பீகாரில் உள்ள நாட்டின் மிகப்பெரிய தங்க வயலில் அகழாய்வுப் பணிகளை விரைவில் தொடங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.
தங்க சுரங்கம் என்றவுடன் பெரும்பாலானோருக்கு நினைவுக்கு வருவது கேஜிஎஃப்(KGF) தான். கர்நாடக மாநிலத்தில் செயல்பட்டு வந்த கோலார் தங்க வயல் இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் பழமையான தங்க வயல்களில் ஒன்று. பல டன் தங்கம் இங்கிருந்து வெட்டி எடுக்கப்பட்டது. கடந்த 2001ம் ஆண்டு கோலார் தங்க வயல் மூடப்பட்டது.
இந்நிலையில், அதை விட பெரிய தங்க வயல் ஒன்று பீகார் மாநிலத்தில் கண்டறியப்பட்டுள்ளது. பீகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் 37 ஆயிரத்து 600 கிலோ எடையுள்ள தங்க தாது உட்பட 222 மில்லியன் டன் தங்க வளம் புதைந்து கிடப்பதாக மத்திய சுரங்கத்துறை தெரிவித்துள்ளது.
இது நாட்டின் மொத்த தங்க இருப்பில் 44 சதவீதம் என்று மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்திருந்தார். இதையடுத்து, ஜமுய் மாவட்டத்தில் உள்ள தங்க வயலில் அகழாய்வு பணிகளை தொடங்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக மத்திய புவியியல் ஆய்வு மற்றும் தேசிய கனிம வளர்ச்சிக் கழகம் உள்ளிட்ட நிறுவனங்களுடன் மாநில சுரங்கம் மற்றும் புவியியல் துறை ஆலோசனை நடத்தி வருகிறது.
ஒரு மாதத்திற்குள் முதல்கட்ட ஆய்வுக்காக மத்திய நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக மாநில சுங்கத்துறை ஆணையர் பம்ஹ்ரா தெரிவித்துள்ளார். ஜமுய் மாவட்டத்தில் கடந்த 1982 ஆம் ஆண்டு முதல் 1991 ஆண்டு வரை நடத்தப்பட்ட ஆய்வில் இந்த பகுதியில் உள்ள தங்கத்தின் தரம் குறைவாக இருப்பதாக தெரியவந்தது
ஆயிரம் கிலோ தங்க தாதுவை பிரித்து எடுத்தால் வெறும் 17 கிராம் தங்கம் மட்டும் கிடைக்கும் என்றும் தெரியவந்தது.எனவே, தங்க வயலின் தற்போதைய நிலை குறித்து ஜாஜா, சோனோ போன்ற பகுதிகளில் முதல்கட்டமாக ஆய்வு நடத்த உள்ளதாக பம்ஹ்ரா தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக