Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

திங்கள், 14 மார்ச், 2022

11 மாதங்களில் ரூ.1 கோடி அபராதம் வசூலித்த ரயில் டிக்கெட் பரிசோதகர்


கொரோனா பெருந்தொற்று காலத்தில் பெரும் இழப்புகளை ரயில்வே துறை சந்தித்தது. ஆனால், மத்திய ரயில்வே மண்டலத்தில் பணியாற்றும் ரயில் டிக்கெட் பரிசோதகர் மூலமாக குறிப்பிடத்தக்க பலனை ரயில்வே துறை அடைந்துள்ளது. ஆம், வெறும் 11 மாதங்களில் ரூ.1 கோடி அபராத தொகையை வசூல் செய்திருக்கிறார் இவர்.

மத்திய ரயில்வே மண்டலத்தில் டிக்கெட் பரிசோதகராக இருப்பவர் முகமது சாம்ஸ் சந்த். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரையிலும், ரயில்களில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்த பயணிகளிடம் இருந்து ரூ.1 கோடி அபராதத் தொகையை வசூல் செய்துள்ளார் இவர். கொரோனா காலத்திற்கு பிறகான ரயில் சேவைகளில், மிக அதிகமான அளவுக்கு அபராதம் வசூலித்திருப்பது இவர் ஒருவர்தான்.

ரயில்வே துறையில் உள்ள சிறப்பு பேட்ச் டிக்கெட் பரிசோதகர்களில் முகமது சாம்ஸ் சந்த் உறுப்பினராக உள்ளார். அதாவது தொலைதூர ரயில்கள் மற்றும் லோக்கல் ரயில்கள் என எதில் வேண்டுமானாலும் இந்த சிறப்பு பேட்ச் பரிசோதகர்கள் பரிசோதனை செய்வார்கள்.

எத்தனை பேரை மடக்கினார் முகம்மது

கடந்த 11 மாதத்தில் டிக்கெட் எடுக்காமல் பயணித்த 13,472 பயணிகளை மடக்கி பிடித்திருக்கிறார் இவர். அவர்களிடம் இருந்து மொத்தம் ரூ.1,06,42,105 என்ற அளவுக்கு அபராதம் வசூலித்திருக்கிறார். குறிப்பாக, டிக்கெட் எடுத்திருந்தாலும் கூட, அதற்குரிய பெட்டியில் பயணிக்காமல் வேறு பெட்டியில் பயணித்த பயணிகளிடம் இருந்தும் அபராதம் வசூலித்துள்ளார். நாளொன்றுக்கு சராசரியாக 12 மணி நேரம் முதல் 13 மணி நேரம் வரையிலும் பணிபுரிகிறார் அவர். குறிப்பாக, கொரோனா பெருந்தொற்று காலத்திலும், தமது கடமையை சிறப்புற செய்ய அவர் தயங்கவில்லை.

ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் பணிக்கு சேர்ந்தவர்

முகமது சாம்ஸ் சந்த், கடந்த 2000ஆவது ஆண்டில் விளையாட்டுத் துறையினருக்கான ஒதுக்கீட்டின் கீழ் வேலையில் சேர்ந்தார். ஹாக்கி விளையாட்டில் மிடில்ஃபீல்டராக விளையாடிய அவர், இந்திய ரயில்வே ஹாக்கி அணியில் 2012ஆம் ஆண்டு வரையில் நீடித்தார்.

விளையாட்டுப் போட்டி, என்பது டிக்கெட் பரிசோதகர் வேலை கிடைக்க எப்படி உதவியாக இருந்தது என்ற கேள்விக்கு, முகமது சாம்ஸ் சந்த் பதில் அளிக்கையில், “சந்தேகமே வேண்டாம். விளையாட்டு நமது ஸ்டெமினாவை அதிகரிக்கிறது. அதே ஸ்டெமினா தான், பயணிகளின் (டிக்கெட் எடுக்காதவர்கள்) எண்ண ஓட்டத்தை கண்டுபிடிக்க உதவுகிறது’’ என்றார் அவர்.

கொரோனா காலத்திலும் அசராத பணி

கொரோனா உச்ச கட்டத்தில் இருந்த சமயத்தில், தகுந்த பாதுகாப்போடு பணிக்கு சென்றார் முகம்மது சாம்ஸ் சந்த். இருப்பினும், நாள்தோறும் எண்ணற்ற பயணிகளை நேருக்கு, நேர் பார்ப்பதால் அவரது குடும்பத்தினர் அச்சம் கொண்டிருந்தனர். இதுமட்டுமல்லாமல், டிக்கெட் பரிசோதகர் எதிர்கொள்ளும் வேறு பல சவால்களையும் அவர் நினைவுகூர்ந்தார். டிக்கெட் எடுக்காத பயணிகள் சிலர், கையும், களவுமாக பிடிபடும் சமயத்தில் மிகுந்த ஆக்ரோஷத்துடன் நடந்து கொள்வார்கள் என்றார் அவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!