ஜகந்நாதர் கருவறைத் திரை விலகும் நேரம் வந்துவிட்டது. அப்போது நாங்கள் கூடியிருந்த கூடம் மக்கள் திரளால் நிறைந்திருந்தது. காற்பெருவிரலை ஊன்றி நின்றால்தான் உள்ளே இருக்கும் திருவுருவைப் பார்க்க முடியும். அந்நேரத்தில் வாட்ட சாட்டமான ஓர் இளைஞன் அடியார்களை நெட்டித் தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தான். அவன் நுழைந்தபோது சிற்றுருவாய் நின்ற பெண்களையும் பாட்டாளிகளையும் முகம் பெயருமளவுக்கு முழங்கையால் ஊன்றிக் குத்திவிட்டான். "அடப்பாவி... இப்படிப் பண்றியே..." என்பதைப்போல் அந்தப் பெண்மணி அவனை ஏன் என்று கேட்க முனைய, அவன் தன் கையிலிருக்கும் கோலால் அவளை அடித்துவிடுவேன் என்பதைப்போல் ஒங்கினான்.
அவன் அந்தக் கோவிலின் காவல் பொறுப்பில் இருக்கும் ஒரு முரடன் என்பது பின்னால் தெரிந்தது.
அவ்வாறு கூட்டத்தை இறைந்து ஏசியபடி மூலவரை நோக்கி இருந்த ஒரு சிற்பத்தின் அருகில் உள்ள காசுத் தட்டுக்குக் காவலாகச் சென்று நின்றான். அந்தக் கோவிலுக்குள் அவன் காட்டிய அன்பின்மை இறையுணர்ச்சிக்கும் மக்கள் வழிபாட்டுணர்ச்சிக்கும் முற்றிலும் கேடானது. அவனைப் போன்றவர்களை அக்கோவிலுக்குள் எந்த அதிகாரத்தைக் கொடுத்துப் பணியமர்த்தினார்கள் என்று விளங்கவில்லை. அவ்வாறு முரட்டுத்தனமாய் நடந்துகொள்ளாவிட்டால் அங்கே திரளும் பெருங்கூட்டத்தை ஒன்றும் செய்ய முடியாது என்றும் சொன்னார்கள். எப்படியாயினும் அவன் நடந்துகொண்டது ஓர் இறைத்தலத்தின் செய்கையன்று.
முகத்தில் இடிபட்ட பெண்மணிக்கு அது கண்ணீர் திரட்டிய நிகழ்வாகியிருக்கும். அந்தச் சலசலப்பு ஓய்ந்து 'இவனெல்லாம் ஓர் ஆளா ?' என்பதைப்போல் எல்லாரும் மறந்துவிட்டனர்.
கருவறையின் திரை விலகியது. உள்ளே மூன்று திருவுருவங்கள். ஒப்பனையில் காட்சி தந்தன. ஜகந்நாதர், பலராமர், சுபத்திரை. எப்படிப் பார்த்தாலும் அவ்வுருக்கள் கதகளி நடனத்து முகங்களைப்போன்றே எனக்குத் தென்பட்டன. ஜகந்நாதரின் குறையுருக்கள் இஞ்ஞாலத்தில் வாழும் மாற்றுத் திறன்பட்டவர்களையும் ஒன்றெனப் போற்றி வணங்கற்பொருட்டுத் தோன்றி நிற்பவை என்ற விளக்கமும் உண்டு. முகப்பில் திருக்காட்சி கண்டவர்கள் மெல்ல அகன்றனர். நான் கூட்டத்தில் சற்றே முயன்று முன்னேறி முன்பக்கத்திற்கு வந்து ஜகந்நாதரைக் கண்டேன். உள்ளே பூசாரிகளின் நடமாட்டம் குறுக்கும் நெடுக்குமாய் இருந்தது. கோவில் பூசாரிகளும் கொஞ்சம் கரிய நிறத்தவர்களாகவே இருந்தனர். அடுத்த ஐந்து மணித்துளிகளில் கூடத்தில் இருந்த கூட்டம் தளரத் தொடங்கியது. வழிபட்டு முடித்தவர்கள் அடுத்தடுத்து வெளியேறினர். ஒப்பனைத் திருக்காட்சி காண்பதற்காக கூடிய முதற்கூட்டமாக இருக்க வேண்டும் அது. திருக்காட்சி கண்ட நிறைவோடு கோவிலை விட்டு வெளியேறினேன்.
வெளியே சுடர்ந்த சூரியன் இதமான வெப்பத்தால் காலைக் குளிரைப் போக்கியிருந்தான். ஆனால் கோவில் கல் நிழலில் அவ்வளாகம் முழுக்கவே குளிர் நிறைந்திருந்தது. ஜகந்நாதர் கோவிலின் முதன்மைக் கோபுரத்தை அருகே நின்று பார்த்தேன். கண்முன்னே வானளாவி எழுந்த ஒரு மலர் மொக்குபோல் தோன்றியது. அதன் சிவப்புக் கல்நிறத்திற்கு மனத்தைப் பற்றியிழுக்கும் ஈர்ப்புத் தன்மை இருக்கிறது. கோபுரக் கற்களில் எந்த வெற்றிடத்தையும் காண முடியவில்லை. சிற்பங்களையும் சிறு நுணுக்கச் செதுக்கங்களையும் கொண்ட அழகின் திரட்சி அது. கட்டித் தழுவுவதற்குக் கைகள் போதாவே என்று கழிவிரக்கம் கொள்ளத் தூண்டுகிறது. அக்கோபுரத்தின் அடித்தளம் முடிந்ததும் கருவறையின் பின்புறமாக மேற்குத் திக்கிலும் தெற்கு வடக்கிலும் சிலைகள் உள்ளன. கோபுரத்தின் மேலேறுவதைப்போல் அவற்றில் செங்குத்தாக ஏறினால் அங்குள்ள இறைவன் சிலைகளைக் காணலாம். ஆனால், எல்லாரும் ஏறிவிட முடியாது. மிகுந்த கவனத்தோடு அந்தச் செங்குத்துப் படிகளில் ஏறி, கோபுரத்தின் இடுப்பிலிருந்து கோவில்வளாகத்தைக் காண்பதைப்போன்ற காட்சியின்பத்தைப் பெற்றேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக