சிஎன்ஜி மூலம் பேருந்துகளை இயக்கும் பணிகளை அரசு தொடங்கியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
பேருந்துகளை இயக்குவதற்கான செலவை குறைக்க வேண்டும் என மேற்கு வங்க போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. அத்துடன் காற்று மாசுபாடு பிரச்னையை குறைப்பதும் மேற்கு வங்க போக்குவரத்து கழகத்தின் நோக்கமாக உள்ளது. இதற்காக கொல்கத்தா நகரில் முதல் முறையாக பொதுமக்களுக்கான சிஎன்ஜி மூலம் இயங்கும் பேருந்துகள் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

மேற்கு வங்க மாநில போக்குவரத்து துறை அமைச்சர் ஃபிர்ஹாத் ஹக்கீம் இந்த பேருந்துகளின் சேவையை தொடங்கி வைத்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், ''நாங்கள் ஏற்கனவே எலெக்ட்ரிக் பேருந்துகளின் மீது கவனம் செலுத்தி வருகிறோம். தற்போது எங்கள் கவனம் சிஎன்ஜி பக்கமும் திரும்பியுள்ளது. இதன் மூலம் கொல்கத்தாவின் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும்.
பேருந்துகளை சிஎன்ஜி மூலம் இயங்கும் வகையில் மாற்ற வேண்டும் என்ற எங்கள் திட்டத்தின் அடிப்படையில் தற்போது இரண்டு சிஎன்ஜி பேருந்துகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த திட்டம் தற்போது சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் வெற்றி பெற்றால், சிஎன்ஜி மூலம் இயங்கும் பேருந்துகளை அதிக அளவில் அறிமுகம் செய்வோம்'' என்றார்.
மேற்கு வங்க போக்குவரத்து கழகம் மற்றும் பெங்கால் கேஸ் கம்பெனி லிமிடெட் ஆகிய இரண்டு நிறுவனங்களுக்கும் இடையே கடந்த ஜூன் 21ம் தேதி ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின்படி, மேற்கு வங்க போக்குவரத்து கழகத்தின் டீசல் பேருந்துகள், படிப்படியாக சிஎன்ஜி மூலம் இயங்கும் வகையில் மாற்றப்படவுள்ளன.
இந்தியாவில் தற்போது டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், சிஎன்ஜி மூலம் பேருந்துகளை இயக்கினால், செலவு குறையும். அத்துடன் சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும். எனவேதான் மேற்கு வங்க போக்குவரத்து கழகம் டீசல் மூலம் பேருந்துகளை இயக்குவதற்கு அதிக ஆர்வம் காட்டி வருகிறது.
மேற்கு வங்க போக்குவரத்து கழகம் மட்டுமல்லாது, பொதுமக்கள் பலரும் தற்போது எலெக்ட்ரிக் மற்றும் சிஎன்ஜி வாகனங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து கொண்டே வருவதுதான் இதற்கு முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.
பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுடன் ஒப்பிடுகையில் எலெக்ட்ரிக் மற்றும் சிஎன்ஜி வாகனங்களை இயக்குவதற்கான செலவு மிகவும் குறைவு. அத்துடன் எலெக்ட்ரிக் மற்றும் சிஎன்ஜி வாகனங்கள் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தாது. இதன் காரணமாகவே பொதுமக்கள் பலர் தற்போது எலெக்ட்ரிக் மற்றும் சிஎன்ஜி வாகனங்களை அதிகளவு விரும்ப தொடங்கியுள்ளனர்.
முன்பு இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் எலெக்ட்ரிக் மற்றும் சிஎன்ஜி வாகனங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருந்தது. ஆனால் பொதுமக்கள் பலர் தற்போது அதிக ஆர்வம் காட்டுவதால், முன்னணி நிறுவனங்கள் பலவும் தற்போது எலெக்ட்ரிக் மற்றும் சிஎன்ஜி வாகனங்களை இந்திய சந்தையில் தொடர்ச்சியாக அறிமுகம் செய்து வருகின்றன.
தற்போதைய நிலையில் இந்திய சந்தையில் சிஎன்ஜி வாகனங்களை காட்டிலும் எலெக்ட்ரிக் வாகனங்கள்தான் மிகவும் வேகமாக பிரபலமாகி வருகின்றன. பல்வேறு பகுதிகளில் சிஎன்ஜி எரிபொருள் கிடைப்பதில் பிரச்னைகள் இருக்கின்றன. எனவே சிஎன்ஜி வாகனங்களை காட்டிலும் பொதுமக்கள் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கி வருகின்றனர்.
அத்துடன் எலெக்ட்ரிக் வாகனங்கள் என்றால், அனைத்து வகையிலும், அதாவது இரு சக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் என அனைத்து வகையிலும் எலெக்ட்ரிக் வாகனங்கள் கிடைக்கின்றன. இருந்தாலும் எலெக்ட்ரிக் வாகனங்களுடன் சேர்த்து, சிஎன்ஜி வாகனங்களின் பயன்பாட்டையும் அரசு ஊக்குவித்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் சிஎன்ஜி ஸ்டேஷன்களின் எண்ணிக்கையும் மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது. எனவே வரும் காலங்களில் எலெக்ட்ரிக் மற்றும் சிஎன்ஜி மூலமாக இயங்க கூடிய வாகனங்களை இந்திய சந்தையில் நாம் அதிகமாக பார்க்க முடியும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக