பஜாஜ் பல்சர் 220எஃப் மோட்டார்சைக்கிளின் தயாரிப்பு & விற்பனை இந்திய சந்தையில் நிறுத்தி கொள்ளப்பட உள்ளதாக அதிர்ச்சிக்கர செய்திகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த முழுமையான விபரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
இந்தியாவில் இளம் தலைமுறையினரின் பிரதான தேர்வுகளுள் ஒன்றாக பஜாஜ் ஆட்டோவின் பல்சர் 220எஃப் மாடல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சமீபத்திய பல்சர் என்250 மற்றும் எஃப்250 பைக்குகளின் வருகைக்கு முன்பு வரையில் செயல்திறன்மிக்க பல்சர் பைக்காக 220எஃப் மாடல் தான் விற்கப்பட்டு வந்தது.
புதிய பல்சர் 250 பைக்குகளுக்கு எந்த அளவில் வாடிக்கையாளர்கள் கிடைப்பர் என்பது போக போக தான் தெரியவரும். ஆனால் பல்சர் 220எஃப் ஏற்கனவே பலத்தரப்பட்ட வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதற்கு மிக முக்கிய காரணமாக இதன் மலிவான விலையினை சொல்லலாம்.
இத்தகைய மோட்டார்சைக்கிளின் தயாரிப்பு பணிகளும், விற்பனை பணிகளும் தான் விரைவில் இந்தியாவில் நிறுத்தி கொள்ளப்பட உள்ளதாகவும், பல்சர் 220எஃப் பைக்குகளின் இறுதி தொகுப்பு புனேவில் உள்ள பஜாஜின் சாகான் தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் தற்போது செய்திகள் வெளிவர ஆரம்பித்துள்ளன.
இதில் எந்த அளவிற்கு உண்மை உள்ளது என தெரியவில்லை. எனவே இந்த செய்தியினை தற்போதைக்கு வதந்தியாகவே நாம் கருத வேண்டும். ஆனால் உண்மையில் பல்சர் 250 பைக்குகள் அறிமுகத்திற்கு முன்னதாக, சோதனை ஓட்டங்களில் ஈடுப்படுத்தப்பட்ட போதே, இவற்றின் அறிமுகத்திற்கு பிறகு பல்சர் 220எஃப் பைக்கின் விற்பனையை பஜாஜ் நிறுவனம் நிறுத்தி கொள்ளலாம் என பேச்சுகள் எழுந்தன.
விற்பனையில் பெரிய அளவில் எந்த ஊசலாட்டமும் இல்லையென்றாலும், பல்சர் 250 பைக்குகளின் விற்பனையை கருத்தில் கொண்டு பல்சர் 220எஃப் பைக்கின் தயாரிப்பு & விற்பனையை சந்தையில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் நிறுத்தி கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் பல்சர் 220எஃப் மாடல் முதன்முறையாக 2007இல் அறிமுகப்படுத்தப்பட்டது.
குறிப்பாக இந்த பல்சர் மாடலின் முன்பகுதி சற்று கூடுதல் பேனல்கள் உடன் அலங்கரிக்கப்படுகின்றன. இத்தகைய உடலமைப்பை கொண்ட மோட்டார்சைக்கிள்களை ஆங்கிலத்தில் செமி-ஃபேர்ட் பைக்ஸ் என்கிறார்கள். பின்பகுதியில் அதிகளவில் பிளாஸ்டிக் பேனல்கள் இல்லையென்றாலும், முன்பக்கத்தில் பொருத்தப்படுகின்ற இந்த பேனல்கள் பைக்கின் காற்றியக்கவியல் பண்பை மேம்படுத்துவதாக அமைந்துள்ளன.
இதன்படி தற்சமயம் பல்சர் 220எஃப் பைக்கின் முன்பக்கத்தில் நீளமான எதிர்காற்று தடுப்பு கண்ணாடி மற்றும் நிமிர்ந்த ரைடிங் ஸ்டைலை வழங்கக்கூடிய வகையிலான ஹேண்டில்பார் அமைப்பு வழங்கப்படுகிறது. இதனால் தொலைத்தூர பயணங்களுக்கும் இந்த 220சிசி பஜாஜ் பல்சர் பைக் கணக்கச்சிதமாக பொருந்துகிறது.
தற்சமயம் பல்சர் 220எஃப் பைக்கில் 220சிசி, சிங்கிள்-சிலிண்டர், ஆயில்-கூல்டு என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 8500 ஆர்பிஎம்-இல் 20.4 பிஎச்பி மற்றும் 7000 ஆர்பிஎம்-இல் 18.55 என்எம் டார்க் திறனை இந்த என்ஜின் வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. புதிய பல்சர் 250 பைக்குகளில் 250சிசி, சிங்கிள்-சிலிண்டர், ஆயில்-கூல்டு என்ஜின் பொருத்தப்படுகிறது.
இது 8,750 ஆர்பிஎம்-இல் 24.5 பிஎஸ் மற்றும் 6,500 ஆர்பிஎம்-இல் 21.5 என்எம் டார்க் திறன் வரையில் பைக்கிற்கு வழங்கக்கூடியதாக உள்ளது. ஆனால் பல்சர் 220 & 250சிசி பைக்குகள் அனைத்திலும் ஒரே மாதிரியாக 5-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் அமைப்பு தான் என்ஜின் உடன் இணைக்கப்படுகிறது.
மேலும் புதிய பல்சர் 250 பைக்குகளில் நிலையாக ஸ்லிப்பர் க்ளட்ச், இன்ஃபினிட்டி திரை, எல்இடி பிரோஜெக்டர் யுனிபேட் ஹெட்லேம்ப் மற்றும் யுஎஸ்பி மொபைல் சார்ஜிங் போன்ற புதிய வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. நமக்கு தற்போது கிடைத்துள்ள தகவல்களின்படி, பல்சர் 220எஃப் பைக்குகளின் இறுதி தொகுப்பு பஜாஜின் தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்பட்டிருந்தால், இந்த பைக்கின் விற்பனை விரைவில் நிறுத்தி கொள்ளப்படுவதற்கு வாய்ப்புள்ளது.
தற்சமயம் பல்சர் 220எஃப் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1,33,907 ஆக உள்ளது. அதுவே சமீபத்திய பல்சர் 250 பைக்குகளின் விலைகள் ரூ.1,40,000-இல் இருந்து ஆரம்பிக்கின்றன. பல்சர் 220எஃப் மாடலுக்கு புதிய பல்சர் எஃப்250 சரியான மாற்றாக விளங்குகிறது. இத்தனைக்கும் கூடுதல் என்ஜின் ஆற்றலும் இந்த 250சிசி பைக்கில் கிடைக்கிறது. இதனால் பல்சர் 220எஃப் பைக்கிற்கு பல்சர் எஃப்250 எல்லா விதங்களிலும் சரியான மாற்றாக இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக