
இந்த கோயில் எங்கு உள்ளது?
அருள்மிகு கதிர்நரசிங்கர் திருக்கோயில், திண்டுக்கல் மாவட்டத்தில், ரெட்டியார்சத்திரம், கொத்தப்பள்ளி எனும் ஊரில் அமைந்துள்ளது.
இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?
திண்டுக்கல்லில் இருந்து சுமார் 15 கி.மீ., தூரத்தில் ரெட்டியார்சத்திரம் உள்ளது. கோயில் அருகிலேயே பேருந்து நிலையம் உள்ளது.
இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?
கோயில் கருவறையில் கதிர்நரசிங்க பெருமாள், கமலவல்லி தாயார்-லட்சுமியுடன் அருள்பாலிக்கிறார். அவர்களின் முன்பு சுயம்புலிங்கம் உள்ளது. சிவனும், பெருமாளும் ஒரே இடத்தில் அற்புதமாக காட்சி அளிக்கின்றனர்.
இது சூரிய தோஷ நிவர்த்தி தலம் ஆகும். முதலில் பெருமாளுக்கும், அடுத்து சிவனுக்கும் பூஜை செய்கிறார்கள். சிவனுக்குரிய பரிவார மூர்த்தியான பைரவர் பிரகாரத்தில் தனிச்சன்னதியில் இருக்கிறார்.
சக்கரத்தாழ்வார் தனிச்சன்னதியில் பதினாறு கரங்களுடன், அக்னி ஜுவாலை கிரீடம் அணிந்த நிலையில் காட்சி தருகிறார். இவரை சுற்றிலும் காயத்ரி மந்திர தேவதைகளின் சிற்பம் பொறிக்கப்பட்டிருக்கிறது. சக்கரத்தாழ்வாருக்கு மேலே இரணியனை சம்ஹாரம் செய்த நரசிம்மரும், பாதத்திற்கு கீழே இருபுறமும் கருடாழ்வார் வணங்கியபடி இருக்கும் லட்சுமி நரசிம்மரும் காட்சியளிக்கின்றனர். சக்கரத்தாழ்வார் பின்புறமுள்ள யோக நரசிம்மர், நான்கு கைகளிலும் சக்கரம் ஏந்தியிருக்கிறார்.
வேறென்ன சிறப்பு?
பிரகாரத்தில் வடக்கு நோக்கிய வீர ஆஞ்சநேயர் தனிச்சன்னதியில் இருக்கிறார். இவரது சிலை ஒரே கல்லில் புடைப்பு சிற்பமாக வடிக்கப்பட்டிருப்பது சிறப்பான அமைப்பு.
என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?
நரசிம்மன் ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி, திருக்கார்த்திகை, புரட்டாசி 3வது சனிக்கிழமை பூஜை, பைரவருக்கான தேய்பிறை அஷ்டமி பூஜை, திருக்கல்யாண உற்சவம் ஆகியவை கோயிலின் முக்கிய விழாக்கள் ஆகும்.
தமிழ் வருடப்பிறப்பு, ஆடி மாதம் 18ஆம் நாள் ஆஞ்சநேயர் சிறப்பு திருமஞ்சனம், ஆவணி மூலம் ஹயக்ரீவர் திருமஞ்சனம், கோகுலாஷ்டமி அன்று உறியடி உற்சவம் ஆகியவை நடைபெறுகிறது.
எதற்கெல்லாம் பிரார்த்தனை செய்யலாம்?
ஜாதகத்தில் சூரிய திசை இருப்பவர்கள், அக்னி நட்சத்திர நாட்களில் பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வேண்டிக் கொள்கிறார்கள்.
குழந்தைகள் கல்வியில் சிறப்பிடம் பெற, இங்குள்ள லட்சுமி ஹயக்ரீவருக்கு ஏலக்காய் மாலை அணிவித்து வேண்டிக் கொள்கிறார்கள்.
இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?
சுவாமிக்கு வஸ்திரம் அணிவித்து, சர்க்கரைப்பொங்கல் நைவேத்தியம் படைத்து நேர்த்திக்கடனை நிறைவேற்றுகின்றனர்.
அருள்தரும் ஆலயங்கள்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக