பேஸ்புக் லாபத்தை மட்டுமே கணக்கில் கொண்டு இயங்குவதாகவும், வருமானத்திற்காக பயனர்களின் பாதுகாப்பை சமரசம் செய்ததாகவும் நிறுவனத்தின் முன்னாள் ஊழியரான பிரான்சிஸ் ஹாகன் (Frances Haugen) பகீர் தகவல் வெளியிட்டுள்ளார். சில நாட்களுக்கு முன்பு ஃபேஸ்புக்கின் சில ரகசிய ஆவணங்களை வெளியிட்ட, அதன் முன்னாள் ஊழியர் பிரான்சிஸ் ஹாகன், இப்போது வெளிப்படையாக இந்த குற்றசாட்டை வைத்துள்ளார்.
அமெரிக்க சென்ட் சபையில், பிரான்சிஸ் ஹாகன் அளித்துள்ள வாக்குமூலம் பேஸ்புக் நிறுவனத்திற்கு சிக்கல்களை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான இன்ஸ்டாகிராமின் மூலம் இளைஞர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு ஏற்படும் மன அழுத்தம், மன நோய் உட்பட பல பிரச்சனைகளை பற்றி பேஸ்புக் நிர்வாகம் நன்கு அறிந்திருந்தும், அதை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.
பிரான்சஸ் ஹாகன் பேஸ்புக்கின் ஊழியராக இருந்தார். ஒரு செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில், ‘ நான் பேஸ்புக்கில் சேர்ந்தேன், அதன் மூலம் உலகிற்கு நல்லது செய்ய முடியும் என்று நான் நம்பினேன், ஆனால் பேஸ்புக்கின் நடவடிக்கைகள் அனைத்தும் குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் இருந்ததாக் நான் வெளியேறினேன். நிறுவனத்திற்கு லாபம் ஒன்றே குறி. பேஸ்புக் செயல்பாடு பிரிவினைவாத உணர்வை ஊக்குவித்து ஜனநாயகத்திற்கு ஆபத்தை ஏற்படுத்துவதாக உள்ளது’ என குற்றம் சாட்டினார்.
பேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் இது குறித்து கூறுகையில், குற்றசாட்டு உண்மையல்ல என்று கூறி அவர் இதனை நிராகரித்தார். பேஸ்புக் மக்களின் பாதுகாப்பில் முழு அக்கறை எடுத்துள்ளது என கூறியுள்ளார்.
முன்னதாக, திங்கள்கிழமை இரவு பேஸ்புக்கின் சர்வர் ஆறு மணி நேரம் செயலிழந்த பிறகு நிறுவனத்தின் பங்குகள் திடீரென வீழ்ச்சியடைந்த நிலையில், பல லட்சம் டாலர்கள் இழப்பு ஏற்பட்டது. முன்னதாக, நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் பிரான்சிஸ், பேஸ்புக் நிறுவனத்தின் ரகசிய ஆவணங்களை வெளியிட்ட போதும், பேஸ்புக் நிறுவனம் மிகவும் பாதிக்கப்பட்டது.
கடந்த ஒரு வருடத்தில் பேஸ்புக் பல பிரச்சனைகளைச் சந்தித்து வருகிறது. குறிப்பாக, பேஸ்புக் தளத்தில் வெறுப்பு பேச்சு மற்றும் தவறான தகவல்கள் அதிகமாக இருப்பதாகச் சில மாதங்களுக்கு முன்பு குற்றம்சாட்டப்பட்ட நிலையில் பல முக்கிய நிறுவனங்கள், பேஸ்புக்கில் விளம்பரம் கொடுப்பதை தற்காலிகமாக நிறுத்தியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக