Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வியாழன், 8 ஜூலை, 2021

பப்ஜி மதன் மனைவி உருட்டுன உருட்ல தமிழகமே ஆடிப்போச்சு! ஆடி ஏ6 கார் பற்றிய இந்த விஷயங்களை யாரும் சொல்ல மாட்டாங்க

பப்ஜி மதன் மனைவி உருட்டுன உருட்ல தமிழகமே ஆடிப்போச்சு! ஆடி ஏ6 கார் பற்றிய இந்த விஷயங்களை யாரும் சொல்ல மாட்டாங்க

பப்ஜி மதன் மற்றும் அவரது மனைவி கிருத்திகா ஆகியோருக்கு சொந்தமான ஆடி ஏ6 காரில் இருக்கும் பிரம்மிக்க வைக்கும் வசதிகளை இந்த செய்தியில் விரிவாக தொகுத்து வழங்கியுள்ளோம்.

ஆடி நிறுவனம் பல கோடி ரூபாயை செலவழித்து முயற்சி செய்திருந்தாலும் கூட தமிழகத்தில் ஏ6 (Audi A6) காருக்கு இந்த அளவிற்கு விளம்பரம் கிடைத்திருக்க வாய்ப்பே இல்லை. ஆடி கார்களை பற்றி அவ்வளவாக தெரியாதவர்கள் கூட ஏ6 என்ற பெயரை தற்போது அதிகமாக உச்சரித்து வருகின்றனர். பப்ஜி மதனின் மனைவி கிருத்திகாதான் இதற்கு காரணம்.

பல்வேறு புகார்களின் பேரில் பப்ஜி மதன் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், அவரது மனைவி கிருத்திகா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது எங்களிடம் ஆடி ஏ6 கார் ஒன்று மட்டும்தான் உள்ளது. சொகுசு கார்கள் இல்லை என கூறினார். அவ்வளவுதான். ஆடி ஏ6 சொகுசு கார் இல்லையா? என நெட்டிசன்கள் கொதித்தெழுந்து விட்டனர்.

உண்மையில் ஆடி ஏ6 சொகுசு கார்தான். இது மிட்-சைஸ் சொகுசு செடான் ரகத்தை சேர்ந்த கார் ஆகும். நமது இந்தியாவில் மட்டுமின்றி, உலகம் முழுவதும் அதிகம் விற்பனையாகி வரும் மிட்-சைஸ் சொகுசு செடான் கார்களில் ஒன்றாக ஆடி ஏ6 திகழ்கிறது. இந்த காரை பற்றிய தகவல்களை தெரிந்து கொள்வதற்கு அனைவரும் தற்போது ஆர்வமாக உள்ளனர்.

எனவே ஆடி ஏ6 காரை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம். ஆடி ஏ6 கார் கடந்த 1994ம் ஆண்டில் இருந்து உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்திய சந்தையில் தற்போது விற்பனையில் இருப்பது எட்டாவது தலைமுறை ஆடி ஏ6 கார் ஆகும். எட்டாவது தலைமுறை ஆடி ஏ6 கார் இந்திய சந்தையில் கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

45 டிஎஃப்எஸ்ஐ பிரீமியம் ப்ளஸ் மற்றும் 45 டிஎஃப்எஸ்ஐ டெக்னாலஜி என மொத்தம் 2 வேரியண்ட்களில் ஆடி ஏ6 கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இன்றைய தேதியில் 45 டிஎஃப்எஸ்ஐ பிரீமியம் ப்ளஸ் வேரியண்ட்டின் விலை 57.08 லட்ச ரூபாய் ஆகவும், 45 டிஎஃப்எஸ்ஐ டெக்னாலஜி வேரியண்ட்டின் விலை 61.81 லட்ச ரூபாயாகவும் உள்ளது.

இங்கே குறிப்பிடப்பட்டிருப்பது எக்ஸ் ஷோரூம் விலை மட்டுமே. ஆன் ரோடு விலை இன்னும் கூடுதலாக வரும் என்பது நம் அனைவருக்கும் தெரியும். முந்தைய தலைமுறை மாடலுடன் ஒப்பிடுகையில், 8வது தலைமுறை ஆடி ஏ6 கார் 7 மிமீ நீளமானது, 12 மிமீ அகலமானது மற்றும் 2 மிமீ உயரமானது. ஆடி ஏ6 காரில் வசதிகளுக்கு சற்றும் பஞ்சமில்லை.

இந்த காரின் உள்ளே ட்யூயல் டச்ஸ்க்ரீன் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இதில் ஒன்று இன்போடெயின்மெண்ட் டிஸ்ப்ளேவாக செயல்படும். மற்றொன்று க்ளைமேட் கண்ட்ரோலுக்கானது. இதுதவிர எட்டாவது தலைமுறை ஏ6 காரில், விர்ச்சூவல் காக்பிட் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோலையும் ஆடி நிறுவனம் வழங்கியுள்ளது.

மேலும் கனெக்டட் கார் தொழில்நுட்பம், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே, வயர்லெஸ் போன் சார்ஜர், 4-ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல், முன் பகுதியில் வென்டிலேட்டட் இருக்கைகள், பார்க் அஸிஸ்ட் உள்ளிட்ட வசதிகளையும் ஆடி ஏ6 கார் பெற்றுள்ளது. அதேபோல் ஆடி ஏ6 காரில் ஏராளமான பாதுகாப்பு வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பை பொறுத்தவரையில், 8 ஏர்பேக்குகள், இபிடி உடன் ஏபிஎஸ், முன் மற்றும் பின் பகுதியில் பார்க்கிங் சென்சார்கள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி ப்ரோகிராம் மற்றும் டிராக்ஸன் கண்ட்ரோல் ஆகியவை மிகவும் முக்கியமானவை. அத்துடன் 360 டிகிரி கேமரா வசதியும் ஆடி ஏ6 காரில் வழங்கப்பட்டுள்ளது. எனவேதான் இதனை வசதிகளுக்கு பஞ்சமில்லாத கார் என்கிறோம்.

அதேபோல் டிசைனிலும் ஆடி ஏ6 கார் மிகவும் கவர்ச்சிகரமாக இருக்கிறது. ஆடி ஏ6 காரின் முன் பகுதியில் வழங்கப்பட்டுள்ள பெரிய க்ரோம் க்ரில் அமைப்பு கம்பீரமான தோற்றத்தை தருகிறது. அத்துடன் எல்இடி ஹெட்லைட்கள், எல்இடி டெயில்லைட்கள் மற்றும் 18 இன்ச் மல்டி-ஸ்போக் அலாய் வீல்கள் ஆகியவையும் வழங்கப்பட்டுள்ளன.

அதே சமயம் இந்த காரின் கேபின் விசாலமானதாக இருப்பதுடன், சன்ரூஃப் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த காரின் லெதர் சுற்றப்பட்ட ஸ்டியரிங் வீல் பிடித்து ஓட்டுவதற்கு அருமையாக இருக்கும். மேலும் பேங் & ஒலுஃப்ஸன் ஆடியோ சிஸ்டம், கப் ஹோல்டர்கள் உடன் சென்டர் ஆர்ம்ரெஸ்ட், டோர்களில் பாட்டில் ஹோல்டர்கள், சார்ஜிங் வசதிக்காக யூஎஸ்பி போர்ட்கள் ஆகியவற்றையும் இந்த கார் பெற்றுள்ளது.

புதிய ஆடி ஏ6 காரில், பிஎஸ்-6 விதிமுறைகளுக்கு இணக்கமான 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு நான்கு-சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் தேர்வு வழங்கப்படுகிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 245 பிஎச்பி பவரையும், 370 என்எம் டார்க் திறனையும் வழங்க கூடியது. இந்த இன்ஜினுடன் 7 ஸ்பீடு ட்யூயல்-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

இன்ஜின் சக்தியானது முன் சக்கரங்களுக்கு செலுத்தப்படுகிறது. மெர்சிடிஸ் பென்ஸ் இ-க்ளாஸ், பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் மற்றும் ஜாகுவார் எக்ஸ்எஃப் உள்ளிட்ட கார்களுடன் ஆடி ஏ6 போட்டியிட்டு வருகிறது. ஆடி ஏ6 காரை பற்றிய உங்கள் சந்தேகங்கள் நிவர்த்தியாகி இருக்கும் என நம்புகிறோம். ஆனால் பப்ஜி மதனுக்கு சொந்தமானது எந்த தலைமுறை ஆடி ஏ6 கார்? என்பது உறுதியாக தெரியவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக