விழுப்புரம் மாவட்டம் பஞ்சவடி என்னும் ஊரில் அருள்மிகு ஜயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயர் திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?
புதுச்சேரியிலிருந்து திண்டிவனம் செல்லும் வழியில் சுமார் 10 கி.மீ தொலைவில் பஞ்சவடி என்னும் ஊரில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. விழுப்புரத்திலிருந்து இக்கோயிலுக்கு செல்ல பேருந்து வசதிகள் உள்ளன.
இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?
அருள்மிகு ஜயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயர் திருக்கோயிலில் உள்ள மூலவர் ஆஞ்சநேயர், நரசிம்மர், வராஹர், ஹயக்ரீவர், கருடர் ஆகிய ஐந்து முகங்களை கொண்டுள்ளார்.
36 அடி உயரத்திலுள்ள மூலவர் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இவருக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்வதற்கு பிரம்மாண்டமான லிப்ட் வசதி உள்ளது.
மூலவரான ஆஞ்சநேயருக்கு மேல் 118 அடி உயர கோபுரமும், அதன் மீது 5 அடி உயர கலசமும் அமைந்துள்ளது.
வேறென்ன சிறப்பு?
ராமாயண காலத்தில் கட்டப்பட்ட பாலத்திற்கு பயன்படுத்திய மிதக்கும் கல்லின் ஒரு பகுதி அதாவது, எட்டு கிலோ எடையுள்ள கல்லை தண்ணீர் நிறைந்த ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு பூக்களால் அலங்கரித்து இக்கோயிலில் தரிசனத்திற்கு வைக்கப்பட்டுள்ளது.
இத்திருக்கோயிலில் 1200 கிலோ எடையுள்ள மணி உள்ளது. இதனை ஒலிக்கச் செய்தால் குறைந்தது 8 கி.மீ தூரம் வரை மணியின் ஒலி கேட்கும்.
ஆஞ்சநேயர் சிவனின் அம்சம் என்பதற்கேற்ப இக்கோயிலில் லட்டு லிங்கம் செய்து பக்தர்களின் தரிசனத்திற்காக வைக்கப்பட்டது.
கோயிலில் நுழைந்தவுடன் வலது பக்கத்தில் விநாயகரும், இடது பக்கத்தில் ராமர், சீதை, லட்சுமணன், சத்ருகன், பரதன் ஆகியோரும் தனித்தனி சன்னதியில் காட்சியளிக்கின்றனர்.
என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?
அருள்மிகு ஜயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயர் திருக்கோயிலில் ஸ்ரீராம நவமி, அனுமன் ஜெயந்தி போன்ற திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றது.
எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?
இத்திருக்கோயிலில் ஆஞ்சநேயரின் அருளால் மன அமைதியும், சிறந்த கல்வியும், சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?
இத்திருக்கோயிலில் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடனை நிறைவேற்றலாம்.
அருள்தரும் ஆலயங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக