Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

புதன், 23 ஜூன், 2021

ரூ.10 லட்சம் மதிப்புள்ள மஹிந்திரா பொலிரோ... ரூ.1 லட்சம் மட்டும் அனுப்புங்கள்!! சென்னையில் அரங்கேற இருந்த மோசடி

ரூ.10 லட்சம் மதிப்புள்ள மஹிந்திரா பொலிரோ... ரூ.1 லட்சம் மட்டும் அனுப்புங்கள்!! சென்னையில் அரங்கேற இருந்த மோசடி

மஹிந்திரா பொலிரோ காரை வைத்து சென்னையில் மோசடி சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. அதனை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

கொரோனா வைரஸ் இரண்டாவது அலையின் தாக்கம் நாட்டில் தற்போது மெல்ல மெல்ல குறைந்துவரும் போதிலும் பல தன்னார்வலர்கள் தொடர்ந்து தங்களது சேவைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அத்தகையவர்களுள் ஒருவர் தான் வட சென்னையை சேர்ந்த வசந்த குமார். நண்பர்களுடன் இணைந்து அறக்கட்டளை ஒன்றை நடத்தி அதன் மூலம் இலவச ஆக்ஸிஜன் ஆட்டோ சேவையினை மக்களுக்கு வழங்கி வருகிறார். இவரை டாக்டர் சந்திரசேகரன் சுப்பிரமணியன் என்ற பெயரில் நபர் ஒருவர் கடந்த ஜூன் 6ஆம் தேதி தொடர்பு கொண்டுள்ளார்.

தான் டெல்லியில் உள்ள ஐசிஎம்ஆர் எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் கொரோனாவிற்கு மருந்து கண்டுப்பிடிக்கும் குழுவில் தலைமை ஆராய்ச்சியாளராக இருப்பதாக கூறி அந்த நபர் அவர்களது முந்தைய சமூக பணிகளை குறிப்பிட்டு பாராட்டியுள்ளார்.

மேலும், மக்களுக்கு வழங்க தானும் இலவசமாக மாஸ்க், கிருமிநாசினி போன்றவற்றை அனுப்பி வைப்பதாக அந்த நபர் கூறியதில், உண்மையில் இவர் ஐசிஎம்ஆரில் பணிப்புரியும் ஆராய்ச்சியாளர் தான் என தன்னார்வலர்கள் முழுவதுமாக நம்பி விட்டனர்.

ஆனால் அதன்பின்பே பொலிரோவை வைத்து பெரிய மோசடியை செய்ய அந்த நபர் திட்டமிட்டுள்ளார். சந்திரசேகர் சுப்பிரமணியன் என்ற பெயருடன் தன்னார்வலர்களை மீண்டும் தொடர்பு கொண்டவர், மஹிந்திரா நிறுவனம் இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவன மருத்துவர்களுக்கு இலவசமாக ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொலிரோ கார்களை வழங்கவுள்ளதாக கூறியுள்ளார்.

மேலும் தொடர்ந்து பேசியுள்ள அவர், அதில் ஒரு காரை உங்களது சமூக சேவைகளை பார்த்து வியந்து உங்களுக்கு பரிசாக வழங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அறக்கட்டளையை தொடர்ந்து தொய்வில்லாமல் நடத்துவதற்கு ஒரு கார் கிடைத்துவிட்டது என எண்ணிய தன்னார்வலர்களுக்கு அந்த பொலிரோ காரின் படத்தையும், கார் குறித்த விபரங்களையும் மின்னஞ்சல் வாயிலாக அந்த நபர் அனுப்பியுள்ளார்.

அதனை தொடர்ந்து 10 லட்ச ரூபாய் மதிப்பிலான வாகனத்தை அனுப்பி வைப்பதற்கு ஒரு லட்சம் வரையில் வரி உட்பட சில கட்டணங்களுக்காக செலுத்த வேண்டி இருக்கும் என கூறி வங்கி கணக்கு எண் ஒன்றை தன்னார்வலர்களுக்கு அந்த நபர் அனுப்பி வைத்துள்ளார்.

அந்த வங்கி கணக்கு எண் மஹிந்திரா மருத்துவ அறக்கட்டளை என்ற பெயரில் இருந்துள்ளது. இதனை நம்பிய வசந்தகுமார் முதலில் ரூ.1000 செலுத்தியுள்ளார். அதன்பின் அந்த வங்கி கணக்கை ஆராய்ந்ததில் அது ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் கரூர் வைசியா வங்கி கிளையில் இருப்பது தெரியவந்தது.

இது வசந்தகுமாருக்கு சிறிது சந்தேகத்தை கிளப்பவே, இணையத்தில் சரி பார்த்தப்போது, மஹிந்திரா க்ரூப்பின் மருத்துவ அறக்கட்டளை இவ்வாறான பெயரில் இயங்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. இதற்கிடையில் மீண்டும் தொடர்பு கொண்ட அந்த போலி மருத்துவ ஆராய்ச்சியாளர், தாங்கள் அனுப்பிய ஆயிர ரூபாய் பணம் வந்துவிட்டதாகவும், உங்களது கார் டெல்லியில் இருந்து பெங்களூருக்கு வந்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.

மேலும், முதற்கட்டமாக ரூ.27 ஆயிரத்தை அந்த வங்கி கணக்கில் செலுத்தினால் பொலிரோ கார் உங்களது இடத்திற்கு வந்துவிடும் என்றும் தெரிவித்துள்ளார். இதில் உஷாரான வசந்தகுமார் இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் இணையத்தளத்தில் தேடியப்போது சந்திரசேகர சுப்பிரமணியன் என்ற பெயரில் எந்த ஆராய்ச்சியாளரும் இல்லை.

இதனால் இவர் போலி ஆராய்ச்சியாளர் என்பதை உறுதிப்படுத்தி கொண்ட வசந்தகுமார், இதுகுறித்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீஸார் இதனை விசாரித்து வருகின்றனர். பல நல்லவர்களுக்கு மத்தியில் இது போன்றோரும் இருக்க தான் செய்கின்றனர்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக