இந்தியாவில் மிகப்பெரிய உணவு டெலிவரி சேவை நிறுவனமாகவும், முன்னணி ஸ்டார்ட்அப் நிறுவனமாகவும் விளங்கிய சோமேட்டோ இந்திய பங்குச்சந்தையில் ஐபிஓ வெளியிட்டு மிகப்பெரிய வெற்றியை அடைந்த நிலையில், தனது சேவை தளத்தை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டது.
இதன்படி சோமேட்டோ மற்றும் க்ரோபர்ஸ் கூட்டணியில் விரைவில் சோமேட்டோ ஆப் மூலம் மளிகை பொருட்கள் விற்பனை துவங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஏற்கனவே இப்பிரிவு வர்த்தகத்தில் பல நிறுவனங்கள் இருக்கும் வேளையிலும், சோமேட்டோ நிறுவனத்தின் சக போட்டி நிறுவனமான ஸ்விக்கி சமீபத்தில் மளிகை பொருட்கள் விற்பனையை துவங்கியுள்ள நிலையிலும் சோமேட்டோவின் வருகை பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் தற்போது நடந்துள்ளது முற்றிலும் மாறுப்பட்டது, யாரும் எதிர்பார்க்காத ஒன்று. சோமேட்டோ கடந்த இரண்டு வருடத்தில் 2வது முறையாக மளிகை பொருட்கள் விற்பனை திட்டத்தில் இருந்து பின்வாங்கியுள்ளது. இதை சோமேட்டோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு சோமேட்டோ வாடிக்கையாளர் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றால் மிகையில்லை.
NCR பகுதியில் சோதனை திட்டம்
இதற்காக ஜூலை மாதம் முதல் சோமேட்டோ NCR பகுதியில் 45 நிமிடத்தில் மளிகை பொருட்கள் டெலிவரி திட்டத்தை சோதனை திட்டமாக செயல்படுத்தி வருகிறது. இந்த சோதனை திட்டம் வருகிற செப்டம்பர் 17ஆம் தேதி நிறைவடைகிறது. சோமேட்டோ இந்த மளிகை பொருட்கள் டெலிவரி திட்டத்தை மார்கெட் பிளேஸ் முறையில் இயக்க திட்டமிட்டது.
ஏகப்பட்ட பிரச்சனை
இந்த சோதனை திட்டத்தில் மளிகை பொருட்கள் டெலிவரி வர்த்தகத்தில் பொருட்கள் இருப்பில் தொடர் மாற்றங்கள் மற்றும் வாடிக்கையாளர் தேவையை பூர்த்தி செய்வதில் அதிகப்படியான பாதிப்பு, மோசமான வாடிக்கையாளர் அனுபவம் ஆகியவற்றை எதிர்கொண்டு வருவதாக சோமேட்டோ அறிவித்துள்ளது.
நியூட்ராகியூட்டிகல் வர்த்தகம் மூடல்
இதை தொடர்ந்து சோமேட்டோ நிறுவனம் தனது ஹெல்த் மற்றும் பிட்னஸ் பொருட்களை விற்பனை செய்யும் நியூட்ராகியூட்டிகல் வர்த்தகத்தை மூடியுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த பிரிவில் ஹெல்த் அல்லது மருத்துவ பலன்கள் கொண்டு உணவு பொருட்களை விற்பனை செய்யும் திட்டத்தில் இயங்கி வருகிறது. கடந்த வருடம் சோமேட்டோ சிஓஓ கவ்ரவ் குப்தா இப்பிரிவு வர்த்தகத்தை விரிவாக்கம் மற்றும் மேம்படுத்துவதற்காகவே பதவியில் இருந்து விலகி பணியாற்றியது குறிப்பிடதக்கது.
இரு அறிவிப்புகள்
இந்த இரு அறிவிப்புகள் மூலம் சோமேட்டோ வாடிக்கையாளர்கள் சோகம் அடைந்தாலும், முதலீட்டாளர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது என்றால் மிகையில்லை. லாபம் இல்லாத அல்லது வர்த்தகம் அதிக இல்லாத பிரிவுகளை மூடுவது பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு இந்நிறுவனத்தின் மீதான நம்பிக்கையை அதிகரித்துள்ளது என்றால் மிகையில்லை.
தனியார் முதலீட்டாளர்கள்
பொதுவாக புதிய வர்த்தகத்தில் இறங்குவது என்றால் தனியார் முதலீட்டாளர்களுக்கு மிகவும் பிடித்த ஒன்று, ஆனால் சோமேட்டோ தற்போது பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு உள்ளது. இதனால் ஒவ்வொரு படிகளையும் நிதானமாகவும், பொறுப்புடனும் வைக்க வேண்டும் என்பதை சோமேட்டோ கடந்த ஒரு மாத காலத்தில் இந்நிறுவன பங்கு செயல்பாடுகள் மூலம் கற்றுகொண்டு உள்ளது.
சோமேட்டோ பங்குகள்
இன்றைய வர்த்தகக்தில் சோமேட்டோ பங்குகள் 0.74 சதவீதம் அதிகரித்து 142.60 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது. இன்றைய வர்த்தகத்தில் அதிகப்படியாக 143.70 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக