
இந்திய டெலிகாம் நிறுவனங்களின் கழுத்தை நெரிக்கும் மிக முக்கியப் பிரச்சனையாக இருக்கும் AGR கட்டணம் மற்றும் ஸ்பெக்ட்ரம் பேமெண்ட் மூலம் வோடபோன் ஐடியா நிறுவனம் திவாலாகும் நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது.
இது இந்தியாவின் வளர்ச்சிக்கு நல்லது இல்லை, இதேபோல் வோடபோன் ஐடியா திவாலாகும் பட்சத்தில் இந்நிறுவனம் நிலுவையில் வைத்திருக்கும் பில்லியன் டாலர் அளவிலான கட்டண நிலுவை மற்றும் கடன் ஆகியவை இந்திய அரசுக்கும், வங்கிகளுக்கும் பெரும் சுமையாக இருக்கும்.
இந்த நிலையைச் சமாளிக்கும் வகையிலும், வோடபோன் ஐடியா நிறுவனத்தைக் காப்பாற்றவும் மத்திய அரசு புதிய திட்டத்தை முன்வைத்துள்ளது.
AGR கட்டணம் நிலுவை
ஏற்கனவே உச்ச நீதிமன்றம் டெலிகாம் நிறுவனங்கள் தங்களது AGR கட்டணம் நிலுவையை அடுத்த 10 வருடத்திற்குள் செலுத்த வேண்டும் என அறிவித்துள்ள நிலையில், மத்திய அரசு இந்த உத்தரவை மீறாமல் என்ன செய்ய முடியும் எனக் கடந்த 3 வாரமாகத் தொடர்ந்து ஆலோசனை செய்து வந்தது. பல ஆலோசனைக் கூட்டத்தில் குமார் மங்களம் பிர்லா, உட்படப் பல வோடபோன் ஐடியா உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
4 வருடம் மோரோடோரியம்
இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் மத்திய டெலிகாம் அமைச்சகத்தின் ஒப்புதல் வாயிலாக டெலிகாம் துறை, டெலிகாம் நிறுவனங்களின் நிதி நிலையை மேம்படுத்தவும், தொடர்ந்து 3 நிறுவனங்கள் சந்தையில் இருக்க வேண்டும் என்ற இலக்குடன், AGR கட்டணம் மற்றும் ஸ்பெக்ட்ரம் பேமெண்ட் செலுத்த 4 வருடம் மோரோடோரியம் அதாவது நிலுவை தொகையின் தவணையைச் செலுத்த அவகாசம் அளிக்கும் திட்டம் முன்வைக்கப்பட்டு உள்ளது.
இதர முக்கியச் சலுகைகள்
இதுமட்டும் அல்லாமல் டெலிகாம் துறை ஸ்பெக்ட்ரம் பயன்பாட்டுக் கட்டணத்தை (SUC) குறைப்பதும், வங்கி உத்தரவாத அளவீட்டை குறைக்கவும், AGR கட்டணத்தை NON-Telecom ஐட்டம் என மாற்றவும், இதேபோல் டெலிகாம் நிறுவனங்கள் பயன்படுத்தாத ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை அரசிடம் ஒப்படைக்கும் புதிய திட்டங்களை முன்வைக்கப்பட்டு உள்ளதாக டெலிகாம் துறையில் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
VI நிறுவன பங்குகளைக் கைப்பற்றத் திட்டம்
மேலும் மத்திய அரசு கடனில் தவிக்கும் வோடபோன் ஐடியா நிறுவனத்தில் குறிப்பிடத்தக்க அளவிலான பங்குகளை முதலீடு செய்து கைப்பற்றும் திட்டத்தை ஆலோசனை செய்து வருகிறது. இந்த முதலீடு மூலம் வோடபோன் ஐடியாவின் எதிர்காலத்தை உறுதி செய்ய முடியும். இந்தப் பங்கு கைப்பற்றலும் AGR கட்டண நிலுவைக்கு ஈடான பங்குகளைப் பெறவே முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்தத் திட்டங்கள் அனைத்தும் புதன்கிழமை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு ஒப்புதல் பெறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மிகப்பெரிய ஜாக்பாட்
4 வருடம் மோரோடோரியம் என்பதே டெலிகாம் நிறுவனங்களுக்கு மிகப்பெரிய ஜாக்பாட் இந்த நிலையில் டெலிகாம் துறை பல திட்டங்களை முன்வைத்துள்ளது. இந்தத் திட்டங்கள் ஒப்புதல் பெரும் பட்சத்தில் டெலிகாம் நிறுவனங்கள் பெரிய அளவிலான வளர்ச்சியை அடைவது மட்டும் அல்லாமல் டெலிகாம் கட்டணத்தை எவ்விதமான தயக்கமும் இல்லாமல் உயர்த்த முடியும். இதன் மக்களுக்குப் பெரும் சுமையாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வோடபோன் ஐடியா பங்குகள் வளர்ச்சி
கடந்த இரு வாரங்களாக வோடபோன் ஐடியா தொடர்ந்து மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் இந்நிறுவன பங்குகள் கடந்த 5 நாட்களில் மட்டும் சுமார் 37.60 சதவீதம் வரையில் உயர்ந்து முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட்-ஐ கொடுத்துள்ளது. இதனால் ஆகஸ்ட் 17ஆம் தேதி வெறும் 5.75 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்ட வோடபோன் ஐடியா பங்குகள் இன்று காலை 8.80 ரூபாய் அளவிற்கு உயர்ந்துள்ளது.
ஏர்டெல், ஜியோ பங்குகள்
இதேபோல் பார்தி ஏர்டெல் பங்குகளும் இன்று காலை வர்த்தகத்தில் 1 சதவீதம் உயர்வுடன் துவங்கியது. ஏர்டெல் பங்குகள் தற்போது 0.54 சதவீதம் உயர்ந்து 674.30 ரூபாய் அளவீட்டை அடைந்துள்ளது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் தாய் நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் இன்று 0.16 சதவீதம் சரிந்து 2,436.70 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக