
இந்திய அரசுக்குச் சொந்தமான பயணிகள் விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியா, மிகவும் குறைவான வர்த்தகத்துடனும் அதிகளவிலான கடன் உடனும் இயங்கி வருகிறது.
இது அரசுக்கு பெரும் சுமையாக மாறியுள்ள இந்தச் சூழ்நிலையில் ஏர் இந்தியா நிறுவனத்தைக் கை கழுவத் திட்டமிட்டுள்ளது மோடி தலைமையிலான மத்திய அரசு.
ஏர் இந்தியா சுமை
ஏர் இந்தியா நிறுவனத்தைப் பல முறை விற்பனை செய்யத் திட்டமிட்டுத் தோல்வி அடைந்த நிலையில், சமீபத்தில் எடுத்த முயற்சியில் பல மாற்றங்களைச் செய்த காரணத்தால் இந்தியாவில் இருக்கும் சில முன்னணி நிறுவனங்கள் முன்னணி நிறுவனங்கள் ஏர் இந்தியாவை வாங்க விண்ணப்பித்து இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது.
டாடா குழுமம்
இந்தப் போட்டியில் டாடா குழுமம் ஒன்று, டாடா ஏற்கனவே இந்தியாவில் ஏர் ஏசியா மற்றும் விஸ்தாரா என இரு விமானச் சேவை நிறுவனங்களை இயங்கி வரும் நிலையில், தற்போது இத்துறை வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய ஏர் இந்தியாவைக் கைப்பற்றப் போட்டிப்போட்டு வருகிறது.
ஏர் இந்தியா விற்பனை
ஏர் இந்தியா நிறுவனத்தை விற்பனை செய்வதில் இறுதிக்கட்ட ஆய்வுகள், ஆலோசனைகள் நடைபெற்று வரும் நிலையில் டாடா குழுமத்தின் சில நடவடிக்கை ஏர் இந்தியா டாடா குழுமம் தான் கைப்பற்றப் போகிறது என்பது கிட்டதட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இப்படி டாடா குழுமம் என்ன செய்தது..? டாடா குழுமத்துடன் ஏர் இந்தியாவைக் கைப்பற்ற ஸ்பைஸ்ஜெட் நிறுவனமும் போட்டிப்போடுவதாகத் தகவல் வெளியானது.
3 நிறுவனங்கள்
டாடா குழுமம் ஏர் இந்தியாவைக் கைப்பற்றினால் பயணிகள் விமானப் போக்குவரத்தில் இயங்கும் 3 நிறுவனங்கள் டாடா குழுமத்தின் கீழ் இருக்கும். இதைத் தனித்தனியா நிர்வாகம் செய்வதும் கடினம், அதேபோல் இதன் மதிப்பீட்டைக் கணிப்பது, கூட்டணி வைப்பது, முதலீட்டை ஈர்ப்பது என அனைத்து விதமானப் பணிகளும் கடினம். இதனால் இந்த 3 நிறுவனங்களையும் ஒன்றிணைக்கப் புதிய திட்டத்தை வகுக்க முடிவு செய்துள்ளது டாடா.
புதிய ஹோல்டிங் நிறுவனம்
டாடா குழுமத்தின் தாய் நிறுவனமான டாடா சன்ஸ் பயணிகள் விமானப் போக்குவரத்து பிரிவுக்காகத் தனியாக ஒரு ஹோல்டிங் நிறுவனத்தை உருவாக்க முடிவு செய்துள்ளது. ஏர் இந்தியா நிறுவனத்தைக் கைப்பற்றும் திட்டம் உறுதியாகியுள்ள நிலையில் தான் இந்த முடிவை எடுத்துள்ளது டாடா. இல்லையெனில் ஹோல்டிங் நிறுவனத்தை உருவாக்க அவசியம் இல்லை.
டாடா சன்ஸ் கீழ் புதிய ஹோல்டிங் நிறுவனம்
டாடா சன்ஸ் தற்போது உருவாக்க உள்ள புதிய ஹோல்டிங் நிறுவனத்தில் ஏர் இந்தியா நிறுவனத்தையும், ஏற்கனவே டாடா குழுமத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் மலிவு விலை விமானச் சேவை நிறுவனமான ஏர் ஏசியா இந்தியா ஆகிய இரு நிறுவனங்களையும் இணைக்க உள்ளது. இதன் மூலம் இரு நிறுவனங்களும் ஓரே கட்டுப்பாட்டு வளையத்திற்குள் கொண்டு வர முடியும். சரி அப்போ விஸ்தாரா.. அங்க தான் ஒரு பிரச்சனை.
விஸ்தாரா நிறுவனம்
டாடா சன்ஸ் கீழ் இருக்கும் விஸ்தாரா பிராண்ட் டாடா SIA ஏர்லையன்ஸ் என்ற நிறுவனத்தின் பெயரில் இயங்கி வருகிறது. விஸ்தாரா-வை டாடா சன்ஸ் மற்றும் சிங்கப்பூர் ஏர்லையன்ஸ் ஆகிய இரு நிறுவனங்கள் இணைந்து உருவாக்கப்பட்ட நிறுவனம். புதிய ஹோல்டிங் நிறுவனத்திற்குள் கொண்டு வர வேண்டும் என்றால் சிங்கப்பூர் ஏர்லையன்ஸ் ஒப்புதல் அளிக்க வேண்டும், இதன் பின்பு தான் இணைக்கப்படும்.
சிங்கப்பூர் ஏர்லையன்ஸ் மறுப்பு
இது மட்டும் அல்லாமல் ஏர் இந்தியா நிறுவனத்தை விஸ்தாரா வாயிலாகவே கைப்பற்ற முடிவு செய்யப்பட்டது. ஆனால் சிங்கப்பூர் ஏர்லையன்ஸ் நிறுவனம் கடைசி நேரத்தில் விலகிக்கொண்டது. ஆனால் டாடா குழுமம் ஏர் இந்தியாவைக் கைப்பற்றிய பின்பு அதில் முதலீடு செய்யத் தயார் எனவும் சிங்கப்பூர் ஏர்லையன்ஸ் சில மாதங்களுக்கு முன்பு தெரிவித்தது.
3 நிறுவனங்கள் இணைப்பு
அதனால் ஏர் இந்தியா கைப்பற்றலுக்குப் பின்பு கூடுதலாக முதலீடு செய்யப்பட்டு 3 நிறுவனங்களையும் ஹோல்டிங் நிறுவனத்தின் கீழ் இணைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏர் ஏசியா இந்தியா நிறுவனத்தில் டாடா சன்ஸ் சுமார் 84 சதவீத பங்குகளை வைத்துள்ளது. மீதமுள்ள 16 சதவீத பங்குகளை மலேசியாவே சேர்ந்த ஏர்ஏசியா BHD வைத்துள்ளது.
செப்டம்பர் டூ டிசம்பர்
செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் டாடா குழுமம் ஏர் இந்தியா நிறுவனத்தைக் கைப்பற்ற விலையை விண்ணப்பம் மூலம் சமர்ப்பிக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதேவேளையில் டிசம்பர் மாதத்திற்குள் மத்திய அரசு ஏர் இந்தியா நிறுவனத்தைத் தனியாருக்கு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. இதன் மூலம் ஜனவரி 2022 முதல் ஏர் இந்தியாவுக்கு விடிவு காலம் பிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக