சமையற் பகுதியைத் தாண்டி உள்ளே நுழைந்ததும்தான் பூரி ஜகந்நாதர் கோவிலின் பெரும்பரப்பு விளங்கியது. கோவிலின் தளப்பகுதி வெளியிலுள்ள சாலைப் பகுதியைவிட இருபதடிகள் உயர்த்தி அமைக்கப்பட்டிருக்கிறது. அதனால் மேற்கே செல்ல செல்ல சற்றே உயர்கின்ற கல் தளம். கோவில் வளாகத்திற்குள் நமக்குரிய வழிபாட்டு உதவிகளைச் செய்து தருவதற்கு நூற்றுக்கணக்கானவர்கள் அங்கங்கே காணப்படுகின்றனர். அவர்களிடம் பேச்சு கொடுத்தால் நம்மை அப்படியே தூக்கிக்கொண்டுபோய் ஜகந்நாதரைக் வழிபட வைத்து, கோவிலின் ஒவ்வொரு பகுதியையும் சுற்றிக்காட்டி வணங்க வைத்து, வேண்டிய தொகையை வாங்கிக்கொள்வார்கள். எவ்வளவு கேட்பார்கள் என்று கேட்காதீர்கள். அதனால் அவர்களுடைய சேவையைக் கவனமாகத் தவிர்த்து நாமாகவே கோவிலின் ஒவ்வொரு பகுதியையும் பார்க்கத் தொடங்கினோம்.
முதலில் இருப்பது நாட்டிய மண்டடம். நாற்புறமும் மேற்குவிந்தவாறு ஏறும் முதற்கோபுரப் பகுதி அது. அதற்கு அடுத்ததாய் உள்ளது பக்தர்கள் வழிபடக் குழுமும் கூடம். ஒடியக் கோவில்களை எழுப்பப் பயன்பட்ட கற்கள் நம்மூர்க் கற்களைப்போன்ற கருங்கற்களாக இல்லை. எல்லாக் கற்களும் சிவப்பு கலந்ததைப்போல் இருக்கின்றன. அந்தச் சிவப்பு முழுக்கவும் இரும்புத் தாது என்று நினைக்கிறேன். இரும்புத் தாது மிகுந்த மண்வளத்தால்தான் அங்குள்ள கனிமச் சுரங்கங்கள் சமூகவியல் இடர்களாக மாறியிருக்கின்றன. கட்டுமானக் கற்களின் மேற்பகுதியின்மீது காலப்போக்கில் துருப்பிடித்து சிறு குமிழ்த் துளைகள் உருவாகின்றன. அம்மி கொத்தியதைப்போல் காணப்படும் அத்துளைகள் அக்கற்களுக்குப் புதிதான ஓர் அழகைத் தருகின்றன.
வழிபாட்டுக் கூடத்திற்குள் நுழைந்தபோது உள்ளே பெருந்திரள் நின்றுகொண்டிருந்தது. எதிரே ஜகந்நாதர் வீற்றிருக்கும் கருவறை திரையிடப்பட்டு மூடப்பட்டிருந்தது. நம்மூர்க் கோவில்களில் உள்ளதைப்போன்ற சிறிய திரையன்று. உத்தரத்தின் உயரத்தளவுக்கு இருக்கின்ற பெரிய திரை. கருவறைக்கு மேலேதான் மிகப்பெரிய கோபுரம் இருக்கின்றது. ஒடியப் பெருங்கோவில்களின் கருவறைகள் நன்கு அகன்ற பெரிய கருவறைகளாக உள்ளன. கருவறைக்கு வெளியே நாம் நிற்கும் வழிபாட்டுக் கூடம் அதற்குச் சற்றே பெரிது என்று சொல்லலாம். நாம் சென்று நிற்கும்போது நம்மைச் சுற்றி நின்றவர்கள் அம்மாநிலத்தின் எளிய மக்கள். திரை விலகியதும் திருவுருவைக் காண வேண்டுமென்று இறையுணர்வு மிகுந்து நின்றார்கள்.
கோவிலுக்குள் நுழைவதற்குக் கட்டணச் சிறப்பு நுழைவு ஏதும் இருந்ததாய் எனக்கு நினைவில்லை. என் நினைவு தவறாகவும் இருக்கலாம். அப்படி இருந்திருந்தால் கட்டண வழியில் நுழைந்தவர்கள் தனியணியில் உள்ளே வந்து சேர வேண்டும். அப்படி யாரும் வரவில்லை. எல்லாரும் ஒன்றாய்க் கூடி நின்றிருந்தோம். உள்ளே ஒரு கூடத்தில் எப்படிக் குழுமி நிற்போமோ அப்படித்தான் நின்றோம். உள்ளே இறைவற்குப் பதினோரு மணி வழிபாட்டுக்காக இறையொப்பனை நடந்துகொண்டிருந்தது. காத்திருக்க வேண்டும். அக்கூடத்தில் அந்நேரத்தில் சுமார் முந்நூற்றுக்கும் மேற்பட்டோர் நின்றிருப்போம். ஒருவரோடு ஒருவர் உரச நின்றாலும் எந்தச் சலிப்பும் ஏற்படவில்லை. ஆயிரமாண்டுகள் பழைமை மிக்க ஒரு கற்கூடத்தில் நின்றபடி தலையுயர்த்தி உத்தரத்தைப் பார்த்தேன். நம் தலைக்கு மேலே நாற்பதடி உயரத்தில் கற்கூரை அமைப்பு கூம்பிக் கூடியது. கோடானு கோடி மக்களுக்கு நிழல்கொடுத்த அந்தக் கூடத்தின் தண்ணிழல் நம்மைக் கைவிடுமா என்ன ? அத்தனை நெரிசலிலும் ஒரு சொட்டு வியர்க்கவில்லை. காத்திருப்பின் களைப்பு தோன்றவில்லை. நிற்பின் கால் வலிக்கவில்லை. நம்மை நெருக்குவோர்மீது மனம்கோணவில்லை. எனக்கு அந்த நிற்றல் அவ்வளவு பிடித்திருந்தது. இத்தனைக்கும் நான் கருவறைக்கு முதலாக நிற்காமல் பின்னால் ஒரு தூணருகே நின்றுகொண்டேன். என் முன்னால் உள்ள ஒவ்வொருவரையும் உவப்போடு நோக்கினேன். திரை விலகும் நேரம் வந்துவிட்டது. கூட்டத்தில் இனிய சலசலப்பு தோன்றியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக