Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 10 ஜூன், 2021

ஃ - அஃகு, இதற்க்கு ஆயுத எழுத்து என ஏன் பெயர் வந்தது?


முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டியதில் முதன்மையானது - பலரும் குறிப்பிடுவது போல் 'ஃ' - என்பது ஆயுத எழுத்து அல்ல!

ஆய்த எழுத்து என்பதே சரியான தமிழ்ச் சொல்!

ஆய்தம் - என்றால் நுணுகிய ஒலி என்று பொருள்.
ஃ - என்பது ஓர் நுணுகிய ஒலி. மெய்யெழுத்தாகக் கொள்ளப்படினும், மெய்க்கும் உயிர்க்கும் இடைப்பட்ட தன்மையால் அரை மாத்திரையில் நுணுகி ஒலிக்கிறது.

'ஓய்தல், ஆய்தல், நிழத்தல், சாஅய், ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம்' - தொல்காப்பியம்.

ஆய்தம் என்னும் சொல் ஒலியை நுண்மையாக்கி அதாவது மென்மையாக்கிக் காட்டுவது என்னும் பொருள்பட அமைந்ததாகும். ஒசையினிமை கருதி நுணுகி (அஃகி) ஒலித்தலால் ஆய்தம் எனப்பட்டது.

குறிப்பாக வல்லின எழுத்துக்களை நுண்மையாக்கிக் காட்டவே ஆய்த எழுத்து பயன்படுவதை நாம் காண முடிகிறது.

கீரை 'ஆய்தல்’ என்ற வழக்கை நோக்குக! பெரிய கீரைக் கட்டினைச் சிறுசிறு இலைகளாகப் பிரித்தலே இதன் பொருள்.

இதே போலவே ‘ஃ’ என்கிற ஆய்த எழுத்தானது வல்லின எழுத்துகளுக்கு முன்பாக வரும்போது அதை நுணுகி மென்மையாக்கிவிடும்.
எஃகு, கஃசு, கஃடு, பஃது, பஃறி என்னும் சொற்களில் ஆய்த எழுத்து அடுத்துள்ள வல்லின எழுத்தை மென்மையாக்கிக் காட்டுவதை இவற்றை ஒலித்துப் பார்த்து உணர்ந்துகொள்ளலாம்.

உதாரணமாக, இந்த இரண்டு சொற்களையும் சத்தமாகச் சொல்லிப் பாருங்கள்: அக்கு, எஃகு

இரு சொற்களிலும் ‘கு’ என்ற எழுத்து இருப்பினும் ‘அக்கு’வில் உள்ள ‘கு’வும், ‘எஃகு’வில் உள்ள ‘கு’வும் ஒரேமாதிரி ஒலிப்பதில்லை. சொல்லிப்பாருங்கள்.

முதல் ‘கு’க்கும், இரண்டாவது ‘கு’க்கும் நம் வாய் திறந்து குவிகிற விதமும் , நாக்கு மடங்குகிற விதமும் மாறுபடுவதை தெளிவாக உணர்ந்து கொள்ள முடியும். ‘எஃகு’ என்பதில் உள்ள ‘ஃ’ ஆனது ’கு’ என்ற வல்லின எழுத்தைக் கொஞ்சம் மாற்றி மெல்லினம்போல் ஒலிக்கச் செய்துவிடுகிறது.

நுட்பமான இந்தக் காரணத்தால் ஆய்கிற / மென்மையாக்குகிற எழுத்து என்ற பொருளில் அதனை ‘ஆய்த எழுத்து’ எனப் பெயரிடப்பட்டு அழைத்தனர் நம் முன்னோர்கள்.


துக்கடா :

அஃகான், அஃகேனம், அஃகன்னா, தனிநிலை, முப்புள்ளி, முப்பாற்புள்ளி போன்ற பெயர்களாலும் ஆய்த எழுத்து அழைக்கப்படுகிறது.

ஆய்தல் = நுணுகுதல், சிறுத்தல், கூர்மையாதல்.
ஆய்தம் = நுணுகக் கூராக்கப்பட்ட கத்தி.
ஆய்தம் = நுணுகிய ஒலி.
ஆய்தல் = நுணுகிப் பார்ப்பது; ஆர ஆய்வது ஆராய்ச்சி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக