ஜகந்நாதர் கோவிலின் கோபுரப் பேரழகைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம். அசையாத கற்றேரின் அமைப்பில் இருக்கும் அக்கோபுரத்தைப் பன்முறை செப்பனிட்டிருக்கிறார்கள். சிற்றசைவுகள் தாக்காதபடி அடிக்கடி கம்பித்தாங்கல்களைக் கட்டியிருக்கிறார்கள். கோவில் வளாகத்திற்குள்ளேயே எண்ணற்ற சிறு கோவில்கள் இருக்கின்றன. அவற்றில் பலவற்றில் பூசாரிகள் அமர்ந்திருக்கிறார்கள். நாம் வணங்கிச் செல்ல வேண்டும்.
கோபுரத்தைச் சுற்றிலும் ஓடியோடிக் கண்டதில் நேரம் போனதே தெரியவில்லை. இப்பூமியின் எவ்வொரு மதத்தின்பொருட்டும் மக்கள் ஓரிடத்தில் கூடுவதைக் கணக்கிட்டால் பூரிக்கோவில் தேரோட்டத்துக்குக் கூடும் கூட்டம்தான் தலையாயது என்கிறார்கள். அத்தகைய சிறப்பு வாய்ந்த கோவில் ஒன்றின் நட்டநடுப் புறத்தில் நின்றுகொண்டிருக்கிறேன். நம் இந்தியக் கோவில்களின் தனிப்பெரும் சிறப்பு அங்கே பெருந்திரளாய்க் கூடும் ஏழை எளிய மக்கள்தான். யார் கைவிட்டாலும் அவர்களுடைய ஒரே இறுதி நம்பிக்கை அவர்கள் வணங்கும் இறைவனே. அந்நம்பிக்கை பன்னூற்றாண்டுகளாய் வேர்பிடித்து விழுதுவிட்டு வளர்ந்திருக்கிறது. ஜகந்நாதர் கோவிலுக்குள் நான் கண்டவர்கள் அனைவரும் ஒடியா, வங்காளம், சத்தீசுகரம், ஜார்க்கண்ட், ஆந்திரம் ஆகிய மாநிலத்தின் குடிமக்கள். ஒடிய மாநிலத்தின் ஊர்ப்புறத்தினர்க்குப் பூரிக்கு வந்து செல்வது வாழ்க்கைக் கட்டாயம்.
கோவில் வளாகத்தின் கற்கோபுர நிழலில் சற்றே அமர்ந்தேன். பிற கோவில்களை எழுப்பிய பேரரசர்களின் மரபுவழித் தொடர்ச்சியினர் வரலாற்றில் காணாமல் போய்விட்ட நிலையில், பூரிக் கோவிலைக் கட்டியெழுப்பிய மன்னர்களின் வழித்தோன்றல்கள் இன்றும் சடங்குகளில் தங்களை ஈடுபடுத்திக்கொள்கிறார்கள். அவர்கள் இன்றைக்கும் இருக்கிறார்கள். உலகிலேயே ஒன்பது நூற்றாண்டுகளாக ஒரு கோவிலைப் புரந்து வழிபடும் வழித்தோன்றல்கள் இருப்பதும் இக்கோவிலுக்கு மட்டுமே வாய்த்த சிறப்புத்தான்.
இனி கோவிலைவிட்டுக் கிளம்ப வேண்டிய நேரம். எழுந்து மீண்டும் கோபுரத்தைச் சுற்றிப் பார்த்தேன். பின்னுள்ள சிறு கோவில்கள் அனைத்தையும் ஓடியோடிப் பார்த்துக்கொண்டேன். எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்தவனுக்கு இக்கோவில் தன் எழில் காத்து அருள்மயமாய் ஆண்டாண்டு காலமாய்க் காத்திருந்திருக்கிறது! இந்த வாய்ப்பைத்தான் அருள் என்று சொல்ல வேண்டும். இறையுணர்வு என்கின்ற தளத்திலிருந்தே இதைப் பார்க்க வேண்டியதில்லை, ஒரு வரலாற்றுணர்வு நமக்கிருந்தாலே இதனை எண்ணுங்கால் மெய் சிலிர்க்கும். அந்தப் பேருவகையோடு கோவிலை விட்டு வெளியேறத் தொடங்கினேன்.
நாம் நுழைந்த நேரம் மிகச்சரியாய் அமைந்ததால் ஓர் அளவுக்குட்பட்ட கூட்டத்தில் கோவிலுக்குள் நடமாட முடிந்தது. எல்லாச் சிறு கோவில்களையும் நாமே தனியராக வணங்கி நகர முடிந்தது. தள்ளு முள்ளுக்கு ஆளாகாமல் நலமாய் முடிந்தது. மதியமாகிவிட்ட இப்போது சுற்று வட்டார மக்கள் கூட்டம் திரண்டு வரத் தொடங்கிவிட்டது. நல்ல கூட்டம் வந்துகொண்டிருந்தது. வழிபட்டவர்கள் மகிழ்ந்து வெளியேறுவதுதான் புதியவர்களுக்கு இடம் கொடுப்பதாகும். எதிர்வரும் மக்கள் முகங்களைப் பார்த்தபடியே வெளியேறியபோது அடுக்களை மீண்டும் கண்ணில் பட்டது. இப்போது எரியும் அடுப்புகள் தணிக்கப்பட்டிருந்தன. அடுப்பில் வைத்திருந்த சட்டிகள் கரிச்சுவடுகளோடு கழுவப்படுவதற்காகக் காத்திருந்தன.
கோவிலைத் திரும்பிப் பார்த்தேன். உலகைச் சுற்றிவந்த பெருந்தேர் ஒன்று பொன்வெய்யிலில் நிறுத்தப்பட்டிருப்பதைப் போன்று தெரிந்தது. வெளியே வந்தபோது பூரி நகரத்தின் வண்டிகள் கோவில் முன்னே பரபரத்துப் பாய்ந்து கொண்டிருந்தன. அத்தேர் வீதியில் அடியார்களும் துறவிகளும் மாடுகளும் நெரிந்து திரியும் காட்சி. நாம் கைப்பேசியைக் கொடுத்துச் சென்ற கடையில் நமக்குரிய அடையாள அட்டையைக் காட்டியதும் பிசகின்றி எடுத்துத் தருகிறார். கைப்பேசியையும் நம் பையையும் பெற்றுக்கொண்டோம். வந்த வழியே அதே வீதியில் திரும்பிச் சென்றோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக