Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வியாழன், 8 ஜூலை, 2021

மருதமலை ஸ்ரீ பாலதண்டாயுதபாணி திருக்கோயில், மருதமலை, கோயம்புத்தூர் மாவட்டம்.

மருதமலை முருகன் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா
அமைவிடம் :

மருதமலை ஸ்ரீ பாலதண்டாயுதபாணி திருக்கோயில், தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட சோமையம்பாளையம் ஊராட்சியில் அமைந்துள்ளது. இம்மலை மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியைச் சேர்ந்தது. இக்கோயிலின் முதன்மைக் கடவுளான முருகன், இங்கு சுப்பிரமணிய சுவாமி என்றும் தண்டாயுதபாணி என்றும் மருதாசலமூர்த்தி என்றும் அழைக்கப்படுகிறார்.

மாவட்டம் :

மருதமலை ஸ்ரீ பாலதண்டாயுதபாணி திருக்கோயில், மருதமலை, கோயம்புத்தூர் மாவட்டம்.

எப்படி செல்வது?

கோயம்புத்தூர் பேருந்து நிலையத்திலிருந்தும், ரயில் நிலையத்திலிருந்தும் இங்கு செல்வதற்கு நிறைய பேருந்து வசதிகள் உள்ளன. மலை அடிவாரம் வரை தமிழக அரசுப் பேருந்துகள் செல்கின்றன. மலையின் மீது படியேறி கோயிலுக்கு நடந்து செல்லலாம்; அல்லது தனியார் இரு சக்கர வாகனங்களும், மகிழுந்துகளும் கட்டணம் செலுத்தி மலைப்பாதையின் மூலம் மேலே கோயிலுக்கு செல்லலாம். 

கோயில் சிறப்பு :

இங்கு கோயில் கொண்டிருக்கும் விநாயகர் மற்றும் முருகப்பெருமான் சுயம்பு என்பது ஒரு அதிசயமான விஷயம்.

மலை மீதிருக்கும் இக்கோயிலுக்கு 837 படிகள் ஏறி செல்ல வேண்டும். 

இங்கிருக்கும் விநாயகப் பெருமான் 'வன்னி, அரசு, வேம்பு, அத்தி, கோரக்கட்டை" எனப்படும் ஐந்து மரங்களுக்கடியில் கோயில் கொண்டிருப்பதால் 'பஞ்ச விருட்ச விநாயகர்" என அழைக்கப்படுகிறார்.

இந்த மருதமலை கோயிலுக்கு முருகனின் '7ஆம் படை வீடு" என்ற ஒரு பெயரும் உள்ளது.

வேறெங்கும் காணமுடியாத வகையில் முருகன் குதிரையின் மீது அமர்ந்திருக்கும் சிலை இக்கோயிலில் உள்ளது.

இரண்டு கரங்களுடன் உள்ள இந்த முருகப்பெருமான், பழநி முருகனைப் போலவே, கையில் தண்டத்துடன், இடதுகையை இடுப்பில் வைத்தபடி தண்டபாணியாக காட்சி தருகிறார்.

அடிவாரத்தில் உள்ள 'தான்தோன்றி விநாயகர்" மலையிலுள்ள முருகன் சன்னிதியை நோக்கி, தும்பிக்கையை நீட்டி காட்சி தருவது சிறப்பம்சம். 

கோயில் திருவிழா : 

வைகாசி விசாகம், பிரம்மோற்சவம், தைப்பூசத்தன்று காலையில் திருக்கல்யாணம், மாலையில் தேர்த்திருவிழா நடக்கும். தவிர கிருத்திகை, சஷ்டி, விசாகம் மற்றும் அமாவாசை நாட்களில் விசேஷ பூஜைகள் நடக்கிறது.

பிரார்த்தனை :

திருமணத்தடை, புத்திர தோஷம் உள்ளவர்கள் விநாயகர், முருகனை வேண்டி மரத்தில் மாங்கல்யக்கயிறு மற்றும் தொட்டில் கட்டி வேண்டிக்கொள்கிறார்கள். பாம்பாட்டிச்சித்தருக்கு அலங்காரத்துக்கு பயன்படுத்திய விபூதியை பிரசாதமாக தருகிறார்கள். நாக தோஷம், விஷப்பூச்சியால் கடிபட்டவர்கள் இந்த விபூதியை நீரில் கரைத்து சாப்பிட்டால் நோய் குணமாவதாக நம்பிக்கை. தோல் வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த விபூதியை உடலில் பூசிக்கொள்கிறார்கள்.

நேர்த்திக்கடன் :

மன நிம்மதி வேண்டுபவர்கள், நாகதோஷம் உள்ளவர்கள் பாம்பாட்டி சித்தர் சன்னதியில் நெய்தீபம் ஏற்றி, வெண்ணிற மலர், இனிப்பான நைவேத்தியம் படைத்து வழிபடுகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக