Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 9 ஏப்ரல், 2021

தமிழகத்தில் மறுவாக்குப்பதிவா? சத்யபிரதா சாகு பரபரப்பு தகவல்!

 


ஸ்கூட்டரில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் விரைவில் முடிவெடுக்கவுள்ளது.

தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் கடந்த 6ஆம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. அதில் வேளச்சேரி தொகுதியில் வாக்குப்பதிவு நிறைவு பெற்ற பின்னர், மூன்று மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்கூட்டரில் கொண்டு செல்லப்பட்டன. இதனைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து, அவர்களை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இந்த சூழலில் வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கொண்டு சென்றது மாநகராட்சி ஊழியர்கள் என்று தெரியவந்தது. இதையடுத்து ஸ்கூட்டரில் எடுத்துச் சென்றது வாக்குப்பதிவிற்கு பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள் அல்ல. இவை பழுதான மாற்று இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரங்கள் என தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான பிரகாஷ் அறிக்கை மூலம் விளக்கமளித்திருந்தார்.


மேலும் சம்பந்தப்பட்ட மாநகராட்சி ஊழியர்களுக்கு போலீசார் சம்மன் அனுப்பினர். இந்நிலையில் தமிழக தலைமை தேர்தல் சத்யபிரதா சாகு பரபரப்பான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, வேளச்சேரியில் இருசக்கர வாகனத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டது முழுக்க முழுக்க விதிமீறல்.


அந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் 50 நிமிடங்கள் பயன்படுத்தப்பட்டு, அதில் 15 வாக்குகள் செலுத்தப்பட்டுள்ளன. இதுதொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் தான் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கும். மறுவாக்குப்பதிவு நடத்தப்படுமா என்பது பற்றியும் தலைமை தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும் என்று தெரிவித்துள்ளார்.

அதிகாரிகளே முன்னுக்கு பின் முரணாக பேசுவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இது தமிழக சட்டமன்ற தேர்தலில் ஏதும் தில்லுமுல்லு நடக்கிறதா என்ற அச்சத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் வேளச்சேரி சட்டமன்ற தொகுதிக்கு மறுவாக்குப்பதிவு நடைபெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக