறியது.
இதுகுறித்து சொமாட்டோ டெலிவரி பாய் காமராஜ் வீடியோ ஒன்றை தெரிவித்துள்ளார். உணவு டெலிவரி செய்ய சென்றேன், கொஞ்சம் டிராபிக் அதிகம் அதனால் உணவு டெலிவரிக்கு தாமதம் ஆனது எனவும் கூறினேன். உணவை ஃப்ரீயா கொடுனு சொன்னாங்க, அப்படி பண்ண முடியாது மேடம் இது சிஓடி (கேஷ் ஆன் டெலிவரி) இலவசமாக கொடுக்க முடியாது என கூறினேன்.
கஸ்டமர் கேர் சேட்லையும் இலவசமாக வழங்க முடியாது ரத்து செய்துவிடுங்கள் என தெரிவித்தனர். டெலிவரி உணவை அவரின் வீட்டு கதவின் அருகே வைத்திருந்தேன் அதை மீண்டும் எடுத்தேன். இதில் கோவமடைந்த அந்த பெண் என் பின்னால் வந்து செருப்பால் அடிச்சாங்க, நான் தடுக்க முயன்ற போது அவரது வலது கையில் இருந்த மோதிரம் அவுங்க மூக்கில் பட்டுவிட்டது என கூறினார்.
இரண்டு வருடமாக சொமாட்டோ நிறுவனத்தில் பணியாற்றுகிறேன். என் அம்மா உடல்நிலை சரியில்லாதவர், அப்பா இறந்துவிட்டார். இரண்டு வருட அனுபவத்தில் இந்தமாதிரி கஸ்டமரை பார்த்ததில்லை. நான் தப்பு பண்ணவில்லை எனக்கு சப்போர்ட் பண்ணுங்க என கூறினார்.
இதையடுத்து நெட்டிசன்கள் Men Too மொமெண்டை ஆரம்பித்து சொமாட்டோ ஊழியர் காமராஜுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஒரு இன்ஸ்டா பிரபலம் எதை சொன்னாலும் நம்பி விடுவார்கள் என நினைப்பது வெட்கக் கேடாக உள்ளது என கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக