Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 20 ஜனவரி, 2022

கும்பகோணத்தில் தயாராகிறது பிபின் ராவத் ஐம்பொன் சிலை : டெல்லியில் நிறுவ திட்டம்

பிபின் ராவத் சிலை

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத்தின் மார்பளவு ஐம்பொன் சிலை கும்பகோணத்தில் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இந்த சிலையை டெல்லியில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் பிரதமர் மோடி தலைமையில் சமர்ப்பிக்க போவதாக முன்னாள் ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 8ஆம் தேதி நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருக்கும் வெலிங்கடன் ராணுவ பயிற்சிபள்ளியில், பயிற்சி பெற்றுவரும் அலுவலர்களிடையே உரை நிகழ்த்தும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஹெலிகாப்டரில் சென்ற போது, இலக்கை அடைய 10 நிமிடம் இருந்த நிலையில் அவர் சென்ற ஹெலிகாப்டர் திடீரென விபத்தில் சிக்கியது.

இந்த விபத்தில் இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 11 பேர் உயிரிழந்தனர். மேலும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு வெல்லிங்டன் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கேப்டன் வருண் சிங்கும் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

இந்நிலையில் உயிரிழந்த பிபின் ராவத்தின் வீரத்தை போற்றும் விதமாக முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் ஷைன் இந்தியன் சோல்ஜர்ஸ் சோசியல் வெல்பேர் பவுண்டேஷன் சார்பில் 120 கிலோ எடையில் அவரது மார்பளவு ஐம்பொன் சிலை தயாரித்து அதனை டெல்லியில் உள்ள ராணுவ போர் நினைவு சின்னத்தில் வைக்க முடிவு செய்தனர்.

அதன்படி கும்பகோணம் நாகேஸ்வரன் வீதியில் உள்ள சிற்பக் கூடத்தில் ஐம்பொன்னினால் ஆன பிபின் ராவத் சிலை தயார் செய்யும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அதன் முதற்கட்டமாக களிமண்ணில் அவரது உருவம் தத்துரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து தங்கம், வெள்ளி, செம்பு, இரும்பு, ஈய்ம் ஆகிய உலோகங்கள் அடங்கிய ஐம்பொன்களை காய்ச்சி செய்து வைக்கப்பட்டுள்ள பிபின்ராவத் களிமண் சிலை மீது ஊற்றி முழு உருவம் கொடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக