Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

புதன், 1 செப்டம்பர், 2021

ரூ.50 லட்சம் வரை டிஜிட்டல் லோன்.. பேஸ்புக், சியோமி செம அறிவிப்பு.. இனி வங்கிகளுக்குத் திக்.. திக்..!

 சீனாவின் சியோமி திட்டம்

இந்தியாவில் டிஜிட்டல் லோன் சேவைகள் நாளுக்கு நாள் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வருகிறது. பொதுவாக வங்கிகள் தான் மக்களுக்குக் கடன் சேவைகளை அளிக்கும், ஆனால் இந்த டிஜிட்டல் சேவை நிறைந்த காலகட்டத்தில் பல தரப்பைச் சேர்ந்த பல நிறுவனங்கள் டிஜிட்டல் லோன் சேவைகளை அளிக்கத் துவங்கியுள்ளது.

இந்தியாவில் தற்போது டிஜிட்டல் லோன் சேவைகள் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஈகாமர்ஸ் நிறுவனத்தில் டிஜிட்டல் சேவை நிறுவனங்கள், டெக் சேவை நிறுவனங்கள், ஸ்மார்ட்போன் நிறுவனங்கள், பின்டெக் நிறுவனங்கள் முதல் NBFC, ஸ்மால் பேங்க் நிறுவனங்கள் அதிகளவிலான டிஜிட்டல் சேவை அளிக்கத் துவங்கியுள்ளது.

சமீபத்தில் இரு புதிய நிறுவனங்கள் டிஜிட்டல் லோன் சேவை பிரிவில் அறிவித்துள்ள கடன் திட்டங்கள் மக்கள் மத்தியிலும், வங்கிகள் மத்தியிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய டிஜிட்டல் வாடிக்கையாளர்கள்

இந்தியா மிகவும் வேகமாக வளரும் டிஜிட்டல் சேவை வாடிக்கையாளர்களைக் கொண்ட நாடாக இருக்கும் காரணத்தால் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் சிறப்பான சேவைகளை அளிக்கும் பட்சத்தில் அதிகளவிலான வாடிக்கையாளர்களை மிகவும் குறைந்த காலகட்டத்தில் பெற முடியும். இதனால் அனைத்து முன்னணி நிறுவனங்களும் மலிவான அதேநேரத்தில் மிகவும் பாதுகாப்பான சேவை திட்டங்களை அறிவித்து வருகிறது.

டிஜிட்டல் கடன் சேவை

இதன் அடிப்படையில் இந்தியாவில் தற்போது டிஜிட்டல் கடன் சேவைகள் யாரும் எதிர்பார்க்காத வகையில் மிகப்பெரிய அளவிலான வளர்ச்சியை அடைந்துள்ளது. இன்று வெளியான கணிப்பின் படி இந்தியாவின் டிஜிட்டல் கடன் சந்தையின் மொத்த மதிப்பு 1 டிரில்லியன் டாலர். இவ்வளவு பெரிய வர்த்தகச் சந்தையைப் பிடிக்க யாருக்குத் தான் ஆசை இருக்காது.

பேஸ்புக் கடன் திட்டம்

அந்த வகையில் உலகின் மிகப்பெரிய சமுகவலைதள நிறுவனமான பேஸ்புக் உலகிலேயே முதல் முறையாகத் தனது பேஸ்புக் தளத்தின் மூலம் சிறு தொழில் கடன் அளிக்க முடிவு செய்துள்ளது. இந்தக் கடன் சேவை சில கூட்டணி நிறுவனத்துடன் அளிக்க முடிவு செய்யப்பட்டு உள்ள நிலையில், வாடிக்கையாளர்களுக்கு 5,00,000 லட்சம் ரூபாய் முதல் 50,00,000 லட்சம் வரையிலான தொகையை 17 முதல் 20 சதவீத வட்டியில் கடன் அளிக்க முடிவு செய்துள்ளது. இந்தக் கடனுக்கு எவ்விதமான துணை ஈடும் தேவையில்லை.

சீனாவின் சியோமி திட்டம்

சீனாவின் முன்னணி ஸ்மார்ட்போன், லேப்டாப் மற்றும் பல்வேறு எலக்ட்ரானிக்ஸ் கருவிகளைச் சொந்தமாகத் தயாரித்து உலகம் முழுவதும் விற்பனை செய்து வருகிறது. இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் முதல் இடத்தில் இருக்கும் சியோமி இந்தியாவில் விரைவில் கடன், கிரெடிட் கார்டு மற்றும் இன்சூரன்ஸ் சேவைகளைப் பெரிய வங்கிகள் மற்றும் டிஜிட்டல் ஸ்டார்ட்அப் நிறுவன கூட்டணி முறையில் அளிக்கத் திட்டமிட்டு வருவதாக இந்நிறுவனத்தின் தலைவர் மனு குமார் ஜெயின் தெரிவித்துள்ளார்.

அமேசான் புதிய முதலீடு

இந்தியாவின் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனமான அமேசான் இந்தியாவில் முதல் முறையாக ஈகாமர்ஸ் மற்றும் ரீடைல் வர்த்தகத்தைத் தாண்டி வெல்த் மேனேஜ்மென்ட் துறையில் முதலீடு செய்துள்ளது. அமேசான் நிறுவனம் ஸ்மால்கேஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் 40 மில்லியன் டாலர் அளவிலான முதலீட்டுச் சுற்றில் முதலீடு செய்துள்ளது. இந்த முதலீடு மூலம் அமேசான் நிறுவனம் பல்வேறு கடன் மற்றும் நிதி சேவை திட்டங்களை அளிக்க முடியும். ஏற்கனவே அமேசான் கிரெடிட் கார்டு மற்றும் Pay later சேவைகள் அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

கூகுள் கடன் திட்டங்கள்

உலகின் மிகப்பெரிய டெக்னாலஜி நிறுவனமான ஆல்பாபெட் நிறுவனத்தின் கிளை நிறுவனமான கூகுள் தனது டிஜிட்டல் பேமெண்ட் தளமான கூகிள் பே மூலம் தற்போது டிஜிட்டல் கோல்டு, மியூச்சுவல் பண்ட், டிஜிட்டல் லோன் ஆகிய சேவைகளை ஏற்கனவே அதிகளவில் அளித்து வரும் நிலையில், தற்போது புதிதாகத் தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு வருட டெப்பாசிட் திட்டத்தை அதிகப்படியான வட்டியில் அளிக்கத் துவங்கியுள்ளது. இது வங்கிகளுக்குப் பெரும் தலைவலியாக மாறியுள்ளது.

கூகுள் டெபாசிட் சேவை திட்டம்

கூகுள் நிறுவனம் ஈக்விடாஸ் ஸ்மால் பைனான்ஸ் வங்கி உடன் இணைந்து கூகுள் பே செயலி வாயிலாக ஒரு வருடம் வைப்பு நிதி சேவையை அளிக்கிறது. இந்தியாவில் டாப் முன்னணி வங்கிகளில் ஒரு வருட வைப்பு நிதிக்கு அதிகப்படியாக 5.75 சதவீத வட்டியில் வைப்பு நிதி அளிக்கப்படும் நிலையில் தற்போது கூகுள் பே - ஈக்விடாஸ் ஸ்மால் பைனான்ஸ் வங்கி இணைந்து ஒரு வருட வைப்பு நிதிக்கு 6.85 சதவீத வட்டி வருமானத்தை அளிக்கிறது. இது மூத்த குடிமக்களுக்கு 0.50 சதவீதம் அதிகமான வட்டி வருமானம் அளிக்கப்படுகிறது.

டிஜிட்டல் பேமெண்ட் சேவை

இந்தியாவில் டிஜிட்டல் பணப் பரிமாற்ற சேவைகள் எதிர்பார்க்காத வகையில் மிகப்பெரிய அளவிலான வளர்ச்சியைப் பதிவு செய்து வரும் நிலையில், இதன் வாயிலாகத் தற்போது டிஜிட்டல் நிதியியல் சேவைகளும் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வருகிறது. சமீபத்தில் பாஸ்டன் கன்சல்டிங் குரூப் வெளியிட்ட அறிக்கையில் இந்தியாவில் டிஜிட்டல் கடன் சேவைகள் 2023க்குள் 350 பில்லியன் டாலருக்கும், விரைவில் 1 டிரில்லியன் டாலர் அளவீட்டையும் அடையும் எனக் கணித்துள்ளது.

வங்கிகளின் எதிர்காலம் என்ன..?

நிதியியல் சேவை தளத்தில் டெக் மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் அதிகளவிலான ஆதிக்கம் செலுத்தத் துவங்கியுள்ள நிலையில், இந்தியாவில் வங்கிகளின் ஆதிக்கம் படிப்படியாகக் குறைந்து வரும். இதேபோன்ற நிலை தான் சீனாவில் உருவானது. அலிபாபா, டென்சென்ட் போன்ற நிறுவனங்கள் டிஜிட்டல் நிதியியல் சேவைகளை அதிகளவில் அளிக்கத் துவங்கி பின்பு ரீடைல் வங்கி சேவை பிரிவில் வங்கிகள் ஆதிக்கம் பெரிய அளவில் குறைந்தது. இதன் பின்பு வங்கி மற்றும் நிதியியல் சேவை பிரிவில் பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டது.

ரிசர்வ் வங்கி முடிவு

இந்தியாவில் ஆன்லைன் கடன் சேவை பிரிவில் சுமார் 300க்கும் அதிகமான ஸ்டார்ட்அப் சேவை நிறுவனங்கள் இருக்கும் நிலையில், இப்பிரிவு நிறுவனங்களை நடைமுறைப்படுத்தவும், கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவும் ரிசர்வ் வங்கி புதிய கட்டமைப்பை உருவாக்கத் திட்டமிட்டு வருகிறது. டிஜிட்டல் நிதியியல் துறையில் டெக் மற்றும் பின்டெக் துறை நிறுவனங்களின் வளர்ச்சியை இனி யாராலும் தடுக்க முடியாத நிலையை அடைந்துள்ளது. தற்போது இருக்கும் சூழ்நிலையில் யார் முதல் இடத்தைப் பிடிக்கப்போவது என்பது தான் தற்போது போட்டி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!