Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 10 டிசம்பர், 2021

World ’கிட்னி, பெண் குழந்தைகள் விற்பனைக்கு’ ஆப்கனில் தலைவிரித்தாடும் உணவுப்பஞ்சம்

’கிட்னி, பெண் குழந்தைகள் விற்பனைக்கு’ ஆப்கனில் தலைவிரித்தாடும் உணவுப்பஞ்சம்

ஆப்கானிஸ்தானில் (Afghanistan) கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தாலீபான்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றனர். அமெரிக்க படைகளின் வெளியேற்றத்துக்குப் பிறகு வெகுடெழுந்த அவர்கள், படிப்படியாக அனைத்து நகரங்களையும் கைப்பற்றி ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தனர். இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு உட்பட்டு, ஆட்சி நடத்துவோம் என அறிவித்த அவர்கள், முந்தைய தாலீபான் ஆட்சியில் இருந்ததுபோலவே கடுமையான சட்டங்களை அமல்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையே கடுமையான பொருளாதார நெருக்கடியில் ஆப்கானிஸ்தான் இருப்பதால், உணவுப் பஞ்சம் தலை விரித்தாடுகிறது.

ஒருவேளை உணவுக்கூட வழியில்லாத மக்கள், உணவு மற்றும் பணத்துக்காக தங்களிடம் இருக்கும் அனைத்து பொருட்களையும் விற்பனை செய்து வருகின்றனர். Khaama செய்தி நிறுவனத்தின் தகவல்படி, வீடு, வீட்டில் இருக்கும் மரச்சாமான்கள், உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் விற்று, அன்றாட பிழைப்பு நடத்தும் நிலைக்கு பெரும்பாலான ஆப்கானிஸ்தானியர்கள் தள்ளப்படுள்ளதாக தெரிவித்துள்ளது. உட்சபட்சமாக, வீட்டில் இருக்கும் பெண் குழந்தைகளை விற்பனை செய்து வந்த மக்கள், இப்போது இன்னும் ஒருபடி மேலே சென்று உடல் உறுப்புகளை விற்பனை செய்ய முன்வந்துள்ளனர். அதற்காக, ‘கிட்னி விற்பனைக்கு’ (Kidney for sale) என விளம்பரம் பதாகைகளை அடித்து தெருக்களில் தொங்கவிட்டுள்ளனர். 

நியூயார்க் டைம்ஸ் அறிக்கையின்படி, பல தசாப்தங்களாக பசி மற்றும் பட்டினி நெருக்கடியில் இருந்து வரும் ஆப்கானிஸ்தானில், இப்போது அவை மேலும் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இதில் அதிர்ச்சியூட்டும் தகவல் என்னவென்றால், குளிர்காலத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளை கொலை செய்ய ஆப்கானிஸ்தான் போராளிகள் குழுக்கள் முடிவெடுத்துள்ளதாகவும் கூறியுள்ளது. சர்வதேச உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் கணிப்பின்படி, இந்த குளிர்காலத்தில் 22.8 மில்லியன் அல்லது அதற்கும் மேற்பட்ட மக்கள் உணவுக்காக போராடும் நிலைக்கு தள்ளப்படுவார்கள் எனத் தெரிவித்துள்ளது. 8.7 மில்லியன் மக்கள் பட்டினி மற்றும் உணவுப் பஞ்சத்தில் சிக்குவார்கள் எனத் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், சர்வதேச நெருக்கடி குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆப்கானிஸ்தானுக்கு சர்வதேச சமூகம் பொருளாதார ஆதரவை அளிக்கவில்லை என்றால், கடந்த 20 ஆண்டுகளில் போராட்டத்தில் இறந்தவர்களைவிட, பசி மற்றும் பட்டினியால் அதிகமானோர் இறக்கக்கூடும் என எச்சரித்துள்ளது. கடந்த காலங்களில் குண்டுகளின் வெடிச்சத்தத்தையும், தோட்டாக்களின் பாய்ச்சலையும் கண்டு வந்த ஆப்கானிஸ்தான் மக்கள், ஒருவேளை உணவை தேடிக்கொள்ள வேண்டிய இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். நவீன பொருளாதார கட்டமைப்பை இயக்குவதற்கான தாலீபான்களின் இயலாமையே இதற்கு முக்கிய காரணமாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக