
நாடு முழுவதும் ஒரு லட்சம் சார்ஜிங் மையங்களை அமைக்க ஹீரோ எலெக்ட்ரிக் மின் வாகன உற்பத்தி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்திய மின்சார இருசக்கர வாகன உலகின் ஜாம்பவான் நிறுவனமாக மாறி வரும் ஹீரோ எலெக்ட்ரிக் இத்தகைய அறிவிப்பை வெளியிட்டிருப்பது இந்திய மின் வாகன பிரியர்கள் மத்தியில் பெருத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம், வாங்க.
மின் வாகன உற்பத்தியை மட்டுமே மையமாகக் கொண்டு இயங்கி வரும் ஹீரோ எலெக்ட்ரிக் (Hero Electric) நிறுவனம், மிக விரைவில் நாடு முழுவதும் பல ஆயிரக் கணக்கான மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்களை அமைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக மின் வாகன உற்பத்தியாளர் பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கும் சார்ஸர் (Charzer) நிறுவனத்துடன் கூட்டணி அமைத்துள்ளது.
இந்நிறுவனம் மின் வாகனங்களுக்கான சார்ஜிங் கருவிகளை உருவாக்கும் நிறுவனம் ஆகும். இவையிரண்டும் இணைந்தே நாடு முழுவதிலும் உள்ள முக்கிய பகுதிகளில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் கருவிகளை அமைக்க இருக்கின்றன. இரு நிறுவனங்களும் இணைந்து சுமார் 1 லட்சம் எண்ணிக்கையிலான மின் வாகன சார்ஜிங் மையங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளன.
அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அனைத்தையும் பயன்பாட்டிற்குக் கொண்டு வர நிறுவனங்கள் இலக்கு நிர்ணயித்துள்ளன. தற்போது இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களில் ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்தின் தயாரிப்புகளும் ஒன்றாக இருக்கின்றன. இந்த வரவேற்பைப் பல மடங்கு அதிகரிக்கும் பொருட்டு நாடு முழுவதும் மின் வாகனங்களுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை உருவாக்கும் பணியில் ஹீரோ எலெக்ட்ரிக் களமிறங்கியிருக்கின்றது.
இதனடிப்படையில் முன்னோட்டாக 10 ஆயிரம் சார்ஜிங் மையங்கள் உருவாக்கப்பட இருக்கின்றன. இதற்காக நாட்டின் முதன்மையான 30 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றன. நகரங்களின் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தனது சார்ஜிங் மையங்கள் எங்கெல்லாம் இருக்கின்றன என்பதை அறிந்துக் கொள்ளும் வகையில் சார்ஸெர் மொபைல் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது, நாகரத்தின் எந்த பகுதியில் சார்ஜிங் மையம் இருக்கின்றது என்பதை நேவிகேஷன் வசதியுடன் வழி நடத்திக் கொண்டு செல்லும். செல்போன் செயலி மட்டுமின்ற அதிகாரப்பூர்வ வெப்சைட்டிலும் இந்த வசதி வழங்கப்பட்டிருக்கின்றது.
மின் வாகன விற்பனைக்கு போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாததே தடைக் கல்லாக இருக்கின்றது. ஆகையால், அரசு மற்றும் அரசு சாரா வாகன உற்பத்தி நிறுவனங்கள் இந்த அவல நிலையை களையெடுக்கும் முயற்சியில் களமிறங்கியிருக்கின்றன. நாடு முழுவதும் மின் வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்கள் மற்றும் சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரியை வழங்கும் பணியில் அவை களமிறங்கியிருக்கின்றன. இதன் வாயிலாக நாட்டில் மின் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கச் செய்ய முடியும் என அவை நம்பிக்கைக் கொண்டிருக்கின்றன.
ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் இந்தியாவில் மின்சார இருசக்கர வாகனங்களுக்கு கிடைத்து வரும் வரவேற்பு அதிகரித்து வருவதை முன்னிட்டு, தற்போது உற்பத்தி திறனை உயர்த்தும் பணியில் களமிறங்கியிருக்கின்றது. நிறுவனத்தின் லூதியான உற்பத்தி ஆலையில் தயாரிப்பு பணிகளை அதிகரிக்கச் செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2022 மார்ச் மாதத்திற்குள் ஐந்து லட்சம் உற்பத்தி என்ற இலக்கை எட்ட நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
சார்ஸெர் உடனான கூட்டணி குறித்து ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்தின் சிஇஓ சோஹிந்தர் கில் கூறியதாவது, "மின் வாகனங்களின் வளர்ச்சிக்கு வலுவான மற்றும் நன்கு பொருத்தப்பட்ட உள்கட்டமைப்பு நெட்வொர்க் முக்கியம் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த இணைப்பு மின் வாகன வளர்ச்சிக்கு உதவும். எங்களை சார்ஜர்களைப் பயன்படுத்த சார்ஜிங் ஸ்லாட் புக்கிங் வசதி வழங்கப்படும். இது வாடிக்கையாளர்களுக்கு தடையற்ற சார்ஜிங் அனுபவத்தை வழங்க உதவும்" என்றார்.
ஹூரோ எலெக்ட்ரிக் நிறுவனம் அண்மையில் இந்தியாவில் ஓர் புதிய விற்பனை சாதனையைப் படைத்தது. நிறுவனம் 50 ஆயிரம் யூனிட் விற்பனை என்ற புதிய மைல்கல்லை எட்டியது. இதனால் இந்தியாவின் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனமாக ஹீரோ எலெக்ட்ரிக் உருவெடுத்திருக்கின்றது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக